பசுமை குண்டூர்” – திட்டம் – 100 மரக் கன்றுகளை இந்திய விடுதலை நாளில் நட்ட அபூர்வக் குண்டூர் நலச் சங்கம்
பசுமை குண்டூர்” – திட்டம் 100 மரக் கன்றுகளை இந்திய விடுதலை நாளில் நட்ட அபூர்வக் குண்டூர் நலச் சங்கம்
திருச்சி விமானநிலையம் அடுத்துள்ள குண்டூர் என்பது கிராமங்கள் நிறைந்த அழகிய சிற்றூர். இந்த ஊரில் 2009ஆம் ஆண்டு முதல் ‘குண்டூர் வடக்கு மற்றும் கிழக்கு கிராமக் குடியிருப்போர் நலச் சங்கம்’ திறம்பட இயங்கி வருகின்றது. அதன் தற்போதைய பொறுப்பாளர்கள் தலைவர் மூ.ராமமூர்த்தி, செயலாளர் தி.நெடுஞ்செழியன், பொருளாளர் கா.நடராசன். சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இராஜ்மோகன், சந்திரலிங்கம், புகழேந்தி, டேவிட் மற்றும் சங்க உறுப்பினர்கள் இணைந்து, சுற்றுச்சூழல் காக்கப்பட வேண்டும் என்பதற்காக 78ஆவது இந்திய விடுதலை நாள் விழாவைத் தொடர்ந்து 18.08.2024ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை விடுதலை நாள் நினைவாகத் தேசியக்கொடியை ஏற்றிவைத்து, பின்னர் 100 மரக் கன்றுகளை நடும் விழா ஜே.எம்.நகரில் சிறப்பாக நடைபெற்றது. 100 மரக் கன்றுகள் பாலன் நகர், ஜே.எம்.நகர், லெட்சுமி நகர், குறிஞ்சி நகர் ஆகிய இடங்களில் நடப்பட்டன.
இவ்விழாவில் தென்னிந்திய இரயில்வே – திருச்சி கோட்ட வணிக மேலாளர் மோகனப்பிரியா கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி.சதீஷ்குமாரன் ‘மரம் வளர்ப்போம்…. மழை பெறுவோம்…’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மேகானப்பிரியா ஜே.எம்.நகரில் மரக்கன்றினை நட்டுவைத்து விழாவைத் தொடங்கி வைத்தார். பாலன் நகர், லெட்சுமி நகர், குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளிலும் மரக்கன்றுகள் சிறப்பு விருந்தினர்களால் நடப்பட்டது. இவ் விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் குண்டூர் ஊராட்சிமன்ற மேனாள் தலைவர் எம்.மாரியப்பன், திருவளர்ச்சிப்பட்டி திமுக கிளைச் செயலாளர் பி.மாரிமுத்து, 4ஆவது வார்டு திமுக செயலாளர் எஸ்.தனபால், திருவெறும்பூர் ஒன்றியத் திமுக பிரதிநிதி வி.ரெங்கராஜ், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் திருமதி சவரியம்மாள் செல்வராஜ். திருவெறும்பூர் ஒன்றியக் குழு உறுப்பினர் திருமதி வினோதினி, பாலமுருகன், முன்னாள் குண்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ் , சுமி பிரிசிசன் மேலாண்மை இயக்குநர் ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். நலச் சங்கத்தின் பொருளாளர் கா.நடராசன் நன்றி கூறினார். பின்னர் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
மரம் நடும் விழாவில் 5 அடி உயரம் உள்ள மகிழம் கன்று, புங்கன் கன்று, நாவல், வேம்பு கன்றுகள் நடப்பட்டு, மரக்கன்றுகளைக் காக்க இரும்பு வலைக் கூண்டுகள் உடனே அமைக்கப்பட்டன. கூண்டுகள் உறுதியாக நிற்க, கூண்டின் இருபுறமும் 5 அடி உயரத்திற்கு இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டு, கட்டுக்கம்பிகளால் கட்டப்பட்டன. 100 மரக்கன்றுகள், 100 இரும்பு வலைக் கூண்டுகள், 200 எண்ணிக்கையில் 5 அடி ராடு கம்பிகள் என்று மரக்கன்றுகள் எப்படி நடப்படவேண்டும் என்பதற்கு இலக்கணமாக இந்த மரம் நடும்விழா நடைபெற்றுள்ளது. இது குறித்து, குண்டூர் கிராமக் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் மூ.இராமமூர்த்தி அவர்கள் அங்குசம் செய்தி இதழிடம் பேசும்போது, “ எங்கள் சங்கம் 14 ஆண்டு காலம் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது.
மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள், மருத்துவ முகாம், குண்டூர் ஏரியைத் தூர்வாரியது, குண்டூரில் உள்ள நெடுஞ்சாலையில் மையத் தடுப்புச் சுவர் அமைக்கத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறைக்குக் கடிதம் எழுதியது என்று எங்கள் சங்கம் மக்கள் நலனுக்குக்காகப் போராடி வருகின்றது. இந்நிலையில், தற்போதைய புவியில் ஏற்பட்டுள்ள வெப்பம் அதனால் சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துச் சங்கத்தில் ஆலோசனை செய்து, புவிவெப்பம் குறை நிழல்தரும் மரங்களை நடுவது என்று முடிவெடுத்தோம். இந்திய விடுதலை நாளில் குண்டூர் பசுமைத் திட்டத்தின் கீழ் 100 மரக்கன்றுகளை நடுவது என்று முடிவெடுத்துச் செயல்பட்டோம்.
முதல் கட்டமாகக் குண்டூரில் உள்ள இந்தியன் வங்கியில் CSR நிதியில் மரக்கன்றுகளைக் காக்க 100 எண்ணிக்கையில் இரும்பு வலைக் கூண்டுகளைக் கேட்டு விண்ணப்பம் செய்தோம். ஒரு மாதம் கழித்து, தற்போதைய நிலையில் மேற்படி நிதியில் இரும்பு வலைக் கூண்டுகள் வழங்க இயலாது என்று திருச்சி மண்டல இந்தியன் வங்கியிலிருந்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர்க் குண்டூரில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் MIET கல்வி நிறுவனங்களின் தலைவர் பொறியாளர் அ.முகமது யூனுஸ் அவர்களை நேரில் சந்தித்து 100 இரும்பு வலைக் கூண்டுகளைக் கேட்டோம். முகமது யூனுஸ் அவர்கள் தற்போதைய நிலையில் ரூ.25ஆயிரம் நன்கொடை வழங்குகிறேன். அதை வைத்துக்கொண்டு மரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங்குங்கள் என்று எங்களை வாழ்த்தி நன்கொடையை வழங்கினார்.
இந்தத் தொகை மற்றும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்த மாரிமுத்து, தனபால், ரெங்கராஜ், கலிங்க.இளவழகன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பழனிவேலு, கனகராஜ் ஆகியோர் வழங்கிய நன்கொடைகளைக் கொண்டும் மரக் கன்றுகளை நடும் செயலில் இறங்கினோம்.
100 மரக்கன்றுகளை எங்களுக்குத் திருச்சி துவாக்குடி காக்கும் கரங்கள் மனித வள மேம்பாட்டு நிறுவனம் செயலாளர் ஆர்.மகேந்திரபாபு, நிர்வாக இயக்குநர் எம்.திலகா ஆகியோர் விலையில்லாமல் வழங்கினார். இந்த மரக்கன்றுகள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.
மரக் கன்றுகளைக் காக்க நாங்களே நேரடியாக இரும்பு வலைகளை வாங்கிக் கூண்டுகளைச் செய்தோம். பின்னர் 200 இரும்பு ராடுகளையும் தெரிந்த ஒரு நிறுவனத்திடம் குறைந்து விலைக்கு வாங்கினோம். எங்கள் சங்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் உழைப்பில்தான் 100 மரக்கன்றுகளையும் நட்டோம். இன்னும் 5 ஆண்டுகளில் மேற்படி நகர் பசுஞ்சோலையாகக் காட்சியளிக்கும். அப்போது எங்கள் உழைப்பு எங்கள் சங்கத்திற்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கும்” என்று கூறினார்.
ஒரே நாளில் 100 மரக்கன்றுகள் முறையாக, பாதுகாப்பாக நடப்பட்டுள்ளது என்பதும் அதற்குத் தென்னக இரயில்வே வணிக மேலாளர், பேராசிரியர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டது என்பதும் தனிச்சிறப்பே. 100 மரக்கன்றுகளை ஒரே நாளில் நட்டு சாதனை புரிந்துள்ள குண்டூர் வடக்கு மற்றும் கிழக்குக் கிராமக் குடியிருப்போர் நலச்சங்கம் தமிழகத்திற்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது என்றால் அது மிகையில்லாப் பேருண்மையாகும். “மரம் வளர்ப்போம்…. மழை பெறுவோம்” என்ற முழக்கம் மரம் நடும் விழாவில் எழுப்பப்பட்டது உலக மக்களின் காதுகளில் விழுந்தால் வெப்பமயமாகி வரும் புவியைக் காக்கமுடியும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
-ஆதவன்