ஆந்திரா வரை சென்று கஞ்சா கடத்தல் கும்பலை அள்ளிப்போட்டு வந்த தமிழக போலீசார் !
ஆந்திரா வரை சென்று கஞ்சா கடத்தல் கும்பலை அள்ளிப்போட்டு வந்த தேனி போலீசார் ! தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு தலைவலி கொடுத்துக் கொண்டிருக்கும் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பயன்பாடு. என்னதான் கடுமையான சட்டங்களைப்போட்டு, கெடுபிடிகளை தீவிரப்படுத்தினாலும், ஏதோ ஒரு பொந்துக்குள் புகுந்து போதைப்பொருட்களை கொண்டுவந்து சேர்த்துவிடுவதில் கில்லாடிகள் பலர் இருக்கிறார்கள்.
தேனி மாவட்ட போலீசார் கஞ்சா கடத்தல் கும்பல் ஒன்றை தேனியிலிருந்து ஆந்திரா வரை சென்று குற்றவாளிகளை அள்ளிப்போட்டு கொண்டு வந்திருக்கிறார்கள்.
சமீபத்தில் தேனியில் கஞ்சா விற்பணையில் ஈடுபட்டதாக, நிரஞ்சன, சரவணக்குமார் மகாலட்சுமி, ஈஸ்வரி ஆகிய நான்கு பேர் 21.6 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டார்கள். இவர்களுக்கு எங்கிருந்து கஞ்சா சப்ளை ஆகிறது? யார் உதவியுடன் எங்கு எங்கெல்லாம் சில்லரை விற்பணையில் ஈடுபடுகிறார்கள்? என்பதை தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தார் எஸ்.பி. சிவபிரசாத்.
இதன்படி, சார்பு ஆய்வாளர் கதிரேசன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை, மேற்படி கும்பல் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை தொடர்ந்து கடத்தி வந்திருப்பதை கண்டறிந்தது.
எஸ்.பி. சிவபிரசாத் உத்தரவின்படி, ஆந்திராவுக்கு விரைந்த தனிப்படை போலீசார் விஜயநகரத்தில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்து, உள்ளூர் போலீசின் உதவியுடன் கஞ்சா மொத்த வியாபாரிகளான சிவக்குமார், மல்லேஸ்வர்ராவ், விஜயபாபு ஆகிய மூவரை கைது செய்து தமிழகத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள். இவர்களிடமிருந்து 23 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஒன்றையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி. சிவபிரசாத், “குறைவான அளவுகளில் கைதாகும் குற்றவாளிகள் எளிதில் தப்பித்துவிடுகின்றனர். ஜாமினில் வெளியே வந்து மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபடுகின்றனர். ஆகவே, அவர்கள் எளிதில் தப்பிக்க முடியாதபடி தகுந்த சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்கிறோம்.
குற்ற செயலில் ஈடுபடும் 18 வயதுக்கு கீழான சிறார்களும்கூட தண்டனையிலிருந்து தப்பித்து விடாதபடி கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்து வருகிறோம். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பயன்பாட்டை தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறோம்.
மிக முக்கியமாக, கைது செய்யப்படும் மொத்த வியாபாரிகளிடம் யாரிடமெல்லாம் விற்பணைக்கு கொடுக்கிறார்கள் என்பதையும்; சில்லறை விற்பணையில் ஈடுபட்டு கைதாபவர்களிடம் யாரிடமிருந்து வாங்குகிறார்கள் என்பதையும் தீவிரமாக விசாரித்து வருகிறோம். தற்போது ஆந்திராவில் கைதானவர்கள், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சேத்தூர் சிறுவியாபாரிகளுக்கு விற்க திட்டமிட்டிருந்ததையும் விசாரணையில் கண்டறிந்திருக்கிறோம். ” என்கிறார்.
இரண்டு மாதங்களில் மூன்று அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் தேனி மாவட்ட போலீசார், இதுவரை 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். 7 பேரில் வங்கிக்கணக்குகளையும் முடக்கியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம்விட, ஆந்திரா வரையில் விடாது துரத்தி சென்று குற்றவாளிகளை கைது செய்து சபாஷ் வாங்கியிருக்கிறார், எஸ்.பி. சிவபிரசாத்.
ஜெய்ஸ்ரீராம்.