எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை !
காலப் பெட்டகம் : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 1952
1952 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (அப்போதைய மதராஸ் மாநிலத் தேர்தல்) சுதந்திரத்திற்குப் பிந்தைய முதல் தேர்தல். இதில் காங்கிரஸ் மிகப்பெரிய கட்சியாக வென்றாலும், பெரும்பான்மை கிடைக்காததால், சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) முதல்வராகப் பதவியேற்றார். இந்தத் தேர்தல், ஆந்திர மாநிலம் உருவானதற்கு முந்தைய மதராஸ் மாநிலத்தின் கடைசித் தேர்தலாகும். மேலும் திமுக போன்ற கட்சிகள் அப்போது தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1950ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 6 மற்றும் 9 இன் கீழ்க் குடியரசுத்தலைவரால் உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் (சென்னை) ஆணையின்படி, 1951ஆம் ஆண்டு, சென்னை சட்டமன்றம் தேர்தலின் மூலம் நிரப்பப்பட வேண்டிய 375 இடங்களைக் கொண்டிருந்தது. 309 தொகுதிகளிலும் 62 இரண்டு உறுப்பினர் தொகுதிகளிலும் ஒவ்வொன்றிலும் ஒரு இடம் பட்டியலிடப்பட்ட இனத்தினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும் நான்கு இரண்டு உறுப்பினர் தொகுதிகளிலும் ஒவ்வொன்றிலும் ஒரு இடம் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மூன்று இடங்கள் போட்டியிடப்படவில்லை. மீதமுள்ள 372 இடங்களுக்கு 1952 இல் தேர்தல்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் மைசூர் மாநிலங்களின் ஒரு பகுதி சென்னை மாநிலத்தில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
1952 – ஜனவரி 2 முதல் ஜனவரி 25 வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. எந்தக் கட்சிக்கும் 186 என்னும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கட்சிகள் வெற்றி பெற்ற எண்ணிக்கை விவரங்கள். (அடைப்புக்குறிக்குள் போட்டியிட்ட இடங்கள்)
இந்தியத் தேசியக் காங்கிரஸ் : 152 (367)
கம்யூனிஸ்ட் கட்சி (CPI) : 62 (131)
கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி : 35 (148)
சோகலிஸ்ட் கட்சி : 13 (163)
இந்தியக் குடியரசுக் கட்சி : 2 (37)
கிருஷிகர் லோக் பார்ட்டி : 15 (63)
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி : 2 (37)
காமன்வெல்த் கட்சி : 19 (37)
சென்னை மாநில முஸ்லிம் லீக் 5 (13)
நீதிக் கட்சி : 1 (9)
அகில இந்தியப் பார்வர்டு பிளாக் : 3 (6)
காங்கிரஸ் கட்சித் தலைவர் சி. ராஜகோபாலாச்சாரி, பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராகப் பொறுப்பேற்றார். 1952 சட்டமன்றத் தேர்தலில் இராஜாஜி எந்தத் தொகுதியிலும் போட்டியிடவில்லை. தமிழ்நாட்டில் அப்போது இருந்த மேல் – சபையில் உறுப்பினராக இருந்தார். அதன் மூலம் அவர் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
1949 இல் திமுக தொடங்கப்பட்டிருந்தாலும் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. காங்கிரஸ், சுதந்திரம் பெற்றதன் பிம்பத்தால் வெற்றி பெற்றது. ஆனால், தெலுங்கு பகுதிகளில் பின்னடைவைச் சந்தித்தது. பி. சுப்பராயன், ராம்நாத் கோயங்கா போன்ற காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியடைந்தனர்.
இந்தத் தேர்தல், தமிழ்நாட்டின் (மதராஸ் மாநிலம்) முதல் ஜனநாயகத் தேர்தல் மற்றும் பல அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டது, 1954 இல் முதல்வர் பொறுப்பிலிருந்து இராஜாஜி ‘குலக்கல்வித் திட்டம்’ என்ற ஒன்றை அறிவித்தார். இதைத் தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். இராஜாஜி பதவி விலகப் பின்னர்க் காமராஜர் முதல்வரானதற்கு வழிவகுத்தது.
சி. ராஜகோபாலாச்சாரி, ஏபி ஷெட்டி, சி. சுப்பிரமணியம், கே. வெங்கடசாமி நாயுடு, என். ரங்கா ரெட்டி, எம்.வி. கிருஷ்ணா ராவ், வி.சி.பழனிசாமி கவுண்டர், யு. கிருஷ்ணா ராவ், ஆர். நாகனா கவுடா, என். சங்கர ரெட்டி, எம்.ஏ. மாணிக்கவேலு நாயக்கர், கே.பி. குட்டிகிருஷ்ணன் நாயர், ராஜா ஸ்ரீ சண்முக ராஜேஸ்வரச் சேதுபதி, எஸ்.பி.பி. பட்டாபிராம ராவ், டி. சஞ்சீவய்யா ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர்.
ஆந்திர மாநிலம் – அமைச்சர்கள் பதவி விலகல்
பெல்லாரி மற்றும் ஆந்திரா தொகுதிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் (நாகன்னா கவுடா, சங்கர ரெட்டி, பட்டாபிராம ராவ், சஞ்சீவய்யா மற்றும் ரங்கா ரெட்டி) ஆந்திர மாநிலம் பிரிந்து தனி மாநிலம் உருவாவதற்கு ஒரு நாள் முன்பு செப்டம்பர் 30, 1953 அன்று பதவி விலகினர். இராஜாஜி பதவி விலகிய பின் காமராஜர் முதல் அமைச்சர் பொறுப்பை 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் ஏற்றுக்கொண்டார்.
காமராஜர் தலைமையில் அமைந்த புதிய அமைச்சரவையில், ஏபி ஷெட்டி, எம். பக்தவத்சலம், சி. சுப்பிரமணியம், எம்.ஏ. மாணிக்கவேலு நாயக்கர், ராஜா ஸ்ரீ சண்முக ராஜேஸ்வர சேதுபதி, பி. பரமேஸ்வரன், எஸ்.எஸ். ராமசாமி படையாச்சி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தைத் தொடர்ந்து, ஏ.பி. ஷெட்டி மார்ச் 1, 1956 அன்று அமைச்சரவையிலிருந்து விலகினார்.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.