பயிற்சி பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டத்தில் இறங்கிய தமிழக மருத்துவர்கள்!
மேற்குவங்க பயிற்சி பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டத்தில் இறங்கிய தமிழக மருத்துவர்கள் ! மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் ஆகஸ்ட் 11, 2024 அன்று ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த கொலை சம்பவத்தை கண்டித்தும், உயிரிழந்த மருத்துவருக்காக நீதி கேட்டும் மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த 7 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக மேற்கு வங்கத்தின் மருத்துவத்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
அவசர சிகிச்சை பிரிவை தவிர வேறு எந்த பணியிலும் ஈடுபடமாட்டோம் என்று மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு செய்து வருகிறார்கள். இதற்கிடையில், இப்போராட்டம் காரணமாக அங்கு இதுவரை நோயாளிகளில் 3 பேர் வரை உயிரிழந்துள்ள செய்தியும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாட்டிலும் மருத்துவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். திருவண்ணாமலை, , சிவகங்கை மற்றும் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவக்கல்லூரி மாணவர்களும் மருத்துவர்களும் , மாவட்ட மருத்துவர்கள் சங்கம் மற்றும் தேசிய மருத்துவர் சங்கம் ஆகியவை ஒன்றிணைந்து இப்போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.
மாவட்ட மருத்துவக்கல்லூரி முன்பாக அணிதிரண்டு கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க கோரியும் இறந்த மாணவிக்கு நீதி வழங்க கோரிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளி நோயாளிகள் பிரிவு கட்டிடம் முன்பு, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
– கேஎம்ஜி