செந்தில்பாலாஜி மீதான ரெய்டு முடிவுக்கு கொண்டு வந்த நிபந்தனை ஜாமீன் ! என்ன சார் நடக்குது… இங்கே
சர்ச்சையும் செந்தில் பாலாஜியும் ! சார் எப்போதான் முடியும் உங்க ரெய்டு ?
செந்தில் பாலாஜி என்றாலே, சர்ச்சைதான் போல. மே-26 ஆம் தேதி தொடங்கிய வருவமான வரித்துறையினரின் ரெய்டு நடவடிக்கை ஜூன்-2 ஆகிய இன்றோடு எட்டாவது நாளாக தொடர்கிறது. இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக அதிக நாட்கள் நடைபெற்ற ஐ.டி. ரெய்டு என்றால் இதுவாகத்தானிருக்கும் என்கிறார்கள்.
இப்போது என்றில்லை; கடந்த 2016-ஆம் ஆண்டு செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட போது இதே போன்று வருமான வரிசோதனை நடைபெற்றது. அடுத்து, 2017-ஆம் ஆண்டு செந்தில்பாலாஜி டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவாக இருந்த போது, அவருடை நண்பர்கள் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரிசோதனை நடைபெற்றது.
அதன்பின்னர், 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக திமுக முக்கிய புள்ளிகள் வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போதும் செந்தில்பாலாஜி வீடுகளில் சோதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது, திமுக அமைச்சராக இருக்கும் நிலையில் ரெய்டு நடக்கிறது. அமைச்சரின் தம்பி உள்ளிட்டு செந்தில்பாலாஜியுடன் நெருக்கமானவர்கள் என்று அறியப்படும் பலரது வீடுகளில் அடுத்தடுத்து ரெய்டுகள் நடைபெற்றுள்ளன.
அசோக்குமாருக்கு மிகவும் நெருக்கமான, அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்தின் அலுவலகம், கரூர் செங்குந்தபுரத்தில் உள்ளது. அந்த வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு நெருக்கமான வழக்கறிஞர் செங்கோட்டையின் வீட்டிலிருந்து இரண்டு பெட்டிகளை துப்பாக்கியோடு வந்த துணை ராணுவப்படையோடு கைப்பற்றிச் சென்றிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
இதுவரையில் என்னென்ன ஆவணங்கள், எத்தனை கோடிகள் கைப்பற்றப்பட்டிருக்கிறது என்ற தகவல் எதையும் வருமான வரித்துறையினர் வெளியிடவில்லை. முதல்வர் வெளிநாடு சென்ற சமயத்தில் தொடங்கிய ரெய்டு, அவர் தமிழகம் திரும்பிய பின்னரும் தொடர்கிறது.
ரைடுயின் போது வந்த அதிகாரிகளிடம் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் கடுமையாக நடந்து கொண்டார்கள் என்று அதிகாரிகள் புகார் கொடுத்த நிலையில் கரூர் போலிஸ் கிட்டதட்ட 17 பேருக்கு மேல் வழக்கு பதிவு சிறைக்கு அனுப்பியது. சிறைக்கு சென்றவர்களுக்கு கரூர் நீதிமன்றம் நிபர்ந்தனை ஜாமீன் கொடுத்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே செந்தில்பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள் மீதான ரைடு முடிவுக்கு வந்தது என்று அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடதக்கது.
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை என்ற வெயிட்டான துறை அவருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதிலிருந்தே செந்தில்பாலாஜி எவ்வளவு வெயிட்டானவர் என்பது புரியும். அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறையின் பெயரில் வேண்டுமானால், மதுவிலக்கு என்றிருக்கலாம். ஆனால், அவர் டாஸ்மாக் துறை அமைச்சராகவே பார்க்கப்படுகிறார்.
டாஸ்மாக்கில் விற்கப்படும் சரக்கில் பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக வசூலிக்கப்படும் பத்து ரூபாயும் இவருக்குத்தான் போகிறது என்றும்; அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக பார்கள் இயங்குவதற்கும் அவர்களிடமிருந்து கட்சி நிதி என்ற பெயரில் பணம் வசூலிப்பதும்; மிக முக்கியமாக ”கரூர் சரக்கு” என்றழைக்கப்படும் போலி மதுபான பாட்டில்கள் டாஸ்மாக்கில் வைத்து விற்கப்படுவதாகவும் இந்த சம்பவங்கள் எல்லாம் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புபடுத்தி பேசப்படுகிறது.
பொதுவாகவே, இதுபோன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அமைச்சர்களின் இலாக்கா மாற்றியமைக்கப்படும். அமைச்சர் கண்ணப்பன், பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் ஆகியோருக்கு அவ்வாறுதான் மாற்றி கொடுக்கப்பட்டது.
செந்தில்பாலாஜிக்கும் இலாகா மாற்றம் நடக்குமா ? உடன்பிறப்புகளை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது கழகத்தலைவரின் தமிழக முதல்வரின் நீண்ட மௌனம்!
– மித்ரன்