இளையராஜா – கலைஞர் – பிறந்தநாள் – வீட்டிற்கே சென்ற வாழ்த்த காரணம் !
”காலைப் பொழுது இனிதாய் மலர – பயணங்கள் இதமாய் அமைய – மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற – துன்பங்கள் தூசியாய் மறைய – இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு ‘இசைஞானி’ இளையராஜா!
அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார். தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி! அதனால்தான், அவரது இசையின் நுட்பத்தை ஆழ்ந்து இரசித்து, அவரை ‘இசைஞானி’ எனப் போற்றினார் முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர்.
இசை கொண்டு அவர் நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் இரசிகனாக – உங்களில் ஒருவனாக அந்த மாபெரும் கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தேன். எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து! ” இந்த ட்வீட்டுக்கு சொந்தக்காரர் வேறு எவருமில்லை. நம்ம முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்.
இசைஞானி இளையராஜாவின் 80-வது பிறந்தநாளான இன்று, அவரது இல்லத்துக்கே சென்று வாழ்த்து தெரிவித்து அசத்தியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
உண்மையில் ஜூன்-03 தான் இளையராஜாவுக்கும் பிறந்தநாளாம். கலைஞருக்கும் அதே தேதியில் பிறந்த நாள் என்பதால், அவர் மீதான மரியாதை நிமித்தமாக ஒரு நாள் முன்னதாகவே கொண்டாடுவதை வழக்கமாக்கியிருக்கிறார், இளையராஜா.
”கலைஞர் ஐயா தமிழுக்கு ஏராளமான சேவைகளை செய்துள்ளார்.
அந்த அளவுக்கு நான் ஒன்றும் செய்து விடவில்லை. அதனால் கலைஞரை மட்டுமே தமிழக மக்கள் ஜூன் 3ஆம் தேதி வாழ்த்த வேண்டும்.” என்று அதற்கான காரணத்தையும் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார் இளையராஜா. தனக்கு இசைஞானி என்ற பட்டத்தை வழங்கியவர் கலைஞர் என்ற அன்பின் வெளிப்பாடாக இருக்கலாம்.
மேகதாது பிரச்சினை உள்ளிட்டு பரபரப்பான சூழலிலும் நினைவு வைத்து நேரம் ஒதுக்கி பிறந்தநாளில் நேரில் சென்று வாழ்த்தியிருப்பதன் வழியே கலைஞரின் வாரிசு என்பதை நிரூபித்துவிட்டார் மு.க.ஸ்டாலின்.
– டெல்டாகாரன்.