திருப்பத்தூரில் விஜயநகரப் பேரரசு நடுகல்கள் கண்டெடுப்பு !

நம் முன்னோர்களின் வீர வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்நடுகல்லின் அருமை தெரியாமல் போர் மறவர் நடுகல் சிதைத்து வீசப்பட்டுள்ளது நெஞ்சைப் பதறச் செய்தது ...

0

திருப்பத்தூரில் விஜயநகரப் பேரரசு நடுகல்கள் கண்டெடுப்பு !

தொன்மையான தமிழ்நாட்டில் அதிக நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டு வரும் மாவட்டங்களில் திருப்பத்தூர்  உள்ளிட்ட வட மாவட்டங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.

https://businesstrichy.com/the-royal-mahal/

போர்க்களத்தில் வீரம் காட்டிப் போர் செய்து வீரமரணம் அடைந்தவர்கட்குச் சமுதாயத்தில் மிக நல்ல மரியாதை இருந்தது. அவர்களைப் புதைத்த இடத்தை மேடாக்கிக் கல்வட்டம் அமைத்து அவ்விடத்தில் நீண்டு உயர்ந்த கல் ஒன்றை நடுவர். அது நெடுங்கல் அல்லது நெடுநிலை நடுகல் எனப்படும். அக்கல்லில் அவ்வீரன் பெயரையும், அவன் பெருமைகளையும் கல்வெட்டாகப் பொறிப்பர். அதற்கு மாலைசூட்டி, ஆட்டுக் கிடாயைப் பலிகொடுத்து, கள் படைத்து வழிபடுவர். அப்படிப்பட்ட நடுக்கல்கள்  திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கிடைக்கப்பெற்று வருகிறது. சமீபத்தில்  கிடைக்கப்பட்ட இரண்டு நடுகல்களை காண திருப்பத்தூர் மாவட்டத் தொன்மை பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளரும்  தமிழ்த்துறை இணை பேராசிரியருமான பிரபு அவர்கள் அழைப்பின் பேரில் நடுகல்கள் அமைந்திருக்கும் பகுதிகளுக்கு செய்தி சேகரிக்க பயணம் ஆனோம்.

“திருப்பத்தூரில் இருந்து சுமார்  15 கி.மீ தொலைவில் உள்ளது கும்மிடிகாம்பட்டி அடுத்த ‘கரக பூசாரிவட்டம்’ என்ற பகுதியில் தனி நபருக்கு சொந்தமான மாந்தோப்பின் நடுவே  கிபி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘புலிக்குத்திப் பட்டான் கல்’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சிற்பத்தினையும் ,  கிபி. 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் மறவர் நடுகல்களை பிரபு  குழுக்களால் கண்டறியப்பட்டது  இவை இரண்டுமே விஜயநகரப் பேரரசு காலத்தனை சார்ந்தவையாகும்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

1 ‘புலிக்குத்திப் பட்டான் நடுகல்”

மனிதன் காடுகளை ஒட்டிய கிராமங்களில் வாழ்ந்தபோது, அவனையும் அவன் வளர்க்கும் கால்நடைகளையும் புலிகள் தாக்கிக் கொன்று வந்தன. அத்தகைய கிராமங்களில் வசிக்கும் இளைஞன் ஒருவன் புலி வேட்டைக்குச் சென்று அந்தப் புலியைக் கொன்று தானும் வீர மரணம் அடைந்திருப்பான். அந்த இளைஞனின் வீரத்தைப் போற்றி வைக்கப்பட்ட நடுகற்களே புலிக் குத்தி நடுகல் என அழைக்கப்படுகிறது.

கல் கூறும் சேதி

600 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கல்லில் வலிமையான புலியுடன் மோதும் வீரனின் உருவம் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது.  முன்னங்கால்களைத் தூக்கியபடி வாயைப் பிழந்த நிலையில் வீரனை  தாக்க வரும் புலி உருவம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தன்னைத் தாக்கப் பாய்ந்து வரும் புலியின் வாயில் தன் இடது கையால் ‘கட்டாரி’ என்ற குத்துக் கருவியைக் கொண்டு குத்திய நிலையில்,   வலது கையில் பெரிய வாளினை ஏந்தித் தாக்க முற்படும் நிலையிலும் செதுக்கப்பட்டுள்ளது. அவ்வீரனின் நீண்ட காதுகளில் குண்டலமும், கழுத்தில் சரப்பளி என்ற இரண்டடுக்கு கழுத்தணி ஆபரணமும் காணப்படுகின்றது. கைகளின் மணிக்கட்டுகள் மற்றும் புஜங்களில் காப்பினையும், கால்களில் கழலும் அணிந்துள்ளார். இடுப்பில் அழகான   உடைவாள் மற்றும் கச்சம்  கட்டி ஆடையினை அணிந்துள்ளார். புலியுடன் மோதும் வீரன் என்பதால் அவனது வலிமைமையை விளக்கும் விதத்தில் வீரனின் உருவம் முறுக்கு மீசையுடன் கம்பீரமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்

வீரனுக்கு அருகில் சிறிய அளவில் அவரது மனைவியின் உருவம் காணப்படுகின்றது. அதில் வலது கையில் கள் குடுவையும் இடது கையினை மேல் நோக்கி உயர்த்தியபடியும் வடிக்கப்பட்டுள்ளது. அதாவது வீரன் இறந்த நிலையில் அவரோடு உடன்கட்டை ஏறிய அவரது மனைவியை நினைவு கூர்வதை இது குறிக்கின்றது. கல்லின் மேல் பகுதியில் மாவிலைத் தோரணமும் மலர்களும் செதுக்கப்பட்டுள்ளது.

வீரன் வைத்துள்ள ‘கட்டாரி’ என்ற ஆயுதம் சிறப்புத்தன்மை கொண்டதாகும். கட்டாரி என்பது இந்தியத் துணைக் கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு குத்துவாள் வகையாகும். நடுவிரல், ஆள்காட்டி விரலுக்கு இடையில் வைத்து பயன்படுத்தும் இக்குத்துவாளின் கைப்பிடியானது  ‘H’ வடிவில் இருப்பது இதன் தனிச்சிறப்பாகும். இக்குத்துவாளானது மிகவும் , தனித்துவமானது  ஆகும். இன்றும் சில இடங்களில் வழிபாட்டுச் சடங்குகளில் கட்டாரிகள் இடம்பெற்றுள்ளன.

இது தமிழில் குத்துவாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.  வடமொழியில் கட்டாரா அல்லது கட்டாரி என மருவி இருக்கலாம், 14 ஆம் நூற்றாண்டின் விஜயநகரப் பேரரசுக் காலத்தில் பெரும்பாலும் இக்கருவி புழக்கத்தில் இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். என்கிறார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

2. போர் மறவர் நடுகல்

மேலும் அங்கிருந்து கந்திலி மலையின் அடிவார புதர்களுக்கிடையே மூன்று பாகங்களாக உடைக்கப்பட்டு சிதறிக்கிடந்த  போர் மறவர் நடுகல் காண சென்றோம்.

அதில்  ஒரு  துண்டு கிடைக்கவில்லை. ஏனைய இரண்டு துண்டுகளையும் அதன் அமைப்பிற்கு ஏற்றவாறு பொருத்திச்  ஆய்வு செய்யப்பட்ட போர் மறவர் நடுகல்லில்  நேர்த்தியான போர்க்களக் காட்சியை விவரிக்கிறது. 3 அடி அகலம், 3 ½ அடி உயரமும் கொண்டதாகவும் நடுகல்லின் இடதுபுறம் குதிரையில் வீரன் ஒருவன் போர் புரிவது போன்று காணப்படுகிறது.  அவரது இடதுகையால் குதிரையின் பிடிக்கயிற்றைப் பற்றிக் கொண்டு வலக்கரத்தில்  பெரிய வாளினை ஏந்தி எதிரில் உள்ள வில் வீரனைத்தாக்க முற்படுகிறார். எதிரில் உள்ள வீரன் எய்த அம்பு குதிரை வீரனின் தலையில் பாய்ந்து வெளிவந்த நிலையிலும் அவர் வீரத்தோடு  போர் புரிவதாக  விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், குதிரை வீரர் எய்த வேல் எதிரே  உள்ள  வீரனின் மார்பைத் துழைத்து வெளிவந்த நிலையில் அவரும் ஆவேசத்துடன் போர் புரிவதாக  காட்சிப்படுத்தியுள்ளனர். என விவரித்தார் பேராசிரியர் பிரபு.

பேராசிரியர் பிரபு.

கல் கூறும் சேதி

தொடர்ந்தவர், வில் வீரன் இடது கையில் வில்லினை ஏந்தி நிலையில் தம் வலது கரத்தில் உள்ள வாளினால் குதிரையில் முகத்தைத் தாக்கியவாறு காணப்படுகின்றார்.

தமிழர்களின் போர் நிகழ்வு எத்தகைய வீரமிக்கது என்பதற்கு இந்த நடுகல் ஒரு சான்றாகும். தலையில் அம்பு பாய்ந்து மறுபுறம் வெளிவந்த நிலையில் ஒரு குதிரை வீரரும், மார்பில் வேல் பாய்ந்து மறுபுறம் வந்த நிலையில் ஒரு வில் வீரரும் சளைக்காது போரிடும் நிகழ்வானது புல்லரிக்கச் செய்யும் வரலாற்றை நமக்கு எடுத்துச் சொல்கிறது.

இந்நடுகல் இப்பகுதியில் நடைபெற்ற போரில் உயிர் துறந்த இரண்டு வீரமறவர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாகும். இந்நடுகல் விஜயநகர மன்னர்கள் ஆட்சிக் காலத்தின் தொடக்ககாலத்தைச் சேர்ந்ததாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதாவது கி.பி. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றார்.

விஜயநகரப் பேரரசின் கிழ் கந்திலி

அக்காலத்தில் எழுத்துருக்களை பொறிக்க ஆயுதங்கள்  ஏதும் இல்லாத நிலையில் இந்நடுகற்களின் சிற்ப வேலைப்பாடுகள், ஆபரணம், ஆயுதம் ஆகியவற்றின் அமைப்பினை வைத்துப் பார்க்கும்போது  இவ்விரண்டு நடுகல்களும் விஜயநகர மன்னர்கள் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தவையாகும்.

பழந்தமிழகத்தில் நாட்டை காவல் காத்து, நல்லறம் பேணி, நானிலம் போற்றி வாழ்ந்து மடிந்த வீர மறவர்களுக்கு அவர்களின் செம்மார்ந்த வீரத்தினையும் தியாகத்தினையும் போற்றும் வகையில் நடுகற்கள் எடுத்து அந்த மாவீரர் நினைவுக்குப் படையல் செய்து வழிபட்டு வந்துள்ளனர். அவ்வாறு நடுகற்களை வணங்கினால் விவசாயம் செழிக்கும் நோய்நொடிகள் அகலும் என்று மக்கள்  நம்பினர். இன்றளவும் அம்மரபு தொடர்வது வியப்புக்குரியதாகும். கும்பிடிகாம்பட்டி, கந்திலி பகுதிகளில் ஒருகாலத்தில் புலிகள் இருந்தமையும் இவ்வீரதீர செயல்கள் நடைபெற்றமையும் திருப்பத்தூர் மாவட்டத்தின் முற்கால வரலாற்றைப் பறைசாற்றுவனவாகும்” என்றார்.

அன்றைய கால போர்க்கள நிகழ்வை நம் கண்முன் எடுத்துரைத்து, நம் முன்னோர்களின் வீர வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்நடுகல்லின் அருமை தெரியாமல் போர் மறவர் நடுகல் சிதைத்து வீசப்பட்டுள்ளது நெஞ்சைப் பதறச் செய்தது. தொடர்ந்து தொப்பலக்கவுண்டனூர் இளைஞர்களின் ஒத்துழைப்போடு  திருப்பத்தூர் மாவட்டத் தொன்மை பாதுகாப்பு மையத்தினரான  எங்கள் கல்லூரி, ஆய்வு மாணவர் தரணிதரன் , சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாவட்டம் முழுவதும் பல்வேறு.  பகுதிகளில் கள ஆய்வு நடத்தி திருப்பத்தூர் மாவட்டத்தின் முற்கால வரலாற்றுத் தடயங்களை வெளிப்படுத்தி, அதனைப் பாதுகாக்க ஆவண செய்திட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்” என்றவர், ”எங்களோடு நேரில் கள ஆய்வில் பங்கெடுத்த அங்குசம் செய்தி  இதழுக்கும் நன்றி” என்றார் நெகிழ்ச்சியோடு திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு.

மணிகண்டன்.கா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.