போட்டித் தேர்வுகளுக்கு மட்டுமல்ல … போக்கிரிகளுக்கும் பாடம் நடத்தும் எஸ்.பி. செல்வநாகரத்தினம் !
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பலரும் அடுத்தடுத்து குண்டாஸில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். கடந்த ஜனவரி 2025 தொடங்கி ஏப்ரல்-08 வரையில் 18 பேர் குண்டாஸில் சிறைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ரவுடிகளின் நடவடிக்கைகளை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., உத்தரவின் பேரில், தனிப்படைகள் உருவாக்கப்பட்டு, சிறப்பு தீவிர வேட்டை (Special Drive) களை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
முதற்கட்டமாக சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கண்டறிந்து, திருச்சி மாவட்டத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 57 பேரில், போலீசின் கடுமையான எச்சரிக்கையையும் மீறி, தொடர்ச்சியாக குற்றங்களில் ஈடுபடுவதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவால் (OCIU) கண்டறியப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தடுப்பு காவலில் சிறைப்படுத்த எஸ்.பி. பரிந்துரைத்ததன் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் ஒப்புதலுடன் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
வையம்பட்டி காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் சிக்கிய கரூர் விஸ்வநாதபுரியைச் சேர்ந்த செல்லத்துரை (தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 6-க்கும் அதிகமான வழக்குகளை கொண்டவர்); முசிறி காவல் நிலையத்தில் போதைப்பொருள் வழக்கில் கைதான தாத்தங்கார்பேட்டையைச் சேர்ந்த சரவணன்; தொட்டியத்தை சேர்ந்த விஜய்; துறையூரைச் சேர்ந்த சூர்யபிரகாஷ்; முசிறி போலீசாரால் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தச்சன்குறிச்சியை சேர்ந்த மணிராஜ்; திண்டுக்கல்லை சேர்ந்த தங்கமாயன்; முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைதான சின்னத்தம்பி மற்றும் மதன்குமார்; மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் சிக்கிய தனியார் பள்ளியின் தாளாளர் வசந்தகுமார்; துப்பாக்கியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட குழுமணியைச் சேர்ந்த சக்திவேல் என்ற ஆட்டோ சக்திவேல் (A Category சரித்திர பதிவேடு குற்றவாளி); கஞ்சா விற்பணையில் ஈடுபட்ட, ராம்ஜிநகர் மாயகிருஷ்ணன் ( Category சரித்திர பதிவேடு குற்றவாளி. தமிழகம் முழுவதும் பத்துக்கும் அதிகமான வழக்குகளை கொண்டவர்).

மணிகண்டம் காவல் எல்லையில் டிபன் கடை நடத்தி வருபவரிடம் தகராறில் ஈடுபட்ட மணப்பாறை சதீஸ்குமார்; மணிகண்டம் போலீசு சரித்திரப்பதிவேடு குற்றவாளி கடவூரைச் சேர்ந்த இளையராஜா; திருவரம்பூர் காவல் நிலையத்தில் பதிவான கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான அரியமங்கலத்தை சேர்ந்த நிசாந்த் (எ) பன்னீர்செல்வம், பிரசன்னா, குணசேகரன் ; துவாக்குடி காவல் எல்லையில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டிய வழக்கில் கைதான துவாக்குடி சாந்தகுமார்( பல்வேறு வழக்குகளை பின்னணியாக கொண்டவர்); மணப்பாறை காவல் நிலையத்தில் பதிவான குற்ற வழக்கில் சிக்கிய யாக்கோப் @ லெனின் விஜய்பாஸ்கர் உள்ளிட்டு 18 பேர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களை போன்று, திருச்சி மாவட்டத்தில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் யாரேனும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும்பட்சத்தில், பொதுமக்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 8939146100-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் கொடுப்போரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும் என்றும் எஸ்.பி. அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.
திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக கடந்த ஜனவரி-06 அன்றுதான் பொறுப்பேற்றிருந்தார், செ.செல்வநாகரத்தினம் ஐ.பி.எஸ். அவர் பதவியேற்ற மூன்று மாத காலத்தில் சத்தமில்லாமல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதற்கு முன்னர், தமிழ்நாடு போலீஸ் அகாடெமியில் சுமார் 5000 –க்கும் அதிகமான போலீசு அதிகாரிகளுக்கு பயிற்சியை வழங்கியவர். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்புகளை நடத்தியிருக்கிறார். விகடன் குழுமத்துடன் இணைந்து, வழிகாட்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கியிருக்கிறார். தற்போது, திருச்சி மாவட்டத்தில் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளுக்கு, ”போலீசு பாடத்தை” நடத்திக் கொண்டிருக்கிறார்.
— ஆதிரன்.