அங்குசம் பார்வையில் ‘தண்டகாரண்யம்’
“காடுகளை நீங்க பாதுகாக்கலாம், ஆனா பழங்குடியினரான நாங்க தான் வளர்க்க முடியும்”
தயாரிப்பு : சாய் தேவானந்த், சாய் வெங்கடேஸ்வரன், பா.இரஞ்சித். இயக்கம் : அதியன் ஆதிரை, நடிகர்-நடிகைகள் : வி.ஆர்.தினேஷ், கலையரசன், ரித்விகா, வின்ஸு சாம், ஷபீர் கல்லாரக்கல், பாலசரவணன், அருள்தாஸ், கவிதா பாரதி, முத்துக்குமார், சரண்யா ரவிச்சந்திரன், யுவன் மயில்சாமி, ஒளிப்பதிவு : பிரதீப் காளிராஜா, இசை : ஜஸ்டின் பிரபாகரன், பாடல்கள் : உமாதேவி, தனிக்கொடி, எடிட்டிங் ; ஆர்.கே.செல்வா, ஸ்டண்ட் : ‘ஸ்டன்னர்’ சாம், ஏ.எஸ்.சுதேஷ்குமார், ஆர்ட் டைரக்டர் : த.இராமலிங்கம், பி.ஆர்.ஓ ; குணா.
”பா.இரஞ்சித் தயாரிப்பு, அதியன் ஆதிரை டைரக்ட் பண்ணியிருக்கும் படம். இதுல அவர்கள் கதை தான் இருக்கும். வேறென்னத்த இருக்கப் போகுது?” என்ற எண்ணத்தில் இருக்கும் விதண்டாவாதிகளையும் அதிகம் விரும்ப வைக்கும் இந்த ‘தண்டகாரண்யம்’.
ஜார்கண்ட், ஒடிஸா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் அடர்ந்த வனப்பகுதி தான் தண்டகாரண்யம். இங்கே இருக்கும் பழங்குடி இன மக்களை விரட்டியடித்துவிட்டு, நிலக்கரி, பாக்ஸைட் போன்ற கனிமவளங்களைக் கொள்ளையடிக்க நினைக்கும் கார்ப்பரேட் காவாலிகளுக்கு இப்போதும் சிம்மசொப்பனமாக இருப்பவர்கள் நக்சலைட்டுகள்.
அந்த மக்கள் போராளிகளான நக்சல்களை முற்றிலும் ஒழித்தால் தான் தங்களின் கொள்ளைத் திட்டம் நிம்மதியாக நடக்கும் என நரித்தனமாக கணக்குப் போடும் கார்ப்பரேட் காவாலிகள், ஆளும் வர்க்கத்தின் துணையுடன் நடத்தும் படுபயங்கரமான, மிகவும் கீழ்த்தரமான நாடகத்தை இந்த ‘தண்டகாரண்யத்தில்’ அம்பலத்திற்கு கொண்டு வந்து ஒட்டு மொத்த இந்தியாவையே கிடுகிடுக்க வைத்துள்ளனர் டைரக்டர் அதியன் ஆதிரையும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தும்.
எந்த பழங்குடியின மக்களுக்காக கார்ப்பரேட் காவாலிப்பயலுகளை எதிர்த்து நக்சல்கள் போராடுகிறார்களோ…அந்த பழங்குடியின இளைஞர்களையே நக்சல்களாக சரணடைய வைத்து, அவர்களுக்கு மறுவாழ்வு தருவதாகச் சொல்லி, பின் அவர்களையே தீர்த்துக்கட்டி, போலி எண்கவுண்டர் நடத்தி, “நூற்றுக் கணக்கில் நக்சல்கள் சுட்டுக் கொலை” என கேவலத்தின் உச்சத்தை கேடுகெட்ட மீடியாக்கள் மூலம் இப்போதும் பரப்பிக் கொண்டிருக்கிறது ‘ஓட்டுத் திருட்டுக் கும்பல்’.
தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதையை, யாரும் சொல்லத் துணியாத கதையை மிகவும் துணிச்சலுடன் திரையில் காட்சிப்படுத்தி, நம்மையெல்லாம் திடுக்கிட வைத்துள்ளார் டைரக்டர் அதியன் ஆதிரை. இதற்காகவே தோழர் அதியனுக்கும் இத்திரை உருவாக்கத்திற்கு துணை நின்ற டைரக்டர், தோழர் பா.இரஞ்சித்துக்கும் ‘ரெட் சல்யூட்’.
பழங்குடியின போராளியாக வி.ஆர்.தினேஷ், வனத்துறையில் டெம்ப்ரரி வேலையாளாக, தினேஷின் தம்பியாக கலையரசன். தினேஷின் மனைவியாக ரித்விகா, கலையரசனின் காதலியாக வின்ஸு சாம். கேடுகெட்ட வனத்துறை அதிகாரியாக அருள்தாஸ், வனத்துறைச் சொத்துக்களை சூறையாடும் முத்துக்குமார், அரசியல்புள்ளி கவிதா பாரதி இவர்களின் திரைத் தோற்றம் ஒரு பக்கம்.
மிலிட்டரியில் வேலை என ஆசைகாட்டி நக்சல்களாக சரண்டைய வைத்து சுட்டுக் கொல்லும் கொடூரம் ஒருபக்கம், சுட்டுக் கொல்லப்படும் அப்பாவியாக ஷபீர் கல்லாரக்கல், பாலசரவணன், க்ளைமாக்ஸில் கலையரசன்.. இதெல்லாம் பார்வையாளனை ரொம்பவே அதிர்ச்சிக்குள்ளாக்கும்.
“காடுகளை நீங்க பாதுகாக்கலாம், ஆனா பழங்குடியினரான நாங்க தான் வளர்க்க முடியும்” வனத்துறை அருள்தாஸிடம் சடையன் [தினேஷ்] பேசும் இந்த வசனமே ஒட்டு மொத்த ‘தண்டகாரண்யத்தின்’ ஆகப்பெரிய பலம்.
கலையரசனின் பயிற்சிக்காலம் சீன்கள் ‘டாணாக்கரன்’ படத்தை நினைவுபடுத்துகிறது. அதே போல் வின்ஸுசாமுடனான கலையரசனின் காதல் எபிசோட் கொஞ்சம் சலிப்பாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் இசைஞானியின் “ஓ…ப்ரியா….ப்ரியா…. என் ப்ரியா..ப்ரியா….” பாடலைக் கச்சிதமாக பொருத்தியிருப்பது மனசை இலகுவாக்குகிறது.
மலைப்பகுதி, அடர்ந்த வனப்பகுதிகளில் அபாரமாக சுற்றிச் சுழன்றிருக்கிறது ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜாவின் கண்கள். பழங்குடியின திருமணப் பாடலும் அதனூடே வரும் பழி வாங்கும் ஆங்காரமும் பின்னணி இசையும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் திறமைக்குச் சாட்சிகள்.
தோழர்கள் அதியன் ஆதிரைக்கும் பா.இரஞ்சித்திற்கும் மீண்டும் நமது ரெட் சல்யூட்.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.