மனிதர்கள் மிகவும் விலகிப் போய்க்கொண்டிருக்கிறார்கள் …
மனிதர்கள்
மிகவும் விலகிப் போய்க்கொண்டிருக்கிறார்கள்..
தீவுகளாகிவிட்ட கண்டங்கள்..
மேலும்
தீவுத் திட்டுகளாய் மாறிக் கொண்டிருக்கின்றன..
தொடர்பு சாதனங்கள்
மனிதர்களை
தொடர்பு எல்லைக்கு அப்பாலேயே வைத்திருக்கின்றன..
நம்மை நாமே
பிரித்துக் கொள்ள
அடையாளங்களை
அதிகார வர்க்கங்கள்
முன்னிலைப்படுத்துகின்றன..
ஒரு கொள்கையால்
பயனடைந்து
வாழ்வு பெற்றவர்களின்
அடுத்த தலைமுறை
அதே கொள்கையை
ஆராயாமல் எதிர்க்கிறது..
வேற்று கட்சி
நண்பர்கள்
வேற்றுக் கட்சிக்காரர்களாகவே ஆகிவிட்டனர்..
இருப்பினும்..
அன்பும் அறனும் உடைத்த
யாரேனும்
இவற்றையெல்லாம்
சரி செய்யக்கூடும்..
ஒருவேளை.
— எல்.ராய்