அங்குசம் பார்வையில் ‘தங்கலான்’ திரைப்படம் திரைவிமர்சனம் !
அங்குசம் பார்வையில் ‘தங்கலான்’ திரைப்படம் திரைவிமர்சனம் – தயாரிப்பு : ‘ஸ்டுடியோ க்ரீன்’ & நீலம் புரொடக்ஷன்ஸ். கே.ஈ.ஞானவேல்ரஜா. டைரக்ஷன் : பா.இரஞ்சித். நடிகர்—நடிகைகள் : விக்ரம், பார்வதி திருவோத், மாளவிகா மோகனன், டேனியல் கால்ட்கிரோன், பசுபதி, ஹரிகிருஷ்ணன், அர்ஜுன், ப்ரீத்தி கரண், முத்துக்குமார், தொழில்நுட்பக் கலைஞர்கள்—திரைக்கதை : அழகிய பெரியவன் & பா.இரஞ்சித், ஒளிப்பதிவு : ஏ.கிஷார்குமார், இசை : ஜி.வி.பிரகாஷ்குமார், ஆர்ட் டைரக்டர் : மூர்த்தி, எடிட்டிங் : செல்வா ஆர்.கே. ஸ்டண்ட் டைரக்டர் : ஸ்டண்ணர் சாம். பி.ஆர்.ஓ. யுவராஜ், குணா.
தன்னுடைய எல்லா சினிமாக்களிலும் தலித்துகளின் வேதனை வாழ்வியலையும் அவர்களை ஒடுக்கியே வைத்திருக்கும் ஆதிக்க சாதிகளையும் அப்பட்டமாகப் பேசிய இரஞ்சித், இந்த தங்கலானில் 19-ஆம் நூற்றாண்டில் வட ஆற்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியில் வசித்த பழங்குடியின அடிமைகளின்அவலத்தை, அவர்களை அடிமைகளாக்கிய ஜமீன்தார் திமிர்த்தனத்தை, கோலார் தங்கவயலை உருவாக்க அந்த பழங்குடியின பாட்டாளி வர்க்கம் சிந்திய ரத்தத்தை, ரத்தமும் சதையுமாக பதிவு செய்யும் உயரிய லட்சியத்துடன் தான் இந்தப் படத்திற்கான கதையை எழுத முயற்சித்திருப்பார்.
அதற்கான திரைக்கதையையும் எழுதியிருப்பார், நடிகர்—நடிகைகளை தேர்ந்தெடுத்திருப்பார், மெகா பட்ஜெட்டில் தயாரிக்க ஞானவேல்ராஜாவும் சம்மதித்திருப்பார்.
ஆனால் சோறு வெந்த பின்பு பானையைப் போட்டு உடைத்த கதையாக்கிவிட்டார் டைரக்டர் பா.இரஞ்சித்.
இந்தியாவில் எந்த நடிகனாலும் கொடுக்க முடியாத நடிப்பை, கடும் உழைப்பை கொடுத்திருக்கிறார் விக்ரம் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை. ”மெய் வருத்தக் கூலி தரும்” என்பார்கள். அர்ப்பணிப்புடன் நடிக்கும் ஒவ்வொரு நடிகனுக்கும் அந்தப் படத்திற்கு மக்கள் அளிக்கும் ஆதரவு, அதனால் கிடைக்கும் பெரு வெற்றி, இதான் அந்தக் கூலி.
இன்னும் சொல்லப் போனால், தங்கலான், காடையன், தங்கலானின் கொள்ளுத் தாத்தா அரசன், ஆரண், ஆதி முனி, நாகமுனி என படத்தில் ஆறு வகையான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதெல்லாம் விக்ரமால் மட்டுமே முடியும். இந்த ‘தங்கலான்’ மூலம் அந்தக் கூலி விக்ரமிற்கு கிடைக்குமா?
கெங்கம்மாவக வரும் பார்வதி, அரசனியாக வரும் ப்ரீத்தி கரண், பெருமாள் பக்தராக வரும் பசுபதி, வெள்ளைக்கார துரையாக வரும் டேனியல் என நடிகர்-நடிகைகளின் நடிப்பு, ஆர்ட் டைரக்டர் மூர்த்தி, கேமராமேன் கிஷோர் குமார் ஆகியோரின் கடின உழைப்பு இவற்றில் எந்தக் குறையும் இல்லை. ஆரத்தியாக வரும் மாளவிகா மோகனன் கேரக்டர் தான் மகா குழப்பம், பெருங்குழப்பம்.
அதே போல் வசன ஒலிப்பதிவில் நடந்த மிகப்பெரிய கோளாறால், பெரும்பாலான காட்சிகளில் வசனமே கேட்கவில்லை, புரியவில்லை. தன்னால் முடிந்தளவுக்கு படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார் மியூசிக் டைரக்டர் ஜி.வி.பிரகாஷ்குமார்.
பொதுமேடைகளில் வீரியமாக, ஆவேசமாக, ஆக்ரோஷமாக பேசும் விசயங்களையெல்லாம் சினிமாக்கிவிட வேண்டும் என நினைக்கும் பா.இரஞ்சித்தின் முயற்சி, முறியடிக்கப்பட்டிருக்கிறது.
தங்கலான் – பழைய தகர டப்பா.
–மதுரை மாறன்