எங்க அப்பா சேர்த்து வச்ச சொத்து … மனம் திறக்கும் வணிகர் சங்கம் வெள்ளையன் மகன் !
எங்க அப்பா சேர்த்து வச்ச சொத்து… | மனம் திறக்கும் வணிகர் சங்கம் வெள்ளையன் மகன் !
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் முன்னாள் தலைவர் மறைந்த த.வெள்ளையன், தமிழகத்திற்கு நல்ல பரிட்சயமான நபர். கம்பீரமான மீசையும் மிடுக்கான வெள்ளுடையும்தான் அவரது அடையாளம். வாட் வரிவிதிப்பு தொடங்கி ஜி.எஸ்.டி. வரையில், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு வரையில் வணிகர்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்காக காத்திரமான போராட்டங்களை முன்னெடுத்தவர். தமது சங்கத்தை சேர்ந்த வியாபாரிகள் கோக் – பெப்சிகளை விற்க மாட்டார்கள் என அறிவிக்கும் அளவுக்கு நெஞ்சுரம் கொண்ட சுதேசி நாயகனாக திகழ்ந்தவர்.
வணிகர் சங்க நிர்வாகி என்ற வரம்புகளை கடந்து, பொதுவில் தமிழக மக்களின் நலனுக்கான, ஈழத்தமிழர்களின் உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பது போன்ற பல தனிச்சிறப்புகளுக்கு உரித்தானவர், த.வெள்ளையன்.

அவரது மறைவுக்குப்பிறகு, த.வெள்ளையன் முன்னெடுத்த நற்காரியங்களை அவரது வழியொற்றி சங்கத்தை வழிநடத்தி வருகிறார், அவரது மூத்தமகன் டைமண்ட்ராஜா.
நவம்பர் -09 அன்று திருச்சியில் நடைபெற்ற வணிகர் சங்கங்களின் பேரவையின் பொதுக்குழுவில் பங்கேற்ற நிலையில், அங்குசம் சார்பில் அவருடன் கலந்துரையாடினோம்.
* அப்பாவின் மறைவுக்குப் பிறகு உங்களுக்கும் வணிகர்கள் ஆதரவை வழங்கியிருக்கிறார்களா?
அவர் மறைவுக்குப் பிறகு நிறைய துரோகங்களை எதிர்கொண்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் கடந்து இப்போது, அப்பா கூட பயணிச்ச அமைப்பாளர் பாலகிருஷ்ணன் முன்னாள் பொதுச்செயலாளர் அவை தலைவர் கே. தேவராஜ், கிச்சா ரமேஷ், ஹரிகிருஷ்ணன் போன்றோர்கள் மாநில நிர்வாகிகளாக இருக்காங்க. அவங்களோட ஆதரவுடன் சங்கத்தை வழிநடத்தி வருகிறேன்.

* அப்பாவுக்கு அடுத்து நீங்கள் தலைவர் பொறுப்புக்கு வந்திருக்கிறீர்கள். உங்களது குடும்பத்தில் ஆதரவு எப்படி இருக்கிறது. ?
நாங்க மொத்தம் 5 பேர். இரண்டு பெண் பிள்ளைகள். 3 பசங்க. என்ன தவிர மத்தவங்க எல்லாம் நல்லா செட்டில் ஆயிட்டாங்க. அப்பாவுடன் 35 வருடம் பயணம் செய்திருக்கிறேன். என் உடன் பிறந்தவர்களுக்கு இந்த சங்கத்தில் எந்த ஈடுபாடும் கிடையாது. எல்லோரும் அவரவர்களது வணிகத்தை கவனித்து வருகிறார்கள். அப்பாவின் சங்க வாழ்க்கையே அவங்களுக்கு தெரியாது. அப்பாவின் கஷ்டங்களை அனுபவ ரீதியா சொல்லக்கூடிய நிலையில் நான்தான் இருக்கிறேன்.
* வணிகர் சங்கத்தலைவராக அப்பாவின் கடந்த காலத்தை எப்படி பார்க்கிறீர்கள் ?
ஆரம்ப காலத்துல பெரம்பூர்ல அப்பா வியாபாரம் செய்துட்டு இருந்தாங்க. முதல்ல பழைய இரும்பு வியாபாரம் பார்த்தாங்க. அடுத்து இளநீர் வியாபாரம் செய்தாங்க. ஒத்தை ஆளாகத்தான் யானைக்கவுனியில இருந்து பெரம்பூர் வரைக்கும் அந்த மேட்டுல டிரை சைக்கிள் வண்டிய ஓட்டி வருவாரு. அந்த ஏரியாவுல ரவுடிங்க பிரச்சினை அடிக்கடி வரும். வியாபாரிகள்ட்ட பிரச்சினை பன்னுவாங்க. அப்பாதான் எல்லாத்துக்கும் முன்னாடி நிப்பாரு. பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்ல இருந்தாங்க. அதனால, வியாபாரிக்கு எந்த பிரச்சினைனாலும் அப்பாவதான் கூப்பிடுவாங்க. அந்த வகையில்தான் பெரம்பூர் வட்டார வியாபாரிகள் சங்கத்துக்கு செயலாளரா உள்ளே வந்தாரு. அப்புறம் தலைவர் ஆனாரு. சென்னை, சென்னை – புறநகர் வணிகர் சங்கம்னு இருந்தது. அந்த அமைப்பின் போராட்டக்குழு தலைவரா பொறுப்புக்கு வந்தாரு. அடிமட்டத்தில இருந்து வந்தவர்.
* அப்பா உயிரோட இருந்த காலத்தில் நீங்கள் ஏன் எந்தப் பொறுப்புக்கும் வரவில்லை?
சங்கத்தோட நல்லது கெட்டதுக்கு என்னை கூடவே வச்சிக்கிட்டாங்களே ஒழிய, சங்கத்துல பொறுப்பு கொடுக்கனும்னு நினைக்கல. அப்பா தீவிர காமராஜர் பக்தர். சிவாஜி கணேசன் ரசிகர். பெரம்பூர் சிவாஜி ரசிகர் மன்றத் தலைவராகவும் இருந்தாரு. வெள்ளையன் வாரிசை கொண்டு வந்துட்டாரு, வாரிசு அரசியல் பன்றாருன்னு யாரும் சொல்லிட கூடாதுன்னு தெளிவா இருந்தாரு.

சங்கத்துல என்னோட நடவடிக்கைகளை பார்த்து, நிர்வாகிகள் கேட்டிருக்காங்க. தம்பிக்கு ஏதாவது பொறுப்பு கொடுக்கலாமேனு. அப்பாவுக்கு மகனா அவரு தன்னோட கடமைய செய்றாரு அவ்வளவுதான்னு சொல்லிட்டாரு.
2010 – இல் சங்கம் இரண்டா பிளவுபட்ட சமயத்துல, திருச்சியிலதான் மாநில மாநாடு அறிவிச்சாங்க. நினைச்ச மாதிரி மாநாட்டு வேலைகள் நடக்கல. அப்பா, என்கிட்டத்தான் அந்த பொறுப்பை ஒப்படைச்சாரு. நானும் இரவுபகல் பாராமல் கடுமையா உழைச்சி அந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினோம். அதுபோல, வணிகர் சங்கத்தினரின் எந்த ஒரு பிரச்சினை என்றாலும், அப்பா என்னைத்தான் அனுப்பி வைப்பார். யாரை எப்படி அணுகனும் யார்கிட்ட எப்படி பேசனும்னு அவர் கூட இருந்து கத்துக்கிட்டதை நான் செய்தேன். அதனாலதான் என்னை அனுப்புவாரு.
கடைசி காலத்தில், அப்பா என்னிடமும் உடன் இருந்த நிர்வாகிகளிடமும் சொன்னது இதுதான். “இந்த அமைப்புக்கும் எதுவும் சேர்த்து வைக்கல . உனக்கும் நான் எதுவும் செய்யவும் இல்லை. மற்ற எல்லோரையும் படிக்க வச்சேன். உன்னை என் கூடவே 35 வருஷம் இந்த அமைப்புக்காக வச்சிக்கிட்டேன்.”னு ரொம்பவே ஃபீல் பன்னினார். அவரோட ஆசைப்படிதான் இப்போ பொறுப்புக்கு வந்திருக்கேன்.
* சங்கத்துல பணமே இல்லைனு சொன்னீங்க. செலவுகளை எப்படி சமாளிக்கிறீங்க? சொந்த காசை போட்டு சங்கம் நடத்துற அளவுக்கு சொத்து வச்சிருக்கீங்களா?
எனக்கு சொந்தமாக கார் கூட கிடையாது. நான் போட்டிருக்க வாட்ச் கூட நண்பர் ஒருவர் அன்பளிப்பா தந்ததுதான். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையை பொறுத்தவரையில் கோடான கோடி மக்கள் இருக்காங்களே தவிர, சங்கத்துக்குன்னு ஒரு பைசா பணம் கிடையாது. அதனாலதான், த.வெள்ளையன் பேரில் தனியாக அறக்கட்டளை ஒன்றை தொடங்கப்போகிறோம். எதிர்வரும் மே மாதத்திற்குள் ஒரு இலட்சம் வணிகர்களை ஒருங்கிணைக்கப்போகிறோம். அறக்கட்டளை வழியாக, நலிந்த வணிகர்களுக்கு நல உதவி திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம்.
அவர் சேர்த்து வச்ச சொத்தே இந்த அமைப்புதான். இந்த அமைப்பும் இன்னொருத்தர் கையில போயிடுச்சுன்னா அவர் வாழ்ந்ததுக்கான அர்த்தமும் கிடையாது. மொத்தமா வெள்ளையனுடைய சரித்திரத்தையே வித்துருவாங்க. அதனாலதான் அவருடைய வாரிசா நான் களத்தில நிற்கிறேன்.
— வே.தினகரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.