80 வயதில் கொலைகாரனாக மாறிய தந்தை ! பலியான மகன் ! குடும்பத்தை சீரழித்த குடி !
குடிபோதையில், தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பெற்ற மகனையே மண்வெட்டியால் கழுத்தை வெட்டிய நிலையில், 80 வயதான தந்தையை கொலைகாரனாக மாற்றியிருக்கிறது, குடிப்பழக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தோணுகால் மேற்கு தெருவை சேர்ந்த ராமசாமி என்பது மகன் பிரியாதன்(82). இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதிக்கு மகேந்திரன், பாலமுருகன் என்ற இரண்டு மகன்கள். சாந்தி கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகன்கள் இருவரும் கட்டிட தொழிலாளி, இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகேந்திரன் சென்னையில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
மகேந்திரன் குடும்பம் தோணுகாலில் உள்ளது. பாலமுருகன் குடும்பத்துடன் உள்ளூரில் இருந்து கட்டிட தொழில் செய்து வருகிறார். கட்டிட தொழிலாளியான பாலமுருகனுக்கு திருமணமாகி கற்பகம் என்ற மனைவியும் , இரண்டு குழந்தைகள் உள்ளனர். கற்பகத்திற்கு காது கேட்காது என்று கூறப்படுகிறது. மகேந்திரன் மற்றும் பாலமுருகன் இருவர் வீடும் அடுத்தடுத்து உள்ளது. பாலமுருகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் மது அருந்திவிட்டு அடிக்கடி வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
முதியவர் பிரியாதன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை அவரது மூத்த மகன் வீட்டில் தான் இருந்துள்ளார். முதியவர் பிரியாதனுக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்ததால், மூத்த மகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இளைய மகன் வீட்டில் வந்து இருந்துள்ளார்.
டிசம்பர்-15 அன்று இரவு முதியவர் பிரியாதன், அவரது இளைய மகன் பாலமுருகன் இருவரும் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது முதியவர் பிரியாதன், நான் தான் குடித்து கெட்டுப் போய் விட்டேன், நீயாவது ஒழுங்காக வேலைக்கு செல், குடும்பத்தைக் காப்பாற்று என்று கூறியுள்ளார்.
இதனால் தந்தை மகனுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தான் குடிப்பதை பற்றி இனி கேட்கக்கூடாது, கேட்டால் கொன்று புதைத்து விடுவேன் என்று பாலமுருகன் கூறியது மட்டுமின்றி, அவரது தந்தை பிரியாதன் கழுத்தைப் பிடித்து நெரித்தாக, கூறப்படுகிறது.
இதையடுத்து பாலமுருகன் தூங்கச் சென்ற நிலையில், இன்று அதிகாலையில் ஆத்திரத்தில் இருந்த முதியவர் பிரியாதன், வீட்டிலிருந்த மண்வெட்டியை எடுத்து, பாலமுருகன் கழுத்து பகுதியில் வெட்டி படுகொலை செய்துவிட்டு , அங்கிருந்து நடந்தே கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் வந்துள்ளார். தன் மகனை வெட்டி கொலை செய்த தகவலை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை பார்த்த அவரது குடும்பத்தினரும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் மற்றும் மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பாலமுருகன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து முதியவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உண்மையில் மது போதையில் தந்தை மகனுக்கு ஏற்பட்ட வாக்குவாதம் தான் கொலைக்கு காரணமா? அல்லது வேறு எதுவும் காரணம் இருக்கிறதா ? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது போதையின் காரணமாக மகன் உயிரிழக்க, தந்தை குற்றவாளியாக மாறிய சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
— மணிபாரதி.