ஆசிரியர்களை அரசு கைவிடாது என்ற பள்ளி கல்வித்துறை அமைச்சரின் ஆறுதல் பேச்சை நம்பியிருக்கிறோம் !
உச்சநீதிமன்ற டெட் தேர்வு தீர்ப்பால் பூகம்பத் தாக்குதலில் அதிர்ந்து உறைந்து போய் இருந்த ஆசிரியர் சமுதாயத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையூட்டியிருப்பதாக, ஆசிரியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் வா.அண்ணாமலை, தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் அ. எழிலரசன், பொதுச்செயலாளர் அ.வின்சென்ட் பால்ராஜ், மாநிலப் பொருளாளர் ஆ.இராஜசேகர், மாநில மகளிரணிச் செயலாளர் கு.ரமாராணி ஆகியோர் சார்பில் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த அறிக்கையில், ”உச்சநீதிமன்ற தீர்ப்பு செப்டம்பர் ஒன்றாம் தேதி வருகிறது. நான்காம் தேதி அனைத்து ஆசிரியர் சங்கத் தலைவர்களை அழைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கருத்துக்களை கேட்டறிந்தார். இங்கிலாந்து, ஜெர்மனியில் முதலமைச்சர் அவர்கள் இருந்தாலும் முதலமைச்சரின் குரலாகவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் செய்தியினை வெளியிட்டார்கள். ஒருபோதும் திராவிட மாடல் அரசு ஆசிரியர்களை கைவிடாது என்று செய்திகளை வெளியிட்டார்கள்.
தீர்ப்பு முழுமையாக வெளிவந்தவுடன் சட்ட வல்லுனர்களை கேட்டு சட்டப் போராட்டம் நடத்தி ஆசிரியர்களை பாதுகாப்போம் என்று தெரிவித்தார்கள். 110 பக்கம் தீர்ப்பு முழுவதும் வெளிவந்துவிட்டது. 19ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதாக அறிவித்துள்ளது.
ஆந்திரா அரசு 15.11.2011 க்கு முன்பு நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு டெட் லிருந்து விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது. கேரளா பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உடன் சீராய்வு மனு அளித்து டெட்டிலிருந்து விலக்கு பெறுவோம் என அறிவித்திருக்கிறார். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் இந்த மாநிலங்களில் எல்லாம் டெட் கட்டாயம் இல்லை என்ற நிலையிலே பணியாற்றி வருகிறார்கள்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பெரம்பலூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அவர் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வெளிவந்த உணர்ச்சிப்பிழம்பான பேட்டி ஆகும். செய்தியாளர்கள் டெட் தேர்வு கட்டாயம் என்பது பற்றி அரசின் முடிவு என்ன என்று கேட்டபோது உச்ச நீதிமன்றத்தில் 19ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சார்பில் முறைப்படி பணி அனுபவம் உள்ள ஆசிரியர்களுக்கு பாதுகாப்பாக சீராய்வு மனு செய்ய உள்ளோம்.
டெட் இல்லாத காலத்தில் இருந்த ஆசிரியர்கள் பாடம் நடத்தி தான் நீதிபதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆட்சியாளர்கள் ஏன் டெட் தேர்ச்சி பெற்று பணியாற்றி வருபவர்களும் அவர்களிடம் படித்த மாணவர்கள் தானே அவர்களுடைய பணி அனுபவத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மனம் திறந்து இருக்கிறார்.
நம்மை பொருத்தவரையில் குருகுல கல்வி தொடங்கிய காலம் தொட்டு 15.11.2011 அன்று வெளியிடப்பட்ட அரசாணை 181, 07.03.2012 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விளம்பரம் வரை பணியாற்றியவர்கள், இந்திய நாட்டின் குடியரசு தலைவர், பாரதப் பிரதமர், அமைச்சர்கள், இந்திய ஆட்சி பணியாளர்கள் வரை அந்த ஆசிரியர்களிடம் தான் படித்தவர்கள் என்பதை மறுக்க முடியுமா..?
நீதிபதிகள், நீதியரசர்கள், நீதிமான்கள் பொருள் ஒன்று தான். ஆனால், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகளும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் நீதிமான்களால் வெளியிடப்பட்ட தீர்ப்புகள் அல்ல..! நீதியரசர்களால் வெளியிடப்பட்ட தீர்ப்பாகும். NCTE விளம்பரம் கூட அன்று வெளியிடப்படவில்லை. தற்போது கருத்துரு மட்டும்தான் சொல்லி இருக்கிறார்கள்.
2003 ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால் ஒரே கையெழுத்தில் ஒன்றே முக்கால் லட்சம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட போதும், 999 ஜாக்டோ ஜியோ தலைவர்கள் ஏழு மாதம் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்ட போதும் தலைவர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதல் படி உச்ச நீதிமன்றம் சென்று தீர்ப்பினை பெற்று மீண்டும் பணியில் சேர்ந்து ஊதியத்தை பெற்றோம் என்ற வரலாற்றுப் பதிவினை நெஞ்சிருக்கும் வரை மறக்க முடியுமா?

தலைவர் கலைஞர் அவர்களின் மகன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் காலத்தில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி 15.11.2011 க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு டெட் தேவையில்லை என்பதை தாக்கல் செய்து இரண்டே கால் லட்சம் ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கை ஒளியினை ஏற்றி தருமாறு பாதிக்கப்பட்ட ஒன்றே முக்கால் லட்சம் பேரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் மதிப்புமிகு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் உடன் கூட்டத்தினை கூட்டி அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களிடமும் அவரவர் மாநிலங்களில் நடைபெறும் செயல்பாடுகளை கேட்டறிந்த உணர்வு தலைமைச் செயலாளருடைய தலைமைப் பண்புக்கு பெருமையினை சேர்த்துள்ளது என இந்நாளில் வரவேற்று பாராட்டிக் கொண்டிருக்கிறோம்.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் எண்ண அலைகளை பதிவுகள் மூலம் வெளிப்படுத்தாமல் நம்பிக்கை உணர்வுடன் பயணத்தினை தொடருவோம். தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களை பொறுத்தவரையிலும் அது ஜாக்டோ இயக்கமாக இருந்தாலும் ஆசிரியர்களைப் பாதுகாப்பதில் முழு சக்தியையும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை இந்நாளில் பகிர்ந்து வருகிறோம். அரசின் முடிவுகள் அறிந்து பதிவுகளை பகிர்ந்து கொள்ள முன் வருவோம்.
அரசு கைவிடாது என்பதற்கும், பாதுகாக்கும் என்பதற்கும் பெரிய வேறுபாடு இல்லா விட்டாலும் ஆசிரியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற உறுதிபாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களும், அலுவலர்களும் உள்ளார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது. உணர்வினை தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம்.” என்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
— அங்குசம் செய்திப்பிரிவு.
Comments are closed, but trackbacks and pingbacks are open.