விலையில்லா நூல்களை வழங்கி, வாசிப்பை இயக்கமாக்கிய அரசெழிலன் ! எளிய மனிதர்கள் – மகத்தான சாதனை தொடர் – 2
எளிய மனிதர்கள் – மகத்தான சாதனை – 2 – விலையில்லா நூல்களை வழங்கி, வாசிப்பை இயக்கமாக்கிய அரசெழிலன் ! நீண்டநாள் நண்பர் ஒருவரை எதிர்பாராமல் சந்தித்தால் என்ன செய்வோம்? குதூகலம் கண்டு அவரவர் பொருளாதார வசதிக்குட்பட்டு ஏதேனும் வாங்கிக் கொடுத்து அகமகிழ்வதே பொதுவாக நாம் கடைபிடிக்கும் நடைமுறை. ஆனால், அந்த இளைஞன் சற்றே வித்தியாசமானவன்.
தன்னை சந்திக்க வரும் நண்பர்கள் தொடங்கி, திருமணம், பொதுநிகழ்வு என எதுவொன்றிற்கு சென்றாலும் கூடவே கையில் புத்தகத்தோடு பயணிக்கிறார். கை குலுக்குவதற்கு முன்னதாகவே, அவர் கையில் தான் கொண்டு வந்திருக்கும் புத்தகத்தை திணித்துவிடுகிறார். ஓராண்டு, ஈராண்டு அல்ல, கடந்த நாற்பது ஆண்டுகளாக இதையே தொடர் பழக்கமாக கொண்டிருக்கிறார், அந்த இளைஞர்.
அனைவராலும் அரசெழிலன் என்றறியப்படும் இராஜாராமன் என்ற 60 வயது இளைஞன்தான், இந்த மகத்தான சேவைக்கு சொந்தக்காரர். திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலையில் திருவெறும்பூரில் மாதவன் மின்பொருள் அங்காடியை நடத்திவரும் அரசெழிலனை அங்குசம் சார்பில் சந்தித்து உரையாடினோம். முன்னுதாரணமான இம்முயற்சி முளைவிட்டது எப்போது என்ற கேள்வியோடு தொடங்கினோம், உரையாடலை…
“காரைக்குடியை அடுத்துள்ள தேவக்கோட்டையில் பிரேமாவதி – இரத்தினம் ஆகியோரின் மகனாகப் பிறந்தேன். 3 ஆம் வகுப்பு வரையில் தேவக்கோட்டையில் படித்தேன். 1971 இல் வணிகம் தொடர்பாகத் திருச்சி திருவெறும்பூருக்கு என் குடும்பம் இடம் பெயர்ந்தது. அப்பா இரத்தினம் திருவெறும்பூரில் மாதவன் எலக்ட்ரிக்கல்ஸ் என்னும் பெயரில் மின்பொருள் விற்பனைக் கடையைத் தொடங்கி நடத்தி வந்தார்.
10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாது தேர்வில் தோல்வியடைந்தேன். 1980 தொடங்கி அப்பாவுக்கு உதவியாக மின்பொருள் வணிகத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தேன். அப்பா கடுமையான கடவுள் பக்தியாளர். நானும் அப்பா வழியில் இறை நம்பிக்கைக் கொண்டவனாகவே என் இளமை வாழ்வைத் தொடர்ந்தேன். என் அக்கா கணவர் சுந்தரம் திராவிடர் கழகம் சார்ந்தவர். பக்தி குறித்து என்னிடம் கேள்விகள் கேட்பார். அந்தச் சமயத்தில் பக்தி, இறை நம்பிக்கைத் தேவையா? என்ற கேள்விகள் என்னுள் எழுந்தது.
என் தூரத்து உறவினர் இல்லத்திற்கு மின் இணைப்பு கொடுக்கச் சென்றேன். அப்போது அவருடைய வீட்டின் பரணில் நிறைய சின்னச்சின்ன புத்தகங்கள் இருந்தன. அவற்றைப் பரணில் இருந்தவாறு படிக்கத் தொடங்கினேன். உறவினர், “எல்லாப் புத்தகங்களையும் வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்கலாம்” என்றார். என் வாசிப்பு அப்போதுதான் முளைவிடத் தொடங்கியது.
வீடியோ லிங்
திருவெறும்பூரில் எங்களின் மின்பொருள் கடைக்கு அருகில் சுந்தரம் என்பவர் தேநீர் கடை நடத்திவந்தார். அங்கே தேநீர் அருந்தும்போது, கடையில் உள்ள விடுதலை, உண்மை, தினத்தந்தி போன்ற இதழ்களைப் படிப்பேன். என்னை யார் என்று விசாரித்து, அவர் எனக்கு மஞ்சை வசந்தன் எழுதிய “அர்த்தமற்ற இந்து மதம்” என்ற நூலை வாசிக்கக் கொடுத்தார். அதைப் படித்து முடித்தவுடன், பெரியார் சிந்தனையில் ஆழங்கால் கொண்டேன். தொடர்ந்து பல நூல்களை வாசிக்கத் தொடங்கினேன்.
நான் மட்டும் படித்தால் போதாது, மற்றவர்களையும் படிக்கவேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தமைக்குக் காரணம் மறைந்த தவத்திரு.குன்றக்குடி அடிகளார்தான். அவர் ஒரு திருமண விழாவில் பேசும்போது, “மணமக்களுக்குச் சீர்வரிசை செய்கின்றீர்கள். அதில் ஒரு புத்தகம் உள்ளதா? வண்டிவண்டியாய்ப் பொருள் கொடுப்பதை விட்டு, வண்டிவண்டியாய்ப் புத்தகங்களைப் பரிசாகக் கொடுங்கள். வாசிப்பு ஒன்றுதான் நம் அறிவை மேம்படுத்தும்” என்ற அவரின் உரை என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. வாசிப்பை ஓர் இயக்கமாக மாற்ற நானும் பொதுப்பணியில் இறங்கினேன்.
முதலில் கண்தானம், இரத்ததானம் போன்ற விழிப்புணர்வு சிறு வெளியீடுகளைச் சொந்தச் செலவில் செய்தேன். பின்னர் விடுதலையில் வரும் சிறுசிறு கட்டுரைகளைச் சொந்தச் செலவில் 16, 24 பக்க அளவில் நூலாக ஆக்கம் செய்யத் தொடங்கினேன்.
பெரியார் குறித்த பிறர் வெளியிடும் சிறு வெளியீடுகளைத் தொகை கொடுத்து 200 பிரதிகளும் ரூ.50 என்ற அளவில் உள்ள புத்தகங்களை 30, 40 என்று வாங்கி, என்னைச் சந்திக்க வருவோர், நான் செல்லும் நண்பர் வீட்டுத் திருமணம், திராவிட இயக்க அரங்கக்கூட்டம், மாநாடுகளில் சுமார் 200 பேருக்கு நூல்களை விலையில்லாமல் வழங்கி வருகிறேன். சுமார் 40 ஆண்டுகள் இந்தப் பணியைத் தொடர்ந்து செய்துவருகிறேன். இதனால் எனக்கு ஆண்டுதோறும் என் சொந்தப் பணத்தில் 2 இலட்சம் நூல்களுக்காகச் செலவு செய்கிறேன். இப்படிச் செலவு செய்வதை என் துணைவியார், என் மகன், என் மகள் யாவரும் இதுவரை எதிர்ப்பது கிடையாது.
நான் பிறந்த தேவக்கோட்டையில் “பாரதிதாசன் கல்வி பணிக்குழு” என்ற அமைப்பைத் தொடங்கி 250 குடும்பங்கள் இணைந்து நடத்தி வருகின்றோம். திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம் என்று எல்லாப் பெரியாரிய அமைப்புகளோடும் இணைந்து செயலாற்றி வருகிறேன். தொடர்ந்து வாசிப்பை இயக்கமாக மாற்றும் பணியில் நூல்களை விலையில்லாமல் வழங்கி வருவதை நிறுத்திக்கொள்ள மாட்டேன்” என்கிறார்.
10 வகுப்பில் தேர்ச்சி அடையாத அரசெழிலன் தன் வாசிப்பின் தொடர்ச்சியாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திறந்தவெளி நிலையில் இளநிலை சமூகவியல் படித்தார். தொடர்ந்து அஞ்சல் வழியில் முதுகலை சமூகவியல் படித்துப் பட்டங்கள் பெற்றுள்ளார் என்பது இவரது வாசிப்புக்குக் கிடைத்த வெற்றி, பரிசு என்று சொல்லலாம்.
நாமும் இதுபோன்ற மகத்தான சாதனை செய்ய முற்படலாமே.. என்ற எண்ணம் நமக்குள் எழுந்தால் அதுவே அரசெழிலன் போன்ற சாதனையாளர்களுக்குக் கிடைக்கும் வெற்றியாக அமையும்.
-ஆதவன்
செய்திக்கான வீடியோ லிங்