ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ ! தொடரும் தங்கக் கடத்தல் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ! தொடரும் தங்கக் கடத்தல் விவகாரம் !

ஐதராபாத் விமான நிலையத்தில் டிராலி பேக் ஸ்க்ரூ, கம்பி, டார்ச் லைட் பேட்டரியில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட சுமார் 1 கிலோ 200 கிராம் அளவிலான தங்கம் பிடிபட்டது. மும்பை விமான நிலையத்தில் 11 பெண்கள் பிறப்பிறுப்பில் மறைத்து கடத்தி வரப்பட்ட 8 கிலோ 300 கிராம் தங்கம் பிடிபட்டது. சென்னை விமான நிலையத்தில் மின் மோட்டாரில் வைத்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ 800 கிராம் தங்கம் பிடிபட்டது. கோவை விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்ட 4 கிலோ 100 கிராம் எடையுள்ள தங்கம் பிடிபட்டது. மதுரை விமான நிலையத்தில் களிமண்ணுடன் தங்கத்துகள்களை கலந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ தங்கம் பிடிபட்டது. திருச்சி விமான நிலையத்தில் அட்டைப்பெட்டிக்குள் 5 கிலோ தங்கம் பிடிபட்டது. இவையெல்லாம் கடந்த ஆறு மாதங்களுக்குள் பிடிபட்டவை.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

பொதுவில், கட்டிங் பிளேயர் கம்பிகளுக்குள் மறைத்து, தலைமுடிக்குள் மறைத்து வைத்து, பேஸ்ட் வடிவில், பேரிச்சம்பழக் கொட்டைகளை நீக்கிவிட்டு அதற்குப்பதில் தங்கத்தை வைத்து, ஊட்டச்சத்து பவுடருக்குள் தூளாக்கி, பிரவுன் டேப்புக்குள் பவுடர்களாக தூவிவிட்டு என விமான நிலையங்களில் தங்கம் கடத்தல்காரர்கள் பிடிபட்டது தொடர்பான செய்திகளை தேடி படிக்கும் அளவிற்கு சுவாரசியம் தரக்கூடிய ஒன்றாக மாறியிருக்கிறது. கூடவே, ”ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?”னு வடிவேலு பாணியில்தான் கேட்கத் தோன்றுகிறது. கடந்த 2020 முதல் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி வரையிலான மூன்றாண்டு காலத்தில் மட்டும் நாடு முழுவதும் தங்கம் கடத்தல் தொடர்பாக சுமார் 9, 869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகளில் 8,956.49 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

தங்கம் கடத்தல் முதலிடத்தில் கேரளா

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

விமான நிலையங்கள் வழியே தங்கம் கடத்தப் படுவதில் கேரளம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. 2,611 வழக்குகளில், 1,869.29 கிலோ தங்கத்தை கைப்பற்றியிருக்கிறார்கள். இரண்டாவது இடத்தை தமிழகம் தக்கவைத்திருக்கிறது. 2,237 வழக்குகளில், 1,317.43 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தை மகாராஷ்டிரா பிடித்திருக்கிறது. 1,417 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,125.38 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மாநிலங்களவை நியமன உறுப்பினர் சோனால் மான்சிங் மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி வழங்கிய அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் இவை. கடல் மார்க்கமாக சென்னை கொச்சின் துறைமுகங்கள் கடத்தப்பட்ட தங்கம் வெறும் 54 கிலோ தங்கம் மட்டுமே. ஆக, தங்க கடத்தல் பெரும் பாலும் ஆகாய மார்க்கமாகவே நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் தங்கத்தின் தேவை ஆண்டொன்றுக்கு 800 டன் என்கிறார்கள். இந்த தேவையில் மூன்றில் ஒரு பங்கு தங்கம் விமானம் வழியாக சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டு வருவதாக கவலையுடன் குறிப்பிடுகிறது, உலக தங்க கவுன்சில்.

பொதுவில் ஆபரண தங்க நகைகளின் மீது இந்தியர்களிடையே காணப்படும் பண்பாட்டு ரீதியான பிணைப்பு ஒருபக்கம். குண்டுமணி அளவாக சிறுக சிறுக சேமித்தாலும், தங்கம் பாதுகாப்பான முதலீடு என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மறுபக்கம். இவற்றையெல்லாம்விட, ஆத்திர அவசரத்திற்கு அடகு வைத்து நினைத்த நேரத்திற்கு பணமாக மாற்றிக்கொள்ள முடியும் சௌகரியம் சாமான்ய மக்களைக்கூட தங்கம் வாங்குவதில் ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது. இதுவெல்லாம் போதாதென்று, அட்சய திரிதியை போன்ற நம்பிக்கை சார்ந்த நவீன கால வியாபார யுக்திகளும் ஆண்டு முழுவதும் தங்கத்தின் மீதான மவுசு குறையாமல் பார்த்துக்கொள்கின்றன.

கடும் கட்டுப்பாடுகளே கடத்தலுக்கு காரணம்

தங்கம் கடத்தப்படுவதற்கான காரணங்களுள் முக்கியமானது, தங்கம் இறக்குமதி தொடர்பான அரசின் கட்டுப்பாடுகள். அடுத்து, அதற்காக விதிக்கப்படும் அளவுக்கு அதிகமான வரிவிதிப்புகள். உலக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மற்றொரு நாட்டிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்யும்பொழுது அதற்கான பணத்தை டாலரில் செலுத்த வேண்டியிருக்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு தங்கத்தை இறக்குமதி செய்கிறோமோ அதற்கேற்ப அரசின் அன்னிய செலவாணி அதிகரிக்கிறது. இது சங்கிலி தொடர்போல நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்கிறது. இந்த நெருக்கடிகளை சமாளிப்ப தற்காகத்தான், தங்க முதலீட்டு பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள் என்றும்; வீட்டு பீரோவில் தூங்கிக் கொண்டிருக்கும் தங்க நகைகளை வங்கிகளில் டெபாசிட் செய்யுங்கள் என்றும் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கிறது அரசு. இந்த கட்டுப்பாடுகளின் காரணமாகத்தான், தற்போது இறக்குமதி வரி, ஜி.எஸ்.டி. உள்ளிட்டு 18.45 சதவீதம் வரை தங்கத்திற்கு வரி விதிக்கப்படுகிறது. இறக்குமதிக்கான வரிவிதிப்புகளை குறைத்தால்தான் கடத்தலை தடுக்க முடியும் என்று தேசிய நவரத்தினம் மற்றும் ஆபரணத் துறையின் உள்நாட்டு கூட்டமைப்பான, ஜி.ஜே.சி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு ஆண்டில் தங்க கடத்தலின் அளவு அதிகரித்திருப்பதையடுத்து, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 12.5% இலிருந்து 7.5% ஆக குறைக்க மத்திய அரசு தற்போது பரிசீலித்து வருவதாக அறிவித்திருக்கிறது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பாதிக்கு பாதி லாபம் தான்…

சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் தங்கத்தின் மச்சம் (தரம்) சரியாக இருக்கும் என்பதாலேயே அதிகளவில் தங்கம் வளைகுடா நாடுகளிலிருந்து கடத்தப்படுவதாகவும் சொல்கிறார்கள். சட்டப்படி ஆவணங்களை காட்டி இறக்குமதி செய்தால்தானே அரசாங்கம் சொல்லும் வரியை கட்ட வேண்டியிருக்கும். கள்ளத்தனமாக கடத்தி னால் அரசுக்கு வரியும் கட்ட வேண்டியதில்லை. தங்கக்கட்டியே கணக்கில் வராத போது, அதனை உருக்கி செய்யப்படும் நகைகளையா கணக்கில் காட்டிவிடப் போகிறார்கள். ஆக, அதற்கும் ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு (?!) கிடைத்து விடுகிறது. எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் கடத்தலில் பாதிக்குப் பாதி இலாபம் என்றேதான் கணிக்க வேண்டியிருக்கிறது.

கூலி 1 லட்சம் தானாம்…

இந்த தங்கக்கடத்தல் விவகாரம் தொடர்பாக, விமான நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரிடம் பேசினோம். முழுக்க முழுக்க இத்தகைய தங்கக்கடத்தல் என்பது உள்ளூர் மார்க்கெட்டை சார்ந்துதான் நடைபெறுவதாக சொல்கிறார்கள். இதற்கென்று பாரம்பரியமான வலைபின்னலை மிகக்கச்சிதமாக கட்டமைத்து வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். வெறும் கையோடு போனால் போதும், பணம் இங்கிருந்து அங்கு சென்றுவிடும். வரும்போது தங்கத்தோடு தரையிறங்கலாம். ஒரு முறை தங்கக்கடத்தலுக்காக பயணிக்க பயணி ஒருவருக்கு மிகக்குறைந்தபட்சம் 50 ஆயிரத்திலிருந்து 1 இலட்சம் வரை செலவு செய்கிறார்கள். தங்கக்கடத்தலில் ஈடுபடும் நபருக்கு கடத்தும் தங்கத்தின் அளவைப் பொறுத்து டிரிப் பங்கு ஒன்றுக்கு குறைந்தபட்சம் பத்தாயிரம் முதல் ஒரு இலட்சம் வரையில் கூலி பேசப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

கடத்தல் அதிகரிப்பது ஏன்?

”இந்தியாவில் உள்ள எந்தவொரு விமான நிலையத்திலிருந்தும் ஒரு குண்டூசியைக்கூட வெளியே கடத்தி சென்றுவிட முடியாது. அந்த அளவிற்கு கண்காணிப்பு முறை நவீனமய மாக்கப்பட்டிருக்கிறது. தினமும் சிக்குவது சிறிய வியாபாரிகள். பெரிய திமிங்கலங்கள் சத்தம் போடாமல் தப்பி வருகின்றன.” என பகீர் கூட்டினார் விமான நிலைய ஊழியர் ஒருவர். ”நூதனமுறையில் தங்கத்தை கடத்தினார்கள் என எல்லோரது கவனமும் ஒருவர் பக்கம் குவிந்து கிடக்கையில், சத்தமில்லாமல் பெரிய பார்ட்டி எளிதில் தப்பித்து போக வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? அந்த பெரிய பார்ட்டி தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே, போலீசாரின் கவனச் சிதறலுக்காக சிறிய பார்ட்டியை தூண்டில் முள் போல ஏன் அவர்களே பயன்படுத்தி யிருக்கக் கூடாது?” என அவர் எழுப்பிய கேள்விகள் கிறுகிறுக்க வைக்கின்றன. எந்த நாளில், எந்த டூட்டியில் எந்த அதிகாரி பணியில் இருப்பார். அந்த நாளில் அவர் இருக்கும் நேரத்தில் பயண திட்டத்தை வகுத்துக்கொண்டு சத்தமே இல்லாமல் காரியத்தை முடித்துவிட்டு சென்றுவிடுவார்கள். மாதம் ஒருமுறை இவ்வாறு நடந்தால் போதுமே. ஒரே ட்ரிப்பில் கிலோ கணக்கில் கைமாற்றிவிடலாம்.” என்கிறார்.

மசாஜ் பண்ணவா போறாரு….

”போன வாரம்கூட தாய்லாந்து போய்ட்டு வந்தேன். போக, வர டிக்கெட் போட்டு கொடுத்துருவாங்க. அங்கே தங்க ரூம் புக் பண்ணிடுவாங்க. சாப்பாடு செலவுக்கு கையில காசும் கொடுத்துருவாங்க. வெறும் கையோடு போவோம். அங்க ஒரு ஆளு சூட்கேஸ் கொடுத்து விடுவாரு. அத இங்க சேர்க்கனும். அரை நாளில் 5000 போதாதா? கஸ்டம்ல எதுக்கு போறீங்கனு குடஞ்சி குடஞ்சி கேட்பாங்கதான். மசாஜ் பண்ணிக்க போனேனு சொல்லிட்டு போகவேண்டிதான்.” என்கிறார் ’குருவி’யாக செயல்படும் நண்பர் ஒருவர். விமான நிலையம் சார்ந்த காண்டிராக்ட் நிறுவன ஊழியராக பணியாற்றிக்கொண்டே, சைடு பிசினசாக இந்த வேலையையும் பார்த்து வருகிறார் என்பதுதான் இதில் கவனிக்கத்தக்க விசயம் றீ

– வே.தினகரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.