மறைந்து கிடக்கும் மாவிடை நீர்வீழ்ச்சி! அடிப்படை வசதிகள் வேண்டி கோரிக்கை ! யாரும் அறியாத மூன்று அடுக்கு நீர்வீழ்ச்சி
யாரும் அறியாத மூன்று அடுக்கு நீர்வீழ்ச்சி
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள பச்சமலையில் அமைந்துள்ளது கோம்பை ஊராட்சி . இந்த ஊராட்சியில் உள்ள மருதை எனும் கிராமத்தில் , திருச்சி மாவட்டத்தில் யாரும் அறியாத மூன்று அடுக்கு நீர்வீழ்ச்சி உள்ளது. செம்புளிச்சாம்பட்டி மற்றும் மருதை ஆகிய இரு கிராமத்திற்கு நடுவில் ஒற்றையடி பாதையாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சற்று கரடு முரடான பாதையில் பயணித்தால் நாம் காணும் மூன்றடுக்குகள் கொண்ட நீர்வீழ்ச்சியானது உள்ளது.
ஆச்சரியத்தக்க வகையில் முதல் அடுக்கில் ராட்சத பாறைகளுக்கிடையில் உருண்டு விழும் தண்ணீராகவும், இரண்டாவது அடுக்கில் குளம் போன்ற அமைப்பாகவும், அதில் நீச்சல் அடித்து குளிக்க கூடிய வகையில், ஆபத்து மிகுந்த ஆழமான பகுதியாகவும் உள்ளது. மூன்றாவது அடுக்கில் மிகவும் ஆபத்தான குறைந்தது 200 அடி ஆழமுடைய ராட்சத பாறைகளில் இருந்து வரும் தண்ணீரானது, ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது.
இது சுமார் 10 கிமீ தூரமுள்ள ராமநாதபுரம் என்ற கிராமத்தில் இருந்து மாவிடை எனும் ஆற்றில் இருந்து உருவாகியுள்ளது . இந்த ஆறானது வருடத்தில் ஆறு மாதம் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியாகவும், மீதமுள்ள ஆறு மாதம் சிறிய அளவு நீர்வீழ்ச்சியாகவும் உருமாறி வருகிறது. ராமநாதபுரம் கிராமத்திலிருந்து மருதை கிராமத்தை வந்தடைந்தவுடன் மூன்றடுக்கு நீர்வீழ்ச்சியாக மாவிடை நீர்வீழ்ச்சியாக மாறி ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மாவிடை அருவியிலிருந்து அதிக அளவில் வெளியேறும் நீர் பச்சமலை அடிவாரத்தில் உள்ள கீரம்பூர் ஏரிக்கு சென்று கலக்கிறது. இது பற்றி செம்புளிச்சான்பட்டி, மருதை, போந்தை உள்ளிட்ட பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் கூறுகையில், இந்த மாவிடை அருவியானது , இதுவரை யாராலும் அறியப்படாத அருவியாக உள்ளது. இதை தமிழக சுற்றுலாத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அரசு இடத்தில் அமைந்துள்ள இந்த அருவியை முறையான படிக்கட்டுகள் அமைத்து, இதற்கென தனி நுழைவாயில் அமைத்து , பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வகையிலும் , பொதுமக்கள் உடைமாற்றும் வகையிலும் தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளின் செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும்பொழுது திருச்சி மாவட்டத்திலேயே மிக அருகாமையில் இருக்கக்கூடிய அதிக அளவு நீர்வீழ்ச்சிகளை கொண்ட ஒரே மலைவாசஸ்தலமாக பச்சமலை மேலும் பிரபலமாகும்.
பச்ச மலை மலைவாழ் மக்களின் நலன் கருதி சிறந்த சுற்றுலாத்தலமாக மேம்படுத்துவதற்கு ,சுற்றுலாத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என அனைத்து அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் . அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளும் போது சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்து,இந்தப் பகுதியில் மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனவும் ,யாரும் அறியாத மறைந்து கிடக்கும் மாவிடை நீர்வீழ்ச்சியை மீட்டெடுத்து பொதுமக்கள் , சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கூறினர்.
— செய்தியாளர் அருண்








Comments are closed, but trackbacks and pingbacks are open.