ஓட்டு இல்லாதவர்களுக்கும் வீடு !
திருமணம் செய்து, பிள்ளைகள் பெற்று, அவர்களுக்கும் திருமணமாகி, குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், தங்களுக்கான சொந்த நாட்டையே இதுவரை பார்க்காத...
வேர் இழந்தோரைத் தாங்கும் விழுதான முதல்வர்!
இத்தனை ஆண்டுகாலமாக கவுன்சிலர்கள் கூட எட்டிப் பார்க்காத இடம் அது. ஆனால், கடந்த இரண்டாண்டுகளில் ஒரு முறைக்கு இரு முறை முதலமைச்சரே நேரில் வந்ததில் ஆச்சரியமும் அகமகிழ்வும் கொண்டிருக்கிறார்கள் அங்கு வசிக்கும் மக்கள். அந்த இடம், வேலூர் மாவட்டம் மேலமொணவூர். அங்கு வசிப்பவர்கள் இலங்கை தமிழர்கள். அவர்களைத்தான் இரண்டு முறை முதலமைச்சர் சந்தித்தார். மேலமொணவூர் போல தமிழ்நாட்டில் 106 இடங்களில் இலங்கைத் தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் மீதும் முதல்வரின் அக்கறை மிகுந்த பார்வை பதிந்துள்ளது.
சிங்கள ஆட்சியாளர்களும் இனவெறியர்களும் இலங்கையில் தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய 1983ஆம் ஆண்டு முதல், விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் சிங்கள ராணுவத்திற்கும் உச்சகட்ட போர் நடைபெற்ற 2009ஆம் ஆண்டு வரையில், ஈழத்தமிழர்களும் இலங்கை மலையகத் தமிழர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக படகில் ஏறி தமிழ் நாட்டுக் கரையோரம் வந்து சேர்ந்தபடி இருந்தனர். தொப்புள்கொடி உறவான இலங்கைத் தமிழர்களை தாய்த் தமிழ்நாடு அரவணைத்தது. இந்தியாவில் அவர்களுக்கு குடியுரிமை இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் வாழ்வுரிமையாவது கிடைக்கட்டும் என அவர்களுக்கான முகாம்கள் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் அமைக்கப் பட்டன.
இராமேஸ்வரம் மண்டபம் முகாமில் பதிவு செய்யப்பட்டு, திருச்சி கொட்டப்பட்டு, ஈரோடு பவானிசாகர் போன்ற இடங்களில் உள்ள பல்வேறு முகாம்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த நாட்டை இழந்து தவிப்பவர்கள் உண்டு. இங்கு வந்த பின் திருமணம் செய்து, பிள்ளைகள் பெற்று, அவர்களுக்கும் திருமணமாகி, குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், தங்களுக்கான சொந்த நாட்டையே இதுவரை பார்க்காத தலைமுறையினரும் இருக்கிறார்கள். இலங்கையில் போர் முடிந்தாலும் ஒடுக்குமுறை முடியவில்லை. பொருளாதார நிலைமையும் பாழ்பட்டு கிடக்கிறது. சொந்த நாடு திரும்ப விரும்பினாலும் அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. வந்த நாட்டிலும் குடியுரிமை உள்ளிட்ட அங்கீகாரம் கிடைக்கவில்லை.
தலைமுறைகளாக இப்படி தவித்து வந்த இலங்கைத் தமிழ் மக்களின் மீது தனிப்பட்ட அக்கறை காட்டியவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 2021ல் ஆட்சிப் பொறுப்பேற்றதும் இலங்கை அகதிகள் முகாம் என்ற பெயரை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என மாற்றினார். அந்தப் பெயர் மாற்றத்தை செயல் மாற்றமாக நிகழ்த்துவதற்கு 317 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். முகாம்களின் நிலைமையை மேம்படுத்துவதை கவனிப்பதற்கு இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழுவை அமைத்தார். சிறுபான்மை மற்றும் அயலகத் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில், தமிழ்நாடு மறுவாழ்வுத் துறை கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டது. இலங்கை தமிழர்களின் அடிப்படைத் தேவைகள், வாழ்வதாராம், குடியுரிமை குறித்து ஆலோசனைக் குழு வினர் பல கருத்துகளைத் தெரிவித்தனர்.
2021 நவம்பர் 2ம் நாள் வேலூர் மாவட்டம் மேலமொணவூரில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி, அந்த முகாமின் நிலையை நேரில் பார்வையிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மற்ற முகாம்களிலும் பணிகள் தொடங் கின. 9 மாதங்களில் அதாவது, 2022 செப்டம்பர் 14ஆம் நாள் திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து முகாமில் 321 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, அவை முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. தொடர்ந்து நடந்த பணிகளின் காரண மாக மேலமொணவூரில் 220 வீடுகள் உள்பட 13 மாவட்டங்களில் 1591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. அவற்றைத் திறந்து வைக்கத்தான் 17-.9-.2023 அன்று இரண்டாவது முறையாக அதே மேலமொணவூர் முகாமிற்கு வந்தார் முதலமைச்சர்.
வீடுகளைத் திறந்து வைத்து பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினார். மேலும் 1500 வீடுகள் இறுதிக்கட்டப் பணியில் உள்ளன. அதனைத் தொடர்ந்து, 2வது கட்டமாக மேலும் 3000 வீடுகள் கட்டப்பட உள்ளன. நாடற்றவர்கள் என நினைத்திருந்த மக்களுக்கு, நான் இருக்கி றேன் என்று தமிழ்ச் சகோதரனாக உதவிக்கரம் வழங்கியுள்ளார் முதல்வர். குளியலறை இணைந்த வீடுகள், குடிநீர் வசதி, தார்ச் சாலைகள், அங்கன்வாடி, நூலகம், பூங்கா, குழந்தைகள் அரங்கு என ஒவ்வொரு முகாமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, முகாமில் வசிப்பவர்களுக்கு மாத உதவித் தொகை, உணவுப் பொருட்கள், பாத்திரங்கள், கேஸ் சிலிண்டர், துணிமணி, கல்வி உதவித் தொகை, மகளிர் சுயஉதவிக் குழு, திறன் மேம்பாட்டுப் பயிற்சி, வேலை வாய்ப்பு ஆகியவற்றையும் வழங்கி வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. அவர்களின் குடியுரிமை, நாடு திரும்புதல் போன்றவற்றிற்கான சட்டரீதியான நடைமுறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் அந்நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் நிவாரணப் பொருட்கள் தமிழ் நாட்டிலிருந்து வழங்கப்பட்டுள்ளன.
மறுவாழ்வு முகாம் என்ற பெயர் மாற்றம், உண்மையான செயல் மாற்றமாகத் திகழ்கிறது. குடியுரிமை பெற இயலாத காரணத்தால் முகாமில் வசிப்போருக்கு வாக்குரிமை கிடையாது. வாக்குரிமை இல்லாதவர்களை உள்ளாட்சித் தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அதனால், கவுன்சிலர்கள் கூட எட்டிப்பார்க்காத நிலை இருந்தது. இன்று முதலமைச்சரே நேரில் வந்து அவர்களின் தேவையை நிறைவேற்றுகிறார். சொந்த நாட்டின் வேர் இழந்தவர்களுக்கு, வந்த நாட்டில் ஒரு வீடு என்பது, தம்மைத் தாங்கிப் பிடிக்கும் விழுது போன்றது. அந்த விழுதாக நின்று, இலங்கைத் தமிழர்களைத் தாங்கி, அவர்களின் நலன் காத்து வருகிறார் முதலமைச்சர் .
-கோவி.லெனின்
இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழு உறுப்பினர்