சீமானை கிழித்து தொங்கவிட்ட ஐ.பி.எஸ் அதிகாரி…பிரதமர் தொடங்கிவைத்த மாநாட்டில் பரபரப்பு
”நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத இயக்கம். நானும் எனது குடும்பத்தாரும் இணையதள தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.” என்பதாக, அரங்கம் நிறைந்திருந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளின் ஐந்தாவது மாநாட்டில் பேசி தனல் மூட்டியிருக்கிறார், திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார்.
ஆமைக்கறி விவகாரம் தொடங்கி அன்றாட அரசியல் நிகழ்வுகள் வரையில் ஆயிரம் முறை கழுவி கழுவி ஊற்றினாலும், எசகுபிசகாக எதையாவது ஒன்றை பேசி தினம் ஒரு சர்ச்சையில் சிக்குவது என்பது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் அன்றாட அலுவலில் ஒன்றாகவே ஆகிவிட்டது.
நேற்றுவரை தன்னுடன் பயணித்த தம்பிகள் பலரும், நாதகவிலிருந்து விலகி நாலாபுறமும் சிதறிவருகிறார்கள் என்பதைக்கூட, அவதானிக்க முடியாமல் வழக்கம் போல, அடுத்த வீராவேச உரைவீச்சுக்கு தினமும் தயாராகிக் கொண்டுதானிருக்கிறார், அண்ணன் சீமான். கைப்புள்ள கதாபாத்திரம் போல, கடந்து போய்விடுவதற்கு அண்ணன் சீமான் ஒன்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலு அல்ல. இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் தலைவர்.
தனக்கு கீழ், தனது அரசியலை நம்பி பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், என்னதான் வாய்க்கூசாமல் புளுகினாலும் அவற்றுக்கெல்லாம் புளங்காகிதம் அடைந்து கைத்தட்டுவதற்கென்றே தம்பிமார்களும் தங்கைமார்களும் இருக்கிறார்களே, என்று ஒரு போதும் அண்ணன் சீமான் எண்ணிப்பார்த்ததாக நமக்குத் தெரியவில்லை.
சொந்தக்கட்சியைச் சேர்ந்த காளியம்மாளை பிசிறு என்று விளித்ததாகட்டும்; சாட்டை துரைமுருகனின் அவதூறுப் பேச்சுக்காக கைது நடவடிக்கையை மேற்கொண்டார் என்ற ஒரே காரணத்துக்காக, திருச்சி எஸ்.பி. வருண்குமார் மீதும் அவரது மனைவியும் புதுக்கோட்டை எஸ்.பி.யுமான வந்திதா பாண்டே மீதும் சீமான் உள்ளிட்டு நாதகவினர் சமூக வலைத்தளங்களில் வாரியிறைத்த ஆபாச அவதூறுகளாகட்டும் அனைத்துமே முகம் சுளிக்க வைக்கக்கூடிய ரகத்திலானவை.
இருவருமே ஐ.பி.எஸ். அதிகாரிகள் என்பதையும் தாண்டி, ஒரு மாவட்டத்தின் எஸ்.பி.யாக பொறுப்பு வகிப்பவர்கள் என்பதையும் தாண்டி, மூன்று குழந்தைகளுக்கு பெற்றோர்கள் என்ற அளவுக்குக்கூட அவர்கள் மதிக்கவில்லை. ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழிவாக பேசியும் எழுதியுமிருந்தார்கள். புகைப்படங்களை மாஃர்பிங் செய்து வெளியிடும் அளவுக்கு தரம் தாழ்ந்து போனார்கள்.
சட்டரீதியாக மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றிற்காக, ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட அந்தக் குடும்பம் தரம்தாழ்ந்த தனிநபர் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டிய அவலத்தை எதிர்கொண்டார்கள். அரசியல் கட்சியின் தலைவர் ஒருவர், சட்டரீதியாக செயல்பட்ட ஒரு ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிராக, அவரது குடும்பத்திற்கு எதிராக தரம்தாழ்ந்து நடந்துகொண்டதை இருவருக்கும் இடையிலான தனிநபர் விவகாரங்களாகவே பார்த்து கடந்து போனார்கள்.
சக ஐ.பி.எஸ். அதிகாரிகளிடத்திலிருந்தும்கூட, எதிர்பார்த்த ஆதரவு அப்போது அவர்களுக்கு கிடைக்காமல்தான் இருந்தது. எம்.பி. கனிமொழியும், ஜோதிமணியும் தெரிவித்த கண்டனங்களைத் தவிர, காத்திரமான எதிர்ப்புகள் எதுவும் அப்போது எழாமல் போனதும் துரதிர்ஷ்டமானதுதான். ஒருகட்டத்தில், எக்ஸ் தள விவாதங்களிலிருந்து விலகுவதாக கூட்டாக அறிக்கையை வெளியிட்டார்கள், ஐ.பி.எஸ். தம்பதியினர்.
இந்தப் பின்புலத்தில் இருந்துதான், சண்டிகரில் நடைபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மாநாட்டில் எஸ்.பி. வருண்குமார் பேசியிருப்பது கவனத்தை பெற்றிருக்கிறது. பிரதமர் மோடி தொடங்கி வைத்த அந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மாநாட்டில், நாடு முழுவதிலிருமிருந்தும் நூற்றுக்கணக்கான ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்றிருந்தார்கள். அதிலும் குறிப்பாக, சைபர் கிரைம், இணையதள மிரட்டல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அவற்றை தடுப்பது குறித்தும் ஆலோசனை வழங்கும் வகையில் நாடு முழுவதிலிருமிருந்தும் அமைக்கப்பட்ட 22 ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழுவின் தலைவராக இந்தக் கருத்தை முன்வைத்திருக்கிறார், எஸ்.பி. வருண்குமார்.
படித்தது பல் மருத்துவம். யூ.பி.எஸ்.சி தேர்வில் முதல் மூன்று ஆட்களில் ஒருவராக தேர்ச்சி பெற்றிருந்தாலும், காக்கியின் மீது மோகம் கொண்டு ஐ.பி.எஸ். அதிகாரியானவர். அவற்றையெல்லாம்விட, சைபர்கிரைம் குற்றங்கள் தொடர்பான புரிதலிலும் மற்றும் கணினி சார்ந்த தொழில்நுட்பத்திலும் கைதேர்ந்தவர். காவல் நவீனமய கணினி பிரிவு கண்காணிப்பாளராக பணியாற்றிய அனுபவமும் உடையவர். இந்த பின்னணியிலிருந்தே, அக்குழுவின் தலைவராக எஸ்.பி. வருண்குமார் தேர்வாகியுமிருக்கிறார்.
எந்தவித சமூகப் பொறுப்பும் இல்லாமல் கழிவறை கதவுகளில் கிறுக்கித் தள்ளுவதைப் போலவே, அந்தக் கருத்துக்கள் சமூகத்தில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றிய கவலை கிஞ்சித்தும் இல்லாத ஒரு அரசியலற்ற விழுமியம் அற்ற தற்குறி தலைமுறையை உருவாக்கியிருக்கிறது இன்றைய சோசியல் மீடியா உலகம்.
அத்தகைய தற்குறிகளுக்குத் தீனிபோட்டு, ஆதாரமற்ற அவதூறுகளையும் வன்மம் நிறைந்த சொல்லாடல்களையுமே தங்களின் அறிவார்ந்த அரசியல் கருத்தாக தம்பிகள் பதிவிடுவதை சிலாகித்து ரசிக்கும் தலைவனாக சீமான் செயல்பட்டு வரும் நிலையில், அதுபோன்ற வலிமிகுந்த தனிநபர் தாக்குதல்களுக்கு தானும் தன்னால் தனது குடும்பத்தாரும் ஆளாக நேரிட்டதை, அத்துனை பேருக்கு மத்தியிலும் துணிச்சலாக எடுத்துரைத்திருக்கிறார், எஸ்.பி. வருண்குமார்.
மிக முக்கியமாக, நாம் தமிழர் கட்சியை பிரிவினைவாத இயக்கம் என்று தைரியமாக பேசியிருக்கிறார். அந்த இயக்கம் கண்காணிக்கப்பட வேண்டியது என்பதையும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
இதுஒருபுறமிருக்க, சாட்டை துரைமுருகன் தொடங்கி அண்ணனுக்கு இணையாக, அவரது தம்பிகளும் களத்தில் நாங்களும் இருக்கிறோம், எங்கள் பங்குக்கும் கட்சிக்கும் அண்ணனுக்கும் பெருமை சேர்க்கிறோம் என்கிற பேர்வழியில் அவதூறு பிரச்சாரத்திற்காகவும் அடச்சீ ரகமான வழக்குகளில் சிக்கி கைதாகும் சம்பவங்களும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
மிக சமீபத்தில், திருச்சியில், தனியாக இருக்கும் ஆண்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடுவதையே வாடிக்கையாக கொண்ட ஜனனி என்பவருக்கு ஆதரவாக, கோதாவில் இறங்கிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுதாகரன், ராஜேஸ்குமார் மற்றும் டிசேந்தன் ஆகிய மூவரை கைது செய்து சிறையிலடைத்திருந்தார்கள் திருச்சி மாவட்ட போலீசார்.
இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சுதாகரன் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் என்பதும்; போலியாக பாஸ்போர்ட் வைத்திருப்பதும் போலீசாரின் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது.
தமிழக சினிமா துறையில் தான் ஒரு படத்தயாரிப்பாளர் என்று பாவ்லா காட்டிக் கொண்டு பல நாடுகளுக்கு பறந்திருக்கிறார், சுதாகரன். சீமானுக்கு மிகவும் நெருக்கமானவர்களுள் மிகவும் அனுக்கமானவர் இந்த சுதாகரன் என்கிறார்கள். வெளிநாடுகளிலிருந்து திரள்நிதியை பெற்றுத்தருவதிலும், சினிமாத்துறையிலிருந்து சில சங்கதிகளை ஏற்பாடு செய்வதிலும் சுதாகரன் அண்ணன் சீமானுக்கு பக்கத்துணையாகவே இருந்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். இவையெல்லாம், போலீசாரின் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது என்கிறார்கள்.
எஸ்.பி. வருண்குமார் விவகாரத்தில், திமுகவின் ஐ.டி.விங் போல செயல்படுகிறார் என்பது தொடங்கி காக்கிச் சட்டையை கழட்டிவிட்டு வரச்சொல்லுங்கள் என்பது வரையில், அதிபர் சீமானும் எவ்வளவு தாழ்ந்து பேச முடியுமோ, அந்த அளவுக்கு பேசியிருக்கிறார். அரசியல்வாதிகளைப்போல, அதிரடி வாய் வார்த்தைகளால் மட்டுமன்றி அடுத்தடுத்த அதிரடி செயல்களாலும் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார், எஸ்.பி. வருண்குமார்.
-புளியம் விளாறு.