”என்னை ஏமாற்றியவர்கள்” – வில்லனான தயாரிப்பாளரின் ‘முதல்பக்கம்’
‘சின்னதம்பி புரொடக்சன்ஸ்’ பேனரில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரிப்பில் உருவாகி, வரும் ஆகஸ்ட்.01—ஆம் தேதி ரிலீசாகவுள்ள படம் ‘சென்னை ஃபைல்ஸ் –முதல் பக்கம்’. சாண்டி ரவிச்சந்திரன் இணைத் தயாரிப்பாளராக இருக்கும் இப்படத்தை அனீஸ் அஷரஃப் டைரக்ட் பண்ணியுள்ளார். வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உட்பட பலர் நடித்திருக்கும் ‘முதல் பக்கம்’ மூலம் வில்லனாக அறிமுகமாகிறார் படத்தின் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ். ஒளிப்பதிவு : அரவிந்த், இசை : ஏ.ஜி.ஆர்., எடிட்டிங் : வி.எஸ்.விஷால், ஸ்டண்ட் : நூர், பி.ஆர்.ஓ : நிகில் முருகன்.
இப்படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா, ஜூலை.19-ஆம் தேதி இரவு சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதில் ஹீரோ, ஹீரோயின், ஸ்டண்ட் மாஸ்டர், பின்னனிப் பாடகி கரிஷ்மா ரவிச்சந்திரன், டிரெண்ட் மியூசிக் ஜித்தேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசியவர்கள்…
இணைத் தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன், “நாங்கள் எதிர்பார்த்ததைவிட படம் சிறப்பாக வந்துள்ளது. இதற்கு அனைவரின் ஒத்துழைப்பு தான் காரணம்”.
ஸ்டண்ட் மாஸ்டர் நூர்,
“நான்காவது மாடியிலிருந்து குதிக்கும் காட்சியில் தயாரிப்பாளர் மகேஸ்வரன் துணிச்சலாக குதித்தார்”.
ஹீரோயின் ஷில்பா மஞ்சுநாத், “கர்நாடகத்தைச் சேர்ந்த எனக்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு மிக்க நன்றி. சாதி, மதம், இனம் பார்க்காமல் அனைவரையும் நேசிக்கும் குணம் உள்ள தமிழர்களுக்கும் எனக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் டைரக்டர்களுக்கும் நன்றி”.
டைரக்டர் அனீஷ் அஷ்ரஃப்,
“டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸிடம் அசிஸ்டெண்டாக ஒர்க் பண்ணிவிட்டு, மிஷ்கினின் ‘பிசாசு’ படத்தை கன்னடத்தில் ‘ராட்சசி’ என்ற பெயரில் டைரக்ட் பண்ணினேன். அதன் பிறகு சிங்கப்பூரில் இருக்கும் எனது நண்பர் மூலமாகத் தான் தயாரிப்பாளர் மகேஸ்வரன் சார் அறிமுகமானார். சிங்கப்பூரில் ஆணழகன் பட்டம் வென்றவர் என்பதால் உடலை கட்டுமஸ்தாக வைத்திருந்தார். இந்தப் படத்தில் அவரை வில்லனாக நடிக்க வைக்கும் முன்பு, அவரை வைத்து குறும்படம் டைரக்ட் பண்ணச் சொன்னார். அதில் அவருக்கு திருப்தி ஏற்பட்ட பின்பு தான் இப்படத்தை ஆரம்பித்தோம்.
சென்னையில் நடந்த ஒரு குற்றச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதால் தான் ‘சென்னை ஃபைல்ஸ் –முதல் பக்கம்’ என டைட்டில் வைத்தோம். க்ரைம் த்ரில்லர் ஜானரில் சோஷியல் மெசேஜ் சொல்ல முடியும் என்பதை இப்படத்தில் புரூஃப் பண்ணியுள்ளோம். இந்தக் கதைக்குப் பொருத்தமான ஹீரோ வெற்றி தான் என்பதை ஸ்கிரிப்ட் எழுதும் போதே முடிவு செய்துவிட்டேன். தயாரிப்பாளரும் ஓகே சொன்னார், கதையைக் கேட்டதும் வெற்றியும் ஓகே சொல்லிவிட்டார். ஹீரோயின் ஷில்பா மஞ்சுநாத் இதில் பத்திரிகை நிருபராக வருகிறார். மீடியா நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்”.
ஹீரோ வெற்றி,
“டைரக்டரின் குறும்படத்தைப் பார்த்த பின் அவரின் திறமை மீது நம்பிக்கை வைத்து இக்கதையில் நடித்திருக்கிறேன். தயாரிப்பாளர் மகேஸ்வரனின் அர்ப்பணிப்பு வியக்க வைத்தது”.
தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ்,
“திருச்சி தான் எனது அம்மாவுக்கு பூர்வீகம். இப்போது சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டேன். எனது தாத்தா பெயரில் தொடங்கியுள்ள இக்கம்பெனி தயாரிக்கும் படங்களில் ஆபாசம் இருக்கக் கூடாது, பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். இதை டைரக்டர் அனீஸிடமும் தெளிவாக சொல்லிவிட்டேன். நான் சினிமா தயாரிக்க சென்னை வந்த போது, சிலர் என்னை ஏமாற்றினார்கள். அப்போது சாண்டி ரவிச்சந்திரன் எனக்கு அறிமுகமாகி, இப்போது நல்லபடியாக படத்தை முடித்துள்ளோம்.
ரஜினி, அஜீத், விஜய் படங்களின் வில்லன்களைத் தான் எனக்கு முதலில் பிடிக்கும். அதனால் இப்படத்தில் வில்லனாக அறிமுகமாகியுள்ளேன். அனீஸ் என்னை மிகச் சிறப்பாக நடிக்க வைத்துள்ளார். தயாரிப்பாளராகவும் வில்லனாகவும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ள என்னை மீடியா நண்பர்கள் கைதூக்கிவிட்டால், மக்களும் கைதூக்கிவிடுவார்கள்”.
— மதுரை மாறன்