சசிகலா உறவினருக்கு ஸ்கெட்ச் ! அடுத்த என்கவுண்டரா ? பீதியில் பிரபல ரவுடி !
சசிகலா உறவினருக்கு ஸ்கெட்ச் ! அடுத்த என்கவுண்டரா ? பீதியில் பிரபல ரவுடி !
கொம்பன் ஜெகன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதன் அதிர்வலைகளே இன்னும் அடங்காத நிலையில், திருந்தி வாழும் தன்னை என்கவுண்டரில் போட்டுத்தள்ள பார்க்கிறது போலீசு என மரண வாக்குமூலம் என்பதாக கதறல் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருப்பதோடு குடியரசுத் தலைவர் தொடங்கி திருவெறும்பூர் டி.எஸ்.பி. வரையில் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருக்கிறான், பாட்டில் மணி என்கிற தினேஷ் குமார்.
”தமிழக காவல்துறையினர் என்னை எண்கவுண்டர் செய்யப்போவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது… என்னை கைது செய்த பின்னர் என்னை தனியாக வைத்து என்னை அடித்து சித்ரவதை செய்வார்கள். பின்னர் என்னை யாரும் இல்லாத இடத்தில் வைத்து என்கவுண்டர் செய்வார்கள். எனக்கு நீதி வழங்கவும். தமிழகத்தில் நீதி எங்கே? மனித உயிர் நாய்களைவிட கேவலமாக தமிழக காவல் துறையினரால் சுட்டுக் கொலை செய்கின்றனர். மரணத்தின் கடைசி படியில் நின்று கொண்டு எனது கடைசி வார்த்தைகளை எழுதுகிறேன். மரண வாக்குமூலமாக…” என முடிகிறது, அந்த கதறல் கடிதம்.
திருச்சி திருவெறும்பூர் கீழகணபதி நகரை சேர்ந்த பாட்டில் மணி (எ) தினேஷ்குமார் ஏ-பிளஸ் வகையைச் சேர்ந்த ரவடி. இவன் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி வழக்குகள் என 20-க்கும் அதிகமான வழக்குகளை எதிர்கொண்டு வருகிறான். புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கில் தொடா்புடைய பெண் தாதா எழிலரசிக்கு நெருக்கமானவன் இந்த பாட்டில் மணி (எ) தினேஷ்குமார் என்கிறார்கள்.
பாட்டில் மணி (எ) தினேஷ்குமாரின் கதறல் ஆடியோ குறித்து திருவெறும்பூர் டி.எஸ்.பி. அறிவழகனை அங்குசம் சார்பில் தொடர்புகொண்டோம். “முதலில் அந்த ஆடியோ அவனுடையது தானா என்றே தெரியவில்லை. கடந்த 2019-இல் கொல்லப்பட்ட ரவுடி ரஜினி (எ) கருப்பையா வழக்கில் முக்கிய சாட்சி ஒருவரை மிரட்டியதாக வந்த புகாரில் கைது செய்து, ரிமாண்டுக்கு அனுப்பியிருக்கிறோம். அவ்வளவுதான்.” என்கிறார், அவர்.
“விஷயமே வேறு, சசிகலாவின் உறவினர் ஒருவரை சம்பவம் செய்ய ஸ்கெட்ச் போட்ட பாட்டில் மணி (எ) தினேஷ்குமாரை, போலீஸ் பாணியில் ஸ்கெட்ச் போட்டு தருணம் பார்த்து தூக்கியிருப்பதாக ” பகீர் கிளப்புகிறார்கள், நம்பகமான சோர்ஸ் வட்டாரத்தில்.
”தினேஷ்குமார் என்றில்லை, திருந்தி வாழ்வதாக போலீசிடம் கடிதம் கொடுத்திருக்கும் ரவுடிகளில் பெரும்பாலோனோர் மறைமுகமாக ரவுடியிசத்தில் ஈடுபட்டுத்தான் வருகின்றனர். பாட்டில் மணி (எ) தினேஷ்குமார் கூட, இன்று வரையில் ”தொழிலில்” ஆக்டிவ்வாகதான் இருந்து வருகிறான். போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முதல்வர் சுட்டிக்காட்டியபடி, தமிழகத்தில் ரவுடியிசத்தை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை போலீசார் எடுத்து வருகிறார்கள்.
தவறே செய்யாமல் திருந்தி வாழ்பவனை நாங்கள் ஏன் தொந்தரவு செய்யப் போகிறோம். தப்பு செய்வதால்தான், போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து இதுபோல எல்லாம் பிதற்றி வருகிறார்கள். குடியரசுத்தலைவருக்கு மனு போடுவது, மனித உரிமை மீறல் என்பது. இதையெல்லாம் செய்வதற்கு பதிலாக திருந்தி வேறு தொழிலுக்கு மாறிவிடலாமே?” என்கிறார்கள் போலீசு வட்டாரத்தில்.
திருச்சியைப் பொறுத்தவரையில், ”எந்நேரம், என்ன நடக்குமோ?” என்று பிரபல ரவுடிகளேகூட எஸ்.பி.வருண்குமாரின் அதிரடி நடவடிக்கைகளை கண்டு பீதியில் உறைந்துதான் கிடக்கிறார்கள் என்கிறார்கள்.
– அங்குசம் புலனாய்வு குழு.