நம் மாநில விலங்கு தெரியுமா ? அதற்கான நாள் இன்று (அக்டோபர் 7)
இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்றால், தமிழ் நாட்டின் மாநில விலங்கு வரையாடு. மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் nilgiri tahr எனப்படும் இந்த வரையாடுகள் வாழ்கின்றன. அழிந்து வரும் இனங்களில் ஒன்று என்று அறியப்பட்ட வரையாடுகளை பாதுகாப்பதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு அக்டோபர் ஏழாம் நாள் வரையாடுகள் தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சோலைக் காடுகள் எனும் புல்வெளிகள் தென்மேற்கு பருவத்தில் பொழியும் மழையின் நீரை உள்வாங்கி பாதுகாத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. மழை இல்லாத கோடை காலத்தில் உடம்பிலிருந்து வியர்வை வெளிப்படுவது போல சோலை காடுகளில் இருந்து அந்த தண்ணீர் வெளியாகும். அதனால் மலையில் இருந்து உற்பத்தியாகும் ஆறுகளில் நீரோட்டம் எப்போதும் இருக்கும். காவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டு ஆறுகளுக்கு சோலைக் காடுகள் தண்ணீரை தாய்ப்பாலாக கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
Bio diversity எனப்படும் பல்லுயிர்ச் சூழல் பாதுகாப்பில் இந்த சோலைக் காடுகள் முக்கிய பங்காற்றுவதால் யானைகள் முதல் வண்ணத்துப்பூச்சிகள் வரையிலான பல்வேறு உயிரினங்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் வாழ்ந்து வருகின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலையின் செங்குத்தானப் பகுதிகளில் அமைந்துள்ள இந்த சோலைக் காடுகளில் உள்ள புல்வெளிகள்தான் மாநிலத்தின் விலங்கான வரையாடுகளுக்கு வாழ்விடமும் உணவும் ஆகும்.
வரையாடுகளின் எண்ணிக்கையையும் அவை அழிந்து வருவதையும் ஆய்வு செய்து வெளியிட்டவரான வனவிலங்கு ஆர்வலர் டாக்டர் டேவிடார் பிறந்த நாளே வரையாடுகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
வரையாடுகளை பாதுகாப்பதற்கான திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்தது. முதலமைச்சர் தலைமையிலான சூழலியல் பாதுகாப்புக்குழு இதனை முன்னெடுத்துள்ள நிலையில் வரையாடுகளுக்கான வாழ்விடத்தை மேம்படுத்துவது என்ற அடிப்படையில் சோலைக் காடுகள் பாதுகாக்கப்பட்டால் வரையாடுகளின் எண்ணிக்கை பெருகுவதுடன் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கைத் தன்மையும் பாதுகாக்கப்படும். அங்கு வாழ்கின்ற உயிரினங்கள் மற்றும் தாவரங்களின் எண்ணிக்கை பெருகும்.
சோலைக்காடுகள் பாதுகாக்கப்பட்டால் மழை நீர் சேமிக்கப்பட்டு ஆறுகளில் தண்ணீர் வரத்தும் அதிகமாகும். மலைப்பகுதியான குறிஞ்சி நிலம் முதல் கடல் சார்ந்த நெய்தல் நிலமான கடைமடை வரை தமிழ்நாட்டின் இயற்கை வளம் செழிக்கும்.
வரப்புயர.. என்று மன்னனை வாழ்த்தினார் அவ்வையார். வரையாடு உயர.. என்று மாநில அரசு முன்னெடுத்திருக்கும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் போது தமிழ்நாட்டின் காட்டு வளம், நீர் வளம் பெருகி இயற்கை அரண் பாதுகாக்கப்படும்
– கட்டுரை
கோவி.லெனின்