நியோமேக்ஸ் விவகாரம் – மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரின் செயல்பாடுகளில் திருப்தியில்லை !

1

நியோமேக்ஸ் விவகாரம் – மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரின் செயல்பாடுகளில் திருப்தியில்லை ! நியோமேக்ஸ் விவகாரம் நாம் முன்னரே சுட்டிக்காட்டியபடி இடியாப்பச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. நியோமேக்ஸில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்களுள் பத்து சதவிகிதம் பேர்கூட இன்னும் புகார் கொடுக்கவே முன்வரவில்லை என்று சொல்லப்படும் நிலையில், இதுவரை புகார் கொடுத்திருக்கும் மூவாயிரத்திற்கும் குறைவானவர்களிடையே கூட ஒற்றுமை இல்லாத போக்கு நிலவிவருகிறது.

தேனியை மையமாக கொண்டு ஒரு சங்கமும்; திருச்சியை மையமாக கொண்டு மற்றொரு தரப்பினரும்; தஞ்சையைச் சேர்ந்தவர்கள் ஒரு தரப்பாகவும்; நியோமேக்ஸ் நிறுவனத்தை இன்றும் நம்பிவரும் பிரிவினர் இன்னொரு தரப்பாகவும் இருந்து வருகின்றனர். புகார்தாரர்களிடையேயான இந்த பிளவுக்கு மிக முக்கிய காரணம் நியோமேக்ஸ் நிர்வாகத்தின் பிரித்தாளும் நயவஞ்சக சூழ்ச்சி தான் காரணம் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

நியோமேக்ஸ் கூட்டம்
நியோமேக்ஸ் கூட்டம்

யூட்யூப் வீடியோவாகவும், வாட்சப் குழுக்களில் ஆடியோ மெசேஜ் வழியாகவும் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை காரசாரமாக விவாதித்தும் வருகின்றனர். எப்படியாவது இழந்த பணத்தை மீட்டுவிட வேண்டும் என்பதே அவர்கள் அனைவரின் எண்ணமுமாக இருக்கிறது. அதேசமயம், நியோமேக்ஸ் நிர்வாகம் முன்மொழியும் தீர்வை நம்பி செல்வதா? அதற்கு அப்பாற்பட்ட சட்ட அறிஞர்கள் சொல்வதை நம்பி செல்வதா? என்பதில்தான் இந்த பிரிவினையும் அடங்கியிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில், சிவகாசியை சேர்ந்த பொறியாளர் ராமமூர்த்தி நியோமேக்ஸ் விவகாரம் தொடர்பான அப்டேட்களை அங்குசம் வழியே தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இந்த பதிவில், மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்பதாக குறிப்பிடுகிறார். வழக்கின் விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. மனிஷா ஸ்ட்ரெய்ட் பார்வர்டு அதிகாரி என்று பெயரெடுத்தவர்.

சென்னை தலைமையகத்தில் முன்னணி வழக்குகளை திறம்பட கையாண்ட அனுபவம் கொண்டவர். நாம் அவதானித்த வகையில், நேரம் காலம் பார்க்காமல் சுறுசுறுப்புடன் பணியாற்றும் அதிகாரியாகவே செயல்பட்டு வருகிறார். ஆனாலும், நியோமேக்ஸ் விவகாரம் ஆழம் அறிய முடியாத ஆழியைப் போன்றது.

நியோமேக்ஸ் கூட்டம்
நியோமேக்ஸ் கூட்டம்

நாம் ஏற்கெனவே கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டியதைப் போல, இப்போது இருக்கும் போலீசு பலத்தை வைத்துக் கொண்டு, அவர்களுக்கென்று வழக்கமாக இருக்கும் பணியையும் செய்துகொண்டே இந்த விவகாரத்தையும் சேர்த்தே கையாள்வதென்பது நிச்சயம் சவாலானதுதான். இங்கே நாம் ராமமூர்த்தி பதிவின் வழியே சுட்டிக்காட்ட விழையும் விசயம், நியோமேக்ஸின் தனிச்சிறப்பான தன்மையை கருத்திற்கொண்டு நியோமேக்ஸ் வழக்கு விவகாரங்களை கையாள்வதற்கென்றே போதுமான போலீசாரை ஒதுக்கி, தேவையான கட்டமைப்பு வசதிகளை வழங்கி விரைந்து முடிக்க பொருளாதாரக் குற்றப்பிரிவின் தலைமையகம் ஆவண செய்ய வேண்டும் என்பதே.

இனி, சிவகாசி ராமமூர்த்தியின் வார்த்தைகளில் … “சம்பந்தப்பட்ட காவல் துறையின் நடவடிக்கைகளில் புகார் கொடுத்த முதலீட்டாளர்களுக்கும் உயர் நீதி மன்றத்திற்கும் திருப்தி இல்லை என்பதை விவரம் தெரிந்தவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட சொத்துக்களை கண்டறிந்து அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளிலும் ஆர்வம் காட்ட வில்லை முதலீட்டாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட நிறுவனத்தின் சொத்து விவரங்களைப் பற்றி புலனாய்வு செய்து உரிய துரித நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கைது நடவடிக்கைகளைப் பற்றி கூற வேண்டும் என்றால். வழக்கின் FIR ல் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள் & பினாமி சட்டத்தின்படி பாராட்டுதலுக்குறிய எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

நீதி மன்றத்தில் மொத்தத்தில் அரசாங்கத்தின் செயல்பாடுகளை கவனித்துக் கொண்டிருக்கும் புகார் தாரர்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. புகார் வாங்குவதில் அக்கறை இல்லை வாங்கிய புகார்களுக்கு தேதி குறிப்பிடாத ஸ்டாம்ப் & கையொப்பம் இல்லாத முறையான CSR கூட பெரும்பாலோருக்கு இதுவரை கொடுக்கவில்லை. கைப்பற்றிய கைபேசி , வாகனங்கள் உள்பட பல சொத்துக்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கே திருப்பிக் கொடுக்க வேண்டிய சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நியோமேக்ஸ்
நியோமேக்ஸ்

நேரடியாக டெபாசிட் பெற்றவர்களும் குற்றவாளிகள் என சட்டத்தில் உள்ளன. புகார் தாரர்கள் யார் மூலமாக காசோலை, பணம் & இரண்டும் செலுத்தினோம் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி இதுவரை அந்த ஏஜெண்டுகளை விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இவ்வளவு சொத்துக்களை விற்றிருக்க மாட்டார்கள். இவ்வளவு பேர் இன்றுவரை தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க மாட்டார்கள்.

முதலீட்டாளர்களுக்கு இதுவரை எந்த செட்டில்மென்ட்டும் நடைபெறவில்லை. ஆனால், நிர்வாகிகளோ பயமின்றி முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற முதலீட்டுப் பணத்திலிருந்து அவர்கள் சுய சம்பாத்தியம் போன்று வாங்கி வைத்த சொத்துக்களை விற்றுக் கொண்டும்; பதுக்கிய பணத்தில் புதிய சொத்துக்களை பினாமிகள் பெயரில் வாங்கிக் குவித்துக் கொண்டும்; அவர்கள் பெயரில் அல்லது அவர்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் உள்ள சொத்துக்களை சட்ட சிக்கல்களில் சிக்கி விடாமல் இருப்பதற்காக முன் எச்சரிக்கைக்காக அவர்களுக்கு வேண்டியவர்கள் பெயரில் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

Zoom meeting போட்டு ஜோராக மனை மற்றும் நில விற்பனைகள் வெளிப்படையாக நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். மொத்தத்தில் நிறுவனத்தின் நிர்வாகிகள் முதலீட்டாளர்களின் பெரும்பாலான பணத்தை சட்ட விரோதமாக தங்கள் வசம் வைத்துக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அம்பலப்படுத்தும் நியோமேக்ஸ் வாடிக்கையாளர்
அம்பலப்படுத்தும் நியோமேக்ஸ் வாடிக்கையாளர்

ஆனால் முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மோசடிகாரர்களின் சூழ்சியில் இழந்து விட்டு இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கும் கஷ்டங்களைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் முறையாக முறையிட்டும் அதை follow up செய்து கொண்டிருந்தாலும் எந்த தீர்வையும் நம்பும் படியாக செயல்படுத்தாமல் வாய் மொழி உத்தரவு கொடுத்துக் கொண்டே காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

4 bismi svs

பொறுப்போடு செயல்பட வேண்டியவர்கள். புகார்தாரர்களின் கஷ்டத்தை தீர்த்துக் கொடுக்க வேண்டியவர்கள் அவர்களுக்குரிய பொறுப்புகளை உணராமல், அவர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் சில மறைமுக அதிகார வர்க்கத்தினரின் கட்டளைகளுக்கு இணங்கி அவர்களை திருப்திப்படுத்த வேண்டிய காரியங்களில் அக்கறை காட்டுகிறார்கள்.

நீதி மன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்துவது இல்லை. ”நிறுவனத்தினர் அவர்களின் மற்றும் நிறுவனத்தின் சொத்துக்களை விற்றால் மறைத்தால் அல்லது அவற்றை சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைத்து அதை attachment செய்ய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் அதைச் செய்த குற்றம் சாட்டப்பட்டவர்களின் பினையை ரத்து செய்ய நடவடிக்கைகள் எடுக்கலாம்” என்ற அதிகாரத்தை நீதி மன்றம் வழங்கியிருந்தும் குற்றங்களை வெளிப்படையாக செய்து கொண்டிருக்கிறவர்களைப் பற்றி போதுமான ஆவணங்களுடன் புகார் கிடைக்கப் பெற்றும் அவர்களின் மீது இன்று வரை பாராட்டுதலுக்குரிய சட்ட நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் எடுக்கவில்லை என்பதை பலர் அறிவர்.

வழக்கு இப்படியே போனால் முதலீட்டாளர்களுக்கு செட்டில்மென்ட் கொடுத்து முடிக்க வேண்டி நீதி மன்றத்தால் கொடுக்கப்பட்ட காலக் கெடு முடிந்துவிடும். ஆனால் சட்ட நடவடிக்கைகளில் உரிய முன்னேற்றம் இருக்குமா இல்லை மேலிடத்தை திருப்திப்படுத்த ஏதாவது சாக்கு போக்கு கூறி மேலும் கால அவகாசம் கேட்டு வழக்கை நீர்த்துப் போக வைத்து விடுவார்களோ என்ற பயம் கஷ்டத்தில் இருக்கும் முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டுள்ளதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

போலிஸ் கஸ்டடி முடிந்த நியோமேக்ஸ் நிர்வாகி 3 பேருக்கு ஜாமீன் 
போலிஸ் கஸ்டடி முடிந்த நியோமேக்ஸ் நிர்வாகி 3 பேருக்கு ஜாமீன்

ஏனோ பல மீடியாக்கள் கூட இந்த விசயங்களைப் பற்றி கண்டு கொள்வதில்லை. அதற்கும் காரணம் மறைமுக அதிகார வர்க்கமோ எனப் பலர் பேசிக் கொள்கிறார்கள். நன்கு திட்டமிட்டு உள் நோக்கத்துடன் முதலீட்டாளர்களை பல குழுக்களாக பிரிந்து அவர்களை மாறுபட்ட கோட்பாடுகளுடன் செயல்பட வைத்து விட்டார்கள், சம்பந்தப்பட்ட விசயத்தில் ஆதாயம் தேடும் நபர்கள். அதனால் நடந்து கொண்டிருக்கும் சிறிய அளவு போராட்டங்கள் என்பது சம்பந்தப்பட்டவர்களின் கவனங்களை ஈர்க்க வில்லை. ஆகையால் இனிமேல் தேவையான வழக்குகள் நீதி மன்றங்களில் தாக்கல் செய்து நிவாரணம் தேட வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வசதி மற்றும் சற்று சட்ட அறிவு உள்ளவர்கள் அவர் அவர்கள் தனியாக வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்றுக் கொள்ள முயன்றால் தங்களிடம் இருந்த மொத்தப் பணத்தையும் முதலீடு செய்துவிட்டு அதிலிருந்து வருமானம் ஏதும் இப்பொழுது கிடைக்காமல் இருக்கும் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சட்ட அறிவு இல்வாதவர்களுக்கு உதவ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் இலவச சட்ட மையம் போன்ற ஏதாவது சில அமைப்புகள் முன்வந்தால் தான் இந்த வழக்கை விரைவில் முடித்து வைக்க இயலும்.

இல்லாவிட்டால் குறைந்த விலை போகும் உதவாத சொத்துக்களை அதிக விலை நிர்ணயம் செய்து ஏழை முதலீட்டாளர்களின் கஷ்ட சூழ்நிலைகளை நிறுவனத்திற்கு சாதகமாக பயன்படுத்தி ஏனோ தானோ என்று பெயரளவிற்கு முதலீட்டில் கால் வாசிக்கு பெறும் நிலத்தைக் கொடுத்து செட்டில்மென்ட் முடிந்துவிட்டது என்று குற்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள நிறுவனம் முயன்று கொண்டிருப்பது பலரும் அறிந்த விசயம். இதற்கு பக்க பலமாக பல சுயநலவாதிகள் செயல்படுவதால் முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் சூழ்ச்சிகளை நம்பி ஏமார்ந்து விட வேண்டாம் என்பதே பொது நலனுக்காக செயல்படும் சில நல்ல சட்ட வல்லுனர்களின் அறிவுரையாகும்.

போராடும் குழுக்களுக்குள் ஒற்றுமை வேண்டும் ஒத்த கருத்தில் சட்ட ரீதியாக போராட வேண்டும். எதிரிகளின் சூழ்சியால் தேவையற்ற சட்டம் ஒழுங்கு சிக்கல்களில் சிக்கி விடாமல் நன்கு ஆலோசித்து பாது காப்பாக விரைவில் நிவாரணம் பெற ஏற்ற முறையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினால் நீதி மன்றம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும். அதனால் புகார் கொடுத்த அனைவருக்கும் ஒரே சமயத்தில் சட்டப்படி ஏற்றுக் கொள்ள கூடிய தீர்வு பாகு பாடின்றி கிடைக்க வழி செய்யும் என்பதை இப்பொழுதுள்ள நிலைமை என்பதை பலரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

நிறுவனத்தின் ஆதரவு பெற்ற சில குழுக்கள் அவர்களுக்கு மட்டும் தீர்வு ஏற்படுத்திக் கொள்ள அவர்களுக்குண்டான சில influence களை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் அது நல்ல பலன்களை கொடுக்காது என சட்ட வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

நியோமேக்ஸ் சிறப்பு விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. மனிஷா
நியோமேக்ஸ் சிறப்பு விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. மனிஷா

புகார் கொடுத்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால், மோசடி மன்னர்களின் கைக் கூலிகளின் ஆசை வார்த்தைகளை நம்பி இருக்கும் புகார் கொடுக்காதவர்களின் நிலை என்னவாக முடியும் என்பதை காலம் பதில் சொல்லும். முதலீட்டாளர்களின் உண்மையான பட்டியல் மற்றும் அவர்களின் முதலீட்டுத் தொகையை நிறுவனம் இதுவரை சம்பந்தப்பட்டவர்களிடம் சமர்பிக்கவில்லை. இது நீதி மன்றத்தின் உத்தரவை மீறிய செயல். இருப்பினும் நிறுவனம் கொடுக்கும் உண்மைக்கு மாறான ஏதோ ஒரு பட்டியலைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கைகள் நிறுவனத்தார்கள் மீது எடுக்கவில்லை. இதுவரை10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே புகார் கொடுத்துள்ளனர் என்ற விசயமும் நிறுவனத்தார்களால் பேசப்படுகிறது.

ஜோஸ் தங்கையா ஐபிஎஸ்
ஜோஸ் தங்கையா ஐபிஎஸ்

மீதமுள்ளவர்களுக்கு அதாவது புகார் கொடுக்காதவர்களுக்கு ஏதோ ஒன்றை சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூறி அவர்களை புகார் கொடுக்க விடாமல் தடுத்து வைப்பதற்கு என்றே உள் நோக்கம் கொண்ட ஒரு கும்பல் செயல்படுவதாக தகவல். நிறுவனத்திற்கு எதிராக செயல்படும் சில முக்கிய நபர்களை ஏதோ ஒரு வகையில் நிறுவனம் சமாதானப்படுத்தி அவர்களை, நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட வைத்து விடுகிறது. பலர் நல்லவர்கள் போல் நடித்து அப்பாவி முதலீட்டாளர்களை திசை திருப்பிவிடுகிறார்கள்.

neomax -
neomax

தீவிர சட்ட நடவடிக்கைகள் மூலமே நல்ல தீர்வை எட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. உள் நோக்கத்துடன் நிறுவனத்தால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட பல பெரிய குற்றங்கள் சம்மந்தப்பட்ட ஆவணங்களை கைப்பற்றி அதை சம்பந்தப்பட்ட மத்திய அரசு துறைகளில் முறையாக கொடுத்து உரிய நடவடிக்கைகளை உச்ச நீதி மன்றம் வாயிலாக எடுக்கப்பட்டால் தான் முக்கிய மறைமுக முதலாளிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர இயலும். உண்மையான குற்றவாளிகள் அனைவரின் மீதும் உரிய சட்ட நடவடிக்கைகள் பாயும். அப்படி நடந்து விட்டால் முதலீட்டாளர்களுக்கு முழு முதிர்வு தொகை கிடைத்துவிடும். அதற்கு சிலர் மனது வைத்தால் போதும் அதை கச்சிதமாக செய்து விடலாம். சிறிது காலம் பொறுத்திருந்து பார்ப்போம் சம்பந்தப்பட்டவர்களிடம் மாற்றம் ஏற்படுமா என்று.” என்பதாக குறிப்பிடுகிறார், சிவகாசி ராமமூர்த்தி.

– அங்குசம் புலனாய்வுக் குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

1 Comment
  1. Rajiv says

    அன்பார்ந்த அங்குசம் பத்திரிகை MD அவர்களே

    எனக்கு ஒரு கேள்வி

    நீங்கள் என்ன நினைககிறீர்கள் Newo max நிறுவனம் முதலீடுசெய்தவர்களுக்கு பணம் வழங்க கூடாது என்று நினைக்கிீர்களா

    இல்லை உங்களுக்கு எதுணா வேண்டியத. அவர்கள் செய்ய வில்லை என்று நினைக்கிறீர்களா

    நிறுவனம் முதலீடு செய்த நபர்களுக்கு எதோ ஒரு வழியில் settlement செய்ய ரெடி யாக உள்ளது என்று சொல்கிறது

    நீங்கள் இது போல ஒண்ணுக்கு ரெண்டா போட்டு விட்டு மக்களை குழப்பி கொண்டு இருக்கீங்ன்க
    போல

    சரி நீங்கள் சொல்லுங்க என்ன தீர்வு என்று

Leave A Reply

Your email address will not be published.