போர்ஜரி குற்றச்சாட்டு … போலீசு விசாரணை வளையத்தில் பிரபல வங்கியின் சி.இ.ஓ. !
போர்ஜரி குற்றச்சாட்டு … போலீசு விசாரணை வளையத்தில் பிரபல வங்கியின் சி.இ.ஓ. !
“18 ஆண்டு உழைப்பு … கோடிகளில் பிசினஸ் … எல்லாமே போச்சு ! தெருக்கோடியில் நிறுத்திய பிரபல வங்கி !” என்ற தலைப்பில், அங்குசம் இணையம் மற்றும் அச்சு இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
சிட்டி வங்கி யூனியனின் மோசமான கடன் வழங்கும் அணுகுமுறையால் பாதிக்கப்பட்ட சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்காலைச் சேர்ந்த தொழிலதிபர் மு.கேசவபாண்டியன் நடத்திய நீண்ட சட்டப்போராட்டத்தின் விளைவாக, கடன் வழங்கியதில் முறைகேடாக நடந்து கொண்டதற்காக, சிட்டி யூனியன் வங்கியின் திருச்செங்கோடு கிளை மேலாளர் உள்ளிட்டு உயர் அதிகாரிகள் வரையில் ஆறு பேருக்கு எதிராக நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் எஃப்.ஐ.ஆர். (14/2020 ) பதிவாகியிருக்கிறது.

இதே விவகாரத்தில் செக் மோசடி, போர்ஜரி கையெழுத்து போட்டு கோயம்புத்தூர் கடன் வசூல் தீர்ப்பாயத்தில் போர்ஜரி ஆவணங்களை சமர்ப்பித்திருப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக கோயம்புத்தூர் நகர குற்றப்பிரிவில் அடுத்து ஒரு எஃப்.ஐ.ஆர் (74/2024) பதிவாகியிருக்கிறது.
அடுத்தடுத்து சிட்டி யூனியன் வங்கிக்கு எதிராக இரண்டு எஃப்.ஐ.ஆர்.கள் பதிவான நிலையில், இந்த இரண்டு எஃப்.ஐ.ஆர்.களுக்கு எதிரான விசாரணைக்கு சிட்டி யூனியன் வங்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இடைக்கால தடையும் பெற்றிருந்தது.
மேற்படி, வழக்கின் தொடர் விசாரணை கடந்த ஜனவரி-22 மற்றும் பிப்ரவரி -06 ஆகிய தேதிகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் பி.வேல்முருகன் முன்பாக அடுத்தடுத்து விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் தடை விதிக்க முகாந்திரமில்லை என்பதை பதிவு செய்ததோடு, மேற்படி தடைகளை நீக்கியும், மூன்று மாத காலத்தில் உரிய விசாரணையை நடத்தி முடிக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.
குறிப்பாக, இந்த விவகாரத்தில் வாய்மொழியாக கேட்டுக் கொண்டதற்கிணங்க கடன் வழங்கியதாக சொல்கிறார்கள்;
என்.பி.ஏ. கணக்கில் சேர்ந்தால் வங்கிக்கு சிக்கல் என்பதால் அவர்களாகவே லோன் கொடுத்து அதிலிருந்து வட்டியை பிடித்தம் செய்து கொள்கிறார்கள்;
இப்போது வரையில் என் கையில் ஒரிஜினல் செக் இருக்கும்போது, அதே செக்கை பயன்படுத்தி எனது அக்கவுண்டில் இருந்து பணத்தை எடுத்திருக்கிறார்கள்;
எனது கையெழுத்து மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களின் கையெழுத்துக்களை போலியாக அவர்களே போட்டுக் கொண்டு, கோவை கடன் தீர்ப்பாயத்தில் மோசடியான ஆவணங்களை சமர்ப்பித்திருக்கிறார்கள்;
என்னை பழிவாங்கும் நோக்கத்தில் கடன் வழங்கும்போது அவர்களே மதிப்பிட்ட 5.85 கோடி மதிப்பிலான சொத்துக்களை, வெறும் 1.40 கோடிக்கு ஏலம் விட்டு என்னை நட்டப்படுத்திவிட்டார்கள்.

நிதித்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களையும் மீறு மோசடியான முறையில் எனது கணக்கை என்.பி.ஏ. கணக்காக காட்டியிருக்கிறார்கள் …
என்பதாக, சிட்டி யூனியன் வங்கிக்கு எதிராக, கேசவபாண்டியன் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே பகீரூட்டும் வகையில் அமைந்திருந்தன.
இந்த பின்னணியில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சுதந்திரமான முறையில் போலீசார் விசாரணையை நடத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்த சமயத்தில், போலீசாரின் விசாரணைக்கு மீண்டும் முட்டுக்கட்டை போடும் வகையில், சிட்டிய யூனியன் வங்கி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த மார்ச் 05 ஆம் தேதி நீதியரசர் ஜி.கே. இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
சிட்டி யூனியன் வங்கி தலைமை நிர்வாகி காமகோடி உள்ளிட்ட வங்கி அதிகாரிகளுக்கு எதிராக நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர். மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் அந்த எஃப்.ஐ.ஆரையே ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனர். சிட்டி யூனியன் வங்கி கோரியிருந்தது போலவே, மேற்படி எஃப்.ஐ.ஆர். மீதான விசாரணைக்கு மீண்டும் இடைக்கால தடை விதித்ததோடு, எஃப்.ஐ.ஆர்.ஐ ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கை குறித்து முடிவெடுக்க கேசவபாண்டியனுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டிருந்தார், நீதியரசர் ஜி.கே.இளந்திரையன். இந்த வழக்கின் விசாரணை, ஏப்ரல்-09 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், நீதியரசர் பி.வேல்முருகன் கடந்த ஜனவரி 22 அன்று பிறப்பித்திருந்த உத்தரவில், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு குற்ற எண்:14/2020 ன் படி, பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர். இலிருந்து சிட்டி யூனியன் வங்கியின் தலைமை செயல் அதிகாரி காமகோடி மற்றும் மோகன் ஆகியோர்களது பெயர்களை வழக்கிலிருந்து நீக்கியது முறைகேடானது என்று கேசவபாண்டியன் முன்வைத்திருக்கும் புகார் குறித்து மூன்று மாத காலத்தில் விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

மூன்று மாதங்களை கடந்த நிலையிலும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நாமக்கல் போலீசார் உரிய விசாரணையை தொடங்காத நிலையில், போலீசாருக்கு நினைவூட்டியும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியுமிருந்தார் கேசவபாண்டியன். அவரது தொடர் முயற்சிகளையடுத்து, இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் காமகோடி மற்றும் மோகன் ஆகியோருக்கு சம்மன் கொடுத்து விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும்; நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இருதரப்பினரையும் ஆஜர்படுத்தி விசாரிக்கும் வகையில், ஏப்ரல்-09 அன்று இருதரப்பையும் நாமக்கல் குற்றப்பிரிவு போலீசு அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி சம்மன் வழங்கியிருக்கிறார்கள்.
சிட்டி யூனியன் வங்கிக்கு எதிரான நீதிமன்ற வழக்கும், நாமக்கல் குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையும் ஏப்ரல்-09 அன்று ஒரே நாளில் விசாரணைக்கு வந்திருக்கின்றன. மிக முக்கியமாக, இந்த வழக்கில் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் காமகோடி போலீசு விசாரணைக்கு நேரில் ஆஜராக இருப்பதும் கவனத்தை பெற்றிருக்கிறது.
”வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான்” என்ற கதையாக, வங்கி நிர்வாகம் வாடிக்கையாளரை ஏமாற்றுமா? என்று வெள்ளந்தியாக போலீசார் கேள்வி கேட்டிருந்த நிலையில், இந்த வழக்கிலிருந்து பின்வாசல் வழியாக, காமகோடி விடுவிக்கப்பட்டிருந்த நிலையில்,. இந்தமுறையாவது, நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் எந்தவிதமான அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல், நியாயமான விசாரணையை நடத்த வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு” என்கிறார், கேசவபாண்டியன்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக தற்போது செயல்பட்டுவரும் டாக்டர் உமா, அதிரடிகளுக்கு பெயர் போனவர். அன்றாடம் அவர் அலுவல் விசயமாக செல்லும் இடங்களை ஊடகங்களும் பின்தொடர்வார்கள்.
ஒழுங்காக பணியாற்றாத அதிகாரிகளை அந்த இடத்திலேயே கடிந்து கொள்வது தொடங்கி, நடுரோட்டில் வண்டியை நிறுத்தி லேட்டாக வந்த ஆம்புலன்ஸ் டிரைவரை லெஃப்ட் ரைட் வாங்குவது வரையில் பல அதிரடிகள் இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த அளவுக்கு கண்டிப்புக்கு பெயர் போன, மாவட்டத்தில்தான், அவரது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள போலீசு நிலையம் ஒன்றில் தான் சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநருக்கு எதிரான விசாரணையும் நடைபெற இருக்கிறது. அவரும் நேரில் ஆஜராக இருக்கிறார்.
பார்ப்போம். இந்தமுறையாவது சட்டம் தன் கடமையை சரியாக செய்கிறதா, என்று ?
– அங்குசம் புலனாய்வுக்குழு.
City Union Bank is nothing but a kandhu vatty group.
While sanctioning the loan itself, they pick the best properties and calm customers, so as to massage their minds to get more loans to capture the properties without any tension. I am very happy to say like ” Puratchi kalaignar Vijayakanth ” Mr. Kesavapandian has come to release so many families from CITY UNION BANK ‘ s cunning plans. If the Tamilnadu government really helps for the normal people, it has to come voluntarily and help Mr. Kesavapandian to get succeeded against City Union Bank.
” உண்மை நிச்சயம் வெல்லும் “.
கடன் வாங்கிட்டு கட்டவில்லை எனில் எப்படி. உங்க கட்டுரை பிதற்றலாக உள்ளது. கடன் வாங்கி தற்போது பாதிப்பு க்கு ஆளாகிஉள்ள தாக கூறபடும் நபர் உண்மையில் எப்படி பட்டவர் என அவரது ஊரில் விசாரித்து எழுதவும்