கீழடி நாகரித்தை உயர்த்திப்பிடி ! தேவ நாகரித்தைத் துரத்தியடி ! – தமிழ்மக்கள் இசைவிழா !
தஞ்சாவூர் திலகர் திடலில் ஆகஸ்ட் 22 ஆம் நாள் காலை 10 மணி முதல் இரவு 10 வரை மக்கள் கலை இலக்கியக் கழகம் தமிழ்மக்கள் இசைவிழாவை நடத்தியது. மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் கோவன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பு செய்தார். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கொடியை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தோழர் அ.முகுந்தன் ஏற்றி வைத்தார். ஓவியக் கண்காட்சியை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் தோழர் லோகநாதன் திறந்து வைத்தார்.
ஆய்வரங்கத்தின் முதல் அமர்வுக்கு தோழர் எழில்மாறன் தலைமை தாங்கினார். இந்திய வரலாற்றை வடநாட்டிலிருந்து எழுதிய மோசடிகளின் பின்னணி குறித்து சென்னை மாநிலக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் வெ.மாரப்பன் உரையாற்றினார்.

ஆய்வரங்கத்தின் 2 ஆம் அமர்வு மதுரை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செங்கொடி தலைமையில் தொடங்கியது. தமிழக மக்கள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன், “கீழடி நாகரிகத்தின் அறிக்கையை வெளியிட மறுப்பதன் மூலம், இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் உணர்வுகளைச் சிதைக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது” என்றார்.
புதிய குரல் நிறுவனர் தோழர் ஓவியா, “பெரியார் பார்வையில் அழுகி நாறும் வேத நாகரிகம் குறித்து பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து உரையாற்றினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க மாநில செயலாளர் தோழர் களப்பிரன், “இந்திய வரலாறு தெற்கு திசையிலிருந்துதான் எழுதப்படவேண்டும். வேத நாகரிகம் பிறப்பில் ஏற்றத்தாழ்வை இன்றும் கற்பித்துக் கொண்டிருக்கின்றது” என்றார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் வேலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் தமிழ்மணி, “கீழடி நாகரிக உண்மையும் மார்க்சிய வரலாற்று வழிகாட்டலும்” என்னும் தலைப்பில், உரையாற்றினார்.
மாலை நிகழ்வுக்கு தோழர் கோவன் தலைமை தாங்கினார். தோழர்கள் செழியன், அம்பேத்கர், இல.பழனி, அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தமிழ்நாடு – புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் தோழர இராஜூ, திரைப்பட இயக்குநர் தோழர் இராஜு, கவிஞர் மகாலெட்சுமி மற்றும் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ஆகியோர் உரையாற்றினர்.
அறிஞர் அமர்நாத் உரையாற்றும்போது, “நான் அரசு ஊதியம் வாங்கும் ஒரு தொல்லியல் ஆய்வாளர். நான் கண்டுபிடித்த உண்மையை மறைத்து எழுதினால், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் கொடுக்கும் இரத்தம் சிந்தி உழைத்து கொடுத்த வரிபணம்தான் என் ஊதியம். அந்த உழைக்கும் மக்களுக்கு நான் ஒருபோது பொய்யான அறிக்கை எழுதி துரோகம் செய்யமாட்டேன்” என்று முத்தாய்ப்பாய் கூறினார்.
தொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சியில், ரெட்டிபாளையம் ரங்கராஜன் தப்பாட்டக் குழு, புதுவை பூபாளம் கலைக்குழு, ராப் சாங் கலைக்குழு, தெலுங்கனா அருணோதயா கலைக்குழு, ஸ்ரீலட்சுமி நாராயசாமி நாடக சபாவின் தெருக்கூத்து, இசைச் சமர் பறையிசைக் குழு, மாற்று ஊடக மையம் மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நிகழ்வின் நிறைவில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் இராவணன் நன்றியுரையாற்றினார்.
தஞ்சையிலிருந்து ஆதவன்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.