திராவிட மாடலும் திருச்சியில் வாழ்ந்து மறைந்த அக்கா செண்பகவள்ளியும் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திராவிட மாடலும் திருச்சியில் வாழ்ந்து மறைந்த அக்கா செண்பகவள்ளியின் நினைவலைகளும் ! பதவியும் பவிசும் வந்தபிறகு, தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களைக்கூட கைவிடத் துணிந்த இந்த காலத்தில், உடன் பிறந்த சகோதரிக்காக தம்பிமார்கள் ஒன்று சேர்ந்து நினைவேந்தல் நிகழ்வை நிகழ்த்திய சம்பவம் நெகிழ்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், கீழக்கல்கண்டார்கோட்டை கிராமத்தில் வாழ்ந்து மறைந்த திராவிட இயக்கப் பற்றாளர் மா.திருமலை – லோகம்பாள் தம்பதியினரின் மூத்த மகளாகப் பிறந்தவர் சண்பகவல்லி (எ) செண்பகவள்ளி. திராவிடர் கழகத்தின் செயல்வீரர் ஓ.வேலு என்பவரை 1955 ஆம் ஆண்டில் தாலிமறுத்து சுயமரியாதை திருமணம் செய்து கொண்டவர். 87-ஆம் வயதில், கடந்த ஜூன்-04 அன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

குடும்பத்தில் மூத்த மகளாகப் பிறந்து, தமக்கையராக மட்டுமல்லாது தாயாகவும் இருந்து தங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கிய அக்கா செண்பகவள்ளியின் நினைவை போற்றும் விதமாக, நினைவேந்தல் நிகழ்வை நடத்தினார்கள் அவரது உடன்பிறந்த சகோதரர்கள். ஜூன்-29 அன்று திருச்சி அருண் விடுதி – மேக்ஸி அரங்கில் அரங்கம் கொள்ளாத நிகழ்வாக நடந்தேறியது.

அக்கா செண்பகவள்ளி பட திறப்பு விழா
அக்கா செண்பகவள்ளி பட திறப்பு விழா

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதற்காக ஒருநாளும் கவலை கொண்டதில்லை, செண்பகவள்ளி. தனக்கு அடுத்துப் பிறந்த 6 தம்பியர்கள் 1 தங்கையையும் தமது பிள்ளைகளாவே பாவித்தவர்.“புள்ளப் பெக்க வக்கில்லாமல் மலடியா இருக்க உனக்கு வெட்கமில்லையா” என்று குழாயடிச் சண்டையில், அண்டை வீட்டுப் பெண்களின் கேலிப் பேச்சுக்கு ஆளான போதும், “பெரியாருக்கு பிள்ளை இல்லை, பெரியார் எதில் குறைஞ்சு போயிட்டாரு? பேரறிஞர் அண்ணாவுக்கு குழந்தை இல்லை, அண்ணா என்ன குறைஞ்சி போயிட்டாரு? அவ்வளவு ஏன் கோடிக்கணக்காக பணம் வச்சிருக்கிற எம்.ஜி.யாருக்கு பிள்ளை இல்லை. அவரு எதில குறைஞ்சி போயிட்டாரு? எனக்குப் பிள்ளை இல்லைதான் நான் எதில் குறைஞ்சி போயிட்டேன்?”னு துணிச்சலோடு எதிர்வினையாற்றிய திராவிட இயக்க சிந்தணையாளர் அக்கா செண்பகவள்ளி.

வீடியோ

1980 இல் திராவிடர் கழகத் திருச்சி நகரத் துணைத் தலைவராக அக்கா செண்பகவள்ளி கணவர் வேலு பொறுப்பில் இருந்த சமயம். திராவிடர் கழகத்தின் சார்பில் இளைஞர்கள் சைக்கிள் பேரணி நடைபெற்றது. வாடகைக்கு 50 சைக்கிள்களை எடுத்துக் கொடுத்திருக்கிறார், வேலு. புத்தூர் அக்ரஹாரம் அருகில் மூண்ட கலவரத்தில், வாடகைக்கு எடுத்துச் சென்ற சைக்கிள்கள் வழக்கில் சிக்கி போலீஸ் வசம் போனது. வழக்கு முடிந்துதான் சைக்கிளைத் திருப்பித் தருவோம் என போலீசு மறுக்கிறது.

சைக்கிள் கடைக்காரர் கொடுத்த நெருக்கடி தாளாமல், தமது வீட்டை அப்போதைய காலத்திலேயே இருபதாயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்து 50 சைக்கிள்களுக்கான தொகையை செலுத்தியிருக்கிறார் வேலு. பின்னாளில், அந்த வீடும் ஏலத்திற்கு வர, தம்பி நெடுஞ்செழியன் தன் சம்பாத்தியத்தில் அந்த வீட்டை திருப்பித் தந்து அக்காவை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.

இரண்டு வயது முதலாகவே, தம்பி நெடுஞ்செழியனை தன் சொந்தப் பிள்ளையாகவே பாவித்து வளர்த்து வந்தவர் செண்பகவள்ளி. பட்டங்கள் பல பெற்று, பேராசிரியராக பணி உயர்ந்து, சமூகத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தில் அமர வைத்து அழகு பார்த்தவர். அவரது உச்சங்கள் பலவற்றை நேரில் கண்ணுற்று மனம் மகிழ்ந்தவர்.

அக்கா செண்பகவள்ளி பட திறப்பு விழா
அக்கா செண்பகவள்ளி பட திறப்பு விழா

கீழகல்கண்டார்கோட்டையில் வாழ்ந்த திராவிட சிந்தணையாளர் திருமலை குடும்பம் என்ற நன்மதிப்புக்கு எந்த வகையிலும் பங்கம் வராத வகையில், தந்தையின் வழி நடந்து தன்னைப் போலவே, தம்பிமார்கள் ஆறு பேருக்கும் தாலிமறுப்பு திருமணங்களை நடத்திக்காட்டியவர். அண்ணாவின் மறைவுக்கும், தந்தை பெரியாரின் மறைவுக்கும் குடும்பமாகச் சென்று இறுதி நிகழ்வில் பங்கேற்றார் என்பதும்; திராவிடர் கழக, திமுக மாநாட்டிற்கு கட்டிச்சோறு கட்டிக்கொண்டு தம்பிமார்களோடு பயணப்பட்டவர் என்பதெல்லாம் அக்கா செண்பகவள்ளியின் கொள்கைப்பற்றை பறைச்சாற்றுகின்றன.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கலவரத்தில் சிக்கிய சைக்கிள்களுக்காக வீட்டை அடமானம் வைக்கும் கணவர் வேலுவின் முடிவுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் உடன்பட்டார் என்பது ஒரு விசயம். அதே வீடு ஏலத்திற்கு வந்து எந்த தம்பியின் முயற்சியால் அந்த வீட்டைத் திருப்பினாரோ, அதே தம்பிக்காக ஆசையாய் திருப்பிய வீட்டை விற்று அதே தம்பியின் திருமணத்தை நடத்திப் பார்த்து அகமகிழ்ந்தவர் அக்கா செண்பகவள்ளி என்பதை அறியும்போது மெய்சிலிர்க்கிறது.

இரண்டு வயது முதலாகவே, செண்பகவள்ளியின் அக்காவின் அரவணைப்பில் வளர்ந்தவர்; தம்பி என்ற உறவு மறைந்து செண்பகவள்ளியின் மகனாகவே அறியப்பட்டவர், அக்காவின் கடைசி தம்பி வேறு யாறுமல்ல; மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியின் தமிழ்த்துறை விரிவுரையாளராக பணியில் சேர்ந்து நிறைவாக, திருச்சி தூயவளனார் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியாகப் பணியாற்றி பணி நிறைவை செய்த பேரா.நெடுஞ்செழியன்தான் அந்த கடைசித் தம்பி.

அக்கா செண்பகவள்ளி பட திறப்பு விழா
அக்கா செண்பகவள்ளி பட திறப்பு விழா

தம்பிகள் ஆறு பேரில், இருவர் பேராசிரியர்கள்; ஒருவர் பொறியாளர்; மற்றொருவர் தணிக்கையாளர்; இரயில் நிலைய கண்காணிப்பாளர்; படைக்கலத் தொழிற்சாலை அதிகாரி என தம்பிகள் அனைவருக்குமே உயர்கல்விக்கான வாய்ப்பை வழங்கி சமூகத்திலும் பொருளாதாரத்திலும் நல்ல நிலைக்கு உயர்த்தி மனமகிழ்ந்தவர் அக்கா செண்பகவள்ளி.

பேராசிரியர் பணி ஓய்வுக்குப்பிறகும், அங்குசம் இதழின் பொறுப்பாசிரியராக சமூகப்பணி தொடரும் பேராசிரியர் நெடுஞ்செழியன், “அக்காவின் நினைவலைகள்” என்ற சிறு நூலை தொகுத்தளித்திருக்கிறார். அக்கா – தம்பி என்ற குடும்ப ரீதியான உறவை மையப்படுத்தியதோடல்லாமல், அதன்வழியே திராவிட இயக்கம் சார்ந்து தம் குடும்பமும் தமக்கையும் வாழ்ந்த மகிழ்வான தருணங்கள் ஒவ்வொன்றையும் திரைப்படக் காட்சிகளைப் போலவே நம் கண் முன் கொண்டு நிறுத்திவிடுகிறது அச்சிறு நூல்.

“அக்கா என்பது எல்லோருக்கும் அஃது ஒற்றைச் சொல். எங்களுக்கு அக்கா என்பது தாய், தந்தை, மூத்த தமக்கை, தோழி, எங்களைக் காத்த காவல் அரண் என்னும் பன்முகம் கொண்ட சொல்.” என்கிறது, நூலில் இறுதியில் இடம்பெற்றிருக்கும் ஓர் நெகிழ்வான வாக்கியம் ஒன்று.

பேராசிரியர் நெடுஞ்செழியன் தொகுத்த “அக்காவின் நினைவலைகள்” நூலை வெளியிட்டும், மறைந்த செண்பகவள்ளி அவர்களின் உருவப்படத்தைத் திறந்து வைத்தும் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார், திராவிட இயக்கச் சிந்தனையாளர் புலவர் க.முருகேசன்.
மறுமலர்ச்சி திமுகவின் சார்பில் வெ.அடைக்கலம், ஜெயபால், டிடிசி சேரன், மணவை தமிழ் மாணிக்கம், அமமுகவைச் சேர்ந்த தலைமைக் கழகப் பேச்சாளர் மனோகரன், கல்வியாளர் இராஜலிங்கம், பேராசிரியர் ஆநிறைச்செல்வன் உள்ளிட்டு நூற்றுக்கும் அதிகமான திக, திமுக சார்ந்த திராவிட இயக்கச் சிந்தனையாளர், பற்றாளர்கள் பங்கேற்புடன் நினைவேந்தல் நிகழ்வு நிகழ்ந்தேறியது.

அக்காவுக்கு மிகவும் பிடித்தமான, அவரது கைப்பக்குவத்தில் செய்து வழங்கியதாற்போலவே, மட்டன் சுக்காவும், மட்டன் குழம்பும், சிக்கன் கிரேவியுடன் அமைந்த மதிய விருந்து பங்கேற்பாளரின் வயிற்றை மாத்திரமல்ல; மனதையும் இட்டு நிரப்பியது.
திராவிட இயக்க செயல்வீரர் ”திருமலை குடும்பம்” என்பதுதான் இவர்களது ஒற்றை அடையாளம். அன்று முதல் இன்று வரையில் அனைவரும் புரோகிதர் பங்கு பெறாத, தாலி மறுப்பு திருமணங்களைத்தான் நடத்தி வருகிறார்கள். மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த பேத்தி ஒருவரின் பெயர் “தமிழ்நாடு”.

”திராவிட மாடல்” என்ற சொல்லின் அர்த்தம் புரியாமல்; அதன் சமூக உள்ளடக்கம் உணராமல், அரைவேக்காடுகள் பலரும் எள்ளி நகையாடிவரும் இந்த சூழலில், திருமலை குடும்பத்தின் பின்னணியும் அக்கா செண்பகவள்ளியின் நினைவலைகளும் நம் கவனத்தை பெறுகின்றன.

– வே.தினகரன்.

 

வீடியோ

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.