ஃபிளக்ஸ் பேனருக்கு பதில் ! கோரைப்பாயில் பேனர் ! அசத்தும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி !

0

ஃபிளக்ஸ் பேனர் பயன்படுத்த தடை ! கோரைப்பாயில் அறிவிப்பு வாசகம் ! அசத்தும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி !

ஃபிளக்ஸ் பேனருக்கு பதில் கோரைப்பாயில் பேனர்
ஃபிளக்ஸ் பேனருக்கு பதில் கோரைப்பாயில் பேனர்

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் நடத்தப்படும் படைப்பிலக்கியப் பயிலரங்கில் வைக்கப்பட்டிருந்த கோரைப்பாயில் தயாரிக்கப்பட்ட அறிவிப்பு பதாகை காண்போரின் புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறது.

கல்லூரி வளாகத்தில் ஃபிளக்ஸ் பேனர் பயன்படுத்தக்கூடாது என கண்டிப்புடன் கல்லூரி நிர்வாகம் விதித்த தடையைத் தொடர்ந்து இத்தகைய மாற்று ஏற்பாட்டை செய்திருப்பதாக தெரிவிக்கிறார் பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜா.சலேத்.
கல்யாணம், காதுகுத்து, கருமாதி, அரசியல் கட்சி கூட்டங்கள் என சகலத்திலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது ஃப்ளெக்ஸ் பேனர்கள்.

எது எதற்கெல்லாம் பேனர் வைக்க வேண்டும் என்ற வரைமுறையற்று, “பொண்ணு வயசுக்கு வந்துருச்சுனு ஃப்ளெக்ஸ் வைத்து விளம்பரப்படுத்தும்” காலக்கொடுமைகளையும் கண்ணுற்று வருகிறோம்.

சில நூறுகளை செலவிட்டால், அதுவும் சில மணி நேரங்களில் நாம் விரும்பியபடி வடிவமைத்து கொள்ளலாம் என்ற வசதி இருப்பதால் ஃப்ளெக்ஸ் எளிய தேர்வாகிவிடுகிறது.

அநாவசியமானது; ஆடம்பரமானது என்பது ஒருபுறமிருக்க, இது சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு அபாயகரமானது என்பதை எவரும் உணர்வதில்லை.

பொதுவெளியில் உரிய அனுமதி இன்றி, பொதுமக்களுக்கு இடையூறாக அரசியல் கட்சிகள் சார்பில் நிறுவப்படும் ஃப்ளெக்ஸ் பேனர்களால் விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் நேர்வுகளில் மட்டும் நீதிமன்றங்கள் கண்டிப்பு காட்டுவதும், பின் நம் கவனங்களை விட்டு கடந்தும் போய்விடுகிறது.

முற்றாக ஃப்ளெக்ஸ் பயன்பாட்டை தடை செய்வதற்கு உரிய வழிமுறைகளை அரசுதான் முன்னெடுக்க வேண்டும் என்பது ஒருபுறமிருக்க; குறைந்தபட்சம் அரசு சார்ந்த நிகழ்வுகளில்கூட ஃப்ளெக்ஸ் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கு இருப்பதுமில்லை.

பொதுவில் நெகிழிகளால் சுற்றுச்சூழல் எவ்வாறெல்லாம் மாசடைகிறது; நீர்நிலைகளை, நீர்வாழ் உயிரினங்களை எவ்வாறெல்லாம் பாதிக்கிறது என்பதையெல்லாம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் சூழலிலும்கூட, இந்தப் போக்கில் எந்த மாற்றமும் பெரியதாக வந்துவிடவில்லை என்பதற்கு இன்றளவும் சாலையோரங்களில் பல்லிளித்து நிற்கும் ஃப்ளெக்ஸ் பேனர்களே நேரடி சாட்சியமாக அமைந்திருக்கின்றன.

ஃபிளக்ஸ் பேனருக்கு பதில் கோரைப்பாயில் பேனர்
ஃபிளக்ஸ் பேனருக்கு பதில் கோரைப்பாயில் பேனர்

மிக முக்கியமாக, முந்தைய காலகட்டத்தில் தூரிகை கலைஞர்களாக, சுவரோவியக் கலைஞர்களாக வலம் வந்தவர்களையெல்லாம், சுண்ணாம்பு அடிக்கும் பெயிண்டர்களாக மாற்றிவிட்டது, ஃப்ளெக்ஸ் பேனர்களின் ஆதிக்கம்.

இந்த பின்புலத்திலிருந்துதான், அரசு தடைச்சட்டம் கொண்டு வரட்டும் அப்போது தடை விதித்துக்கொள்ளலாம் என்று காத்திராமல், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் ஃப்ளெக்ஸ் பேனர்களை பயன்படுத்துவதற்கு கல்லூரி நிர்வாகம் விதித்திருக்கும் தடை முக்கியத்துவம் பெறுகிறது.

செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகத்தின் முன்னெடுப்பு நல்ல தொடக்கம். ”ஆஹா! அற்புதம்!” என்ற வகையிலான வார்த்தைகளை உதிர்த்துவிட்டு கடந்து செல்லாமல், அவரவர் தனது வரம்பிற்குட்பட்ட வகையில் ஃப்ளெக்ஸ் பேனர்களின் பயன்பாட்டை தவிர்ப்பதே காலத்தின் தேவை.

வே.தினகரன்.

படங்கள் -ஜெபராஜ்

Leave A Reply

Your email address will not be published.