வீட்டு பத்திரத்தை தர மறுத்த பிரபல வங்கி ! அதிர்ச்சி வைத்தியம் தந்த நீதிமன்றம் !
வீட்டு பத்திரத்தை தர மறுத்த பிரபல வங்கி ! அதிர்ச்சி வைத்தியம் தந்த நீதிமன்றம் !
வீடியோவை காண
வங்கியில் அடமானமாக வைத்த வீட்டுப்பத்திரத்தை, வங்கிக்கடனை முழுமையாக செலுத்திய பின்பும் திருப்பித் தர மறுத்த கரூர் வைஸ்யா வங்கி நிர்வாகத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் விதமாக அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

அதன்படி, சம்பந்தபட்ட வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று, அவரது சொத்து பத்திரங்களை வங்கியின் தடையில்லா சான்றுடன் வங்கி அதிகாரிகள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும்; இரண்டுநாளில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பிணைத்திருந்த பத்திரப்பதிவை ரத்து செய்து தரவேண்டும் என்றும்; வாடிக்கையாளரை அலைக்கழித்த குற்றத்திற்காக சம்பந்தபட்ட வங்கி மேலாளர் தனது சம்பள பணத்திலிருந்து 25,000 ரூபாயை வழங்க வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பித்திருந்தார்கள். அதன்படி, கடந்த பிப்-17 அன்று வங்கி அதிகாரிகளும் ஒப்படைத்திருக்கிறார்கள்.
தென்காசி சிவகிரியைச் சேர்ந்த மாரித்துரை என்பவர் தொடர்ந்த வழக்கில்தான், தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி லட்சுமிநாராயணன் ஆகியோர் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தனர்.
அதிா்ச்சி வைத்தியம் தந்த நீதிமன்றம்
கடந்த 2014 இல், மர டிம்பர் அமைப்பதற்காக கரூர் வைஸ்யா வங்கியின் ராஜபாளையம் கிளையில், 15 இலட்சம் கடன் பெற்றிருக்கிறார் மாரித்துரை. அதனை தொடர்ந்து, மேலும் 15 இலட்சம் ஓ.டி. கடனும் பெற்றிருக்கிறார். 2019 கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில் நசிவடைந்து கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிக்கலை சந்தித்திருக்கிறார். 2021 இல் வங்கியில் அவர் பிணைத்திருந்த வீடு உள்ளிட்ட சொத்துக்களை ஜப்தி செய்ய வங்கி நிர்வாகம் முயற்சித்த நிலையில், கடனுக்காக சொத்தை இழக்க விரும்பாத மாரித்துரை நீதிமன்றத்தின் உதவியை நாடி, அசல் வட்டியுடன் சேர்த்து 42 இலட்சத்தை நான்கு தவணைகளில் திரும்ப செலுத்துவதாக ஒப்புக்கொண்டு அதன்படி, ஒரு ரூபாய் பாக்கியில்லாமல் கட்டியுமிருக்கிறார்.
இதற்கிடையில், வங்கியில் பிணைத்திருந்த சொத்து ஆவணங்களை திரும்பக் கேட்டபோதுதான், அவரது கணக்கில் இன்னும் 4 இலட்ச ரூபாய் அளவுக்கு நிலுவை இருக்கிறது. அதனையும் கட்டி முடித்தால்தான் பத்திரங்களை தர முடியும் என்றும் கோர்ட் பணத்தை கட்ட சொல்லித்தானே சொன்னது. சொத்து பத்திரத்தை திரும்ப தரவேண்டுமென்று சொல்லவில்லையே என்று திமிராக பதிலளித்திருக்கிறது, வங்கி நிர்வாகம்.

இதற்கு எதிராகத்தான் வழக்கு தொடர்ந்து, வங்கியின் அடாவடிக்கு நீதிமன்றத் தீர்ப்பால் சம்மட்டி அடி வாங்கிக் கொடுத்திருக்கிறார், மாரித்துரை. இவருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் கருப்பசாமி பாண்டியன், தேவராஜ் மகேஷ் மற்றும் கே.நீலமேகம் ஆகியோர் உடனிருந்து உதவியிருக்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கடந்த அங்குசம் இதழில் சிட்டி யூனியன் வங்கியினால், பாதிக்கப்பட்டு சொத்துக்களை இழந்த கேசவபாண்டியன் விவகாரத்தை பதிவு செய்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக, மாரித்துரைக்கு நேர்ந்த கொடுமையை கண்டிருக்கிறோம். இந்த செய்திகளையெல்லாம் படித்துவிட்டு, வங்கியின் அடாவடியால் பாதிக்கப்பட்ட பலரும் அங்குசத்தை தொடர்பு கொண்டு வருகிறார்கள். அவர்களின் சட்டப்போராட்டத்தில் அங்குசம் துணை நிற்கும். உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.
— அங்குசம் புலனாய்வுக்குழு.