கல்வி, நேயம், இலக்கியங்களின் முக்கூடல் சௌமா இராஜரெத்தினம் – 20
முனைவர் ஜா.சலேத்
கல்வி, நேயம், இலக்கியங்களின் முக்கூடல் சௌமா இராஜரெத்தினம் – முனைவர் ஜா.சலேத்
பள்ளிக்கூடங்களின் தாளாளர், எழுபதாண்டு காலத் தமிழ்மன்றத்தின் தலைவர், பன்னாட்டு அரிமா சங்கத்தில் தாய்தமிழ் மொழியில் நோக்கத்தை மொழிந்த அரிமா சங்கத்தின் மேனாள் ஆளுநர், விளையாட்டு அமைப்புகளின் தலைவர், இலக்கியவாதிகளுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கும் புரவலர். செஞ்சிலுவைச் சங்கப் பொறுப்பாளர் இவ்வாறு சமூகக்காவலர், இலக்கியப் புரவலர், கல்வியாளர், விளையாட்டு ஆர்வலர் என்ற பல்வேறு முகங்கள் கொண்ட ஒரு ஆளுமையாளர். இந்த முன்னுரைகளோடு அந்த ஆளுமையின் நேர்காணல் என்னை வந்தடைந்தபோது இவரை நாம் ஏதாவது ஒருநாள் சந்தித்து விடவேண்டும் என்கிற எண்ணம் ஏக்கமாகத் தொற்றிக் கொண்டது.
ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பது கல்வி; அந்தக் கல்விக்கு உயிரூட்டுவது மனிதநேயம். மணப்பாறையைத் தாயகமாகக் கொண்டு, சௌமா கல்விக்கூடங்கள் நிறுவி ஏழை எளிய மாணவர்களின் கனவுகளுக்கு வாசல் திறந்தவர் பெருமகன் அவர். கல்விவழி மனிதம் வளர்த்து மாணவர்களின் வாழ்க்கையில் அவர் ஏற்றிய ஒளி தீபமாக சுடர்விட்டு ஒளிர்கிறது. இத்தனை பெருமைகளுக்கும் உரியவர்தான் அரிமா சௌமா இராஜரெத்தினம் அவர்கள்.
சௌமா என்பதே வித்தியாசமாக இருக்கிறதே என்ற வினாவிற்கு, என் பெற்றோரின் பெயர்களின் முன்னெழுத்துகளே சௌமா. சௌ என்பது என் தாயார் பெயரான சௌந்தரம் என்பதன் முதலெழுத்து. மா என்பது என் தந்தையார் பெயரான மாணிக்கம் என்பதன் முதலெழுத்து. இவ்விரண்டும் சேர்ந்ததே சௌமா. இவ்வாறு பெயர்முன் சௌமா என்ற பெயரைச் சேர்ப்பதன் மூலம் எனக்குப் பொறுப்புணர்வு கூடுவதாகவும், அந்தப் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு அதிகரிப்பதாகவும் உணர்கிறேன் என்ற விளக்கமே இவரின் ஆளுமைச்சிறப்பைப் போற்றுகிறது.

கல்விப்பணி என்பது எங்கள் தந்தையார் தொடங்கிய பள்ளியைத் தொடர்ந்து நடத்த வேண்டிய பொறுப்பு எனக்கு வந்ததும் அதனை நடத்தி வருகிறேன் . எங்கள் கிராமத்தில் போதுமான கல்வி நிலையங்கள் இல்லாததாலும் கல்வி கற்கும் பொருட்டு மணற்பாறை போன்ற இடங்களுக்கு வரவேண்டியிருந்ததாலும் தாம் பெற்ற கல்வியைத் தம் ஊர் மக்களும் பெற வேண்டும் என்றெண்ணியதாலும் என் தந்தையார் ஒரு பள்ளியைத் தொடங்கினார். அப்பள்ளி பின்னர் என்பது அண்ணனால் நடத்தப்பட்டது. இப்போது நான் நடத்தி வருகிறேன். பள்ளியிலிருந்து வரும் வருமானத்தை நாங்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் பள்ளிக்கே செலவழிக்க வேண்டும் என்றும் என் தந்தையார் கூறியதால் நாங்கள் இன்றுவரை பள்ளியிலிருந்து வரும் வருமானத்தை எங்கள் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்துவதில்லை. அதுதான் எமது கல்வி நிறுவனங்களின் தனித்துவம் என்கிறபோது பெற்றோரின் கனவுகள் நினைவுகளாக விரிகின்றன.
ஒளி பெற நினைக்கும் உள்ளங்களே நாளைய தேசத்தின் விதைகள் என்பர். அரிமா சங்கங்களின் முன்னாள் கவர்னராக அவர் ஆற்றிய பணிகள் அமைப்புச் சார்ந்த சேவையைத் தாண்டி மனித மனங்களைத் தொட்டவை. கல்வி உதவிகள், சமூக நலக் கொடைகள், மனிதநேயத்தின் பல வடிவங்கள் எண்ணற்ற வழிகளில் அவர் மனிதத்தை வளர்த்திருக்கிறார். அவரது சேவை புகழ் தேடிய நடை அல்ல; அது தேவையை உணர்ந்து தானாக நகரும் ஒரு நடை.
சத்தமில்லாமல் மலரும் மலரே அதிக வாசனை தருகிறது என்றோ எழுதிய வரிகள் இந்த போதிமரத்தைக் காணும் போதெல்லாம் இவருக்காகத்தான் எழுதிய வரிகளோ என எண்ணத் தோன்றும். இலக்கியத்திற்கான அவரது பங்களிப்பு, அவரை இன்னொரு உயரத்திற்கு எடுத்துச் செல்கிறது. ஆண்டுதோறும் வழங்கப்படும் “சௌமா விருது” தமிழ் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் ஒரு அங்கீகார மேடையாக விளங்குகிறது.
அவரே இவ்வாறு கூறுகிறார்… தொடக்கத்தில் செந்தமிழ் அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி எழுத்தாளர் ஜெயந்தன் அவர்கள் உதவியுடன் எழுத்தாளர்களை படைப்பாளிகளைப் பாராட்டி வந்தோம். திரு ஜெயந்தன் அவர்கள் ஓய்வுக்காலத்தில் இங்கேதான் இருந்தார். வாழும் காலத்தில் படைப்பாளிகள் பாராட்டப்பட வேண்டும் என்பது அவரது நோக்கம். அதனால்தான் அறக்கட்டளையைத் தொடங்கிச் செயல்படுத்தி வந்தோம். திரு இளங்குமரனார் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்தோம். படைப்பாளிகளின் கவிதைநூல்கள் சிறுகதைகள் ஆகியவற்றிற்கு விருது பரிசுகள் கொடுத்தோம். கொரானா காலத்தில் தொய்வு ஏற்பட்டது. அதன்பிறகு சௌமா அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது அதன்வழியாக சௌமா இலக்கிய விருதுகள் என்று வழங்கப்பட்டு வருகிறது.
பொன்முடி அல்ல பெருமை அங்கீகரமே பெருமை என்கிற உயரிய எண்ணத்தின் வெளிப்பாடாக எழுத்தாளர்களால் மதிக்கப்படுகிறது சொளமா விருது. பல எழுத்தாளர்களின் மறைந்திருந்த உழைப்பை ஒளியூட்டியதன் மூலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுத்தாளர்களின் அரணாக இவர் பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் ஊக்குவிப்பால் எழுத்தாளர்களின் நம்பிக்கை உயிர் பெறுகிறது. எழுத்து உயிர் பெறுவதால் சமூகம் சிந்திக்கத் தொடங்குகிறது.
இலக்கிய ஈடுபாடு என்பது நான் முன்பே குறிப்பிட்டது போல பள்ளி கல்லூரி காலத்திலேயே ஏற்பட்டது. பள்ளி ஆசிரியர் திரு அவர்களே இலக்கிய ஈடுபாடு ஏற்படக் காரணமானவர். பள்ளி நூலகத்தில் உள்ள நூல்களைப் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாலும், கல்லூரியில் படிக்கும்போது ஓய்வு நேரங்களில் நூலகத்திலேயே பொழுதைக் கழித்ததாலும் இலக்கியங்களைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. கம்பராமாயணம் சிலப்பதிகாரம் அண்ணா பெரியார் நூல்கள் உள்பட பல நூல்களையும் படித்திருக்கிறேன்.
படிக்கும் காலத்திலேயே மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் அவ்வப்போது சிறுசிறு பணிகளைச் செய்து வந்தோம். இது அரிமாசங்கம் வரை சென்று பெரிய அளவில் தொண்டு செய்ய வழி செய்துள்ளது. சேவை செய்ய வேண்டும் என்ற ஒத்த கருத்துடையவர்கள் அரிமா சங்கத்தில் இருப்பதால் அங்கு பணியாற்றுவது எளிதாகி விட்டது. மாணவப் பருவத்திலிருந்தே மற்றவர்களுக்கு உதவி வந்ததால் இது எளிதாகி விட்டது.
கபாடி மற்றும் கால்பந்து பிடித்தமான விளையாட்டு. மாநில கபாடி வீரர் தமிழ்நாடு மாநிலத் துணைத்லைவராக இருந்துள்ளேன். தற்போது கொக்கோ அசோசியேசன் திருச்சி மாவட்டத் தலைவராக இருக்கிறேன். இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் துணைத்தலைவராகவும் இந்தியக் கலாச்சார நட்புறவு பண்பாட்டுக்கழக மாநிலத்தலைவராகவும் உள்ளேன். நெ.து. சுந்தரவடிவேலு கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் தலைவராகப் பொறுப்பு வகித்த அமைப்பில் நானும் தலைவராக இருப்பது மகிழ்வைத் தருகிறது என்கிறார்.
இலக்கியக் குறிப்பு, கல்வி, இலக்கியம், சமூக சேவை இந்த மூன்றையும் ஒரே பாதையில் இணைத்து, சேவை என்ற சொல்லுக்கு பொருள் அளிக்கும் ஆளுமையாக ஒளிர்கிறார் சௌமா இராஜரெத்தினம். மனிதன் மனிதனுக்காக வாழும் நாளே மனிதநேயத்தின் பிறந்தநாள். ஆரவாரமின்றி, ஆடம்பரமின்றி, ஆழமான சேவையால் பலரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றிய இவரின் சேவை எந்நாளும் போற்றப்படும். சௌமா இராஜரெத்தினம் அவர் வெறும் பெயர் அல்ல; கல்விக்கான அர்ப்பணிப்பு, மனிதநேயத்தின் மொழி, இலக்கியத்தின் ஆதரவு.
-முனைவர் ஜா.சலேத்








Comments are closed, but trackbacks and pingbacks are open.