”உனக்குத் தேவை கேஸ் ! எனக்குத் தேவை காசு !” கொடிகட்டிப் பறக்கும் ரேஷன் அரிசி கடத்தல் பிசினஸ் !
என்னதான் கடுமையான சட்டங்களை போட்டாலும், கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுத்தாலும் தமிழகத்தில் சில விசயங்களில் மாற்றங்களை கொண்டு வந்துவிடவே முடியாது என்பதாக சிலவற்றை பட்டியலிட முடியும். அதில் முதலிடத்தில் இருப்பது, அரசு அனுமதித்துள்ள நேரத்தைவிட முன்போ, பின்போ விற்கப்படும் டாஸ்மாக் சாராயம். அடுத்தடுத்த இடங்களை கஞ்சா, கூலிப், போதை வஸ்துகள் ஆக்கிரமித்திருக்கின்றன.
வீட்டில் பதுக்கி மதுவை விற்றார்கள்; கஞ்சா கடத்தினார்கள்; கஞ்சா விற்றார்கள்; கடையில் போதைப் பாக்குகளை விற்றார்கள் என்பதாக ஒவ்வொரு ஸ்டேஷனிலும் மாதத்திற்கு நாலு ஐந்து கேஸ்களை போட்டிருப்பார்கள். இதுஒருபக்கம் புள்ளி விவரங்களாக போலீசு துறை பதிவேடுகளில் இடம்பிடிக்கும். மற்றொரு பக்கம் விற்பணை நடந்து கொண்டேதான் இருக்கும். என்ன ஒரு வித்தியாசம், போலீசின் கெடுபிடி அதிகரிக்கப்படுவதற்கு ஏற்ப கள்ளத்தனமாக விற்கப்படும் சரக்குகளின் விலையும் சற்று அதிகரித்திருக்கும்.
இதுபோன்று, ”கணக்குக்கு கேஸ் … மற்றபடி உன் தொழிலை நீ சூதானமா பார்த்துக்கோ” என்பதாக, ’தண்ணி தெளித்துவிடப்பட்ட’ விவகாரங்களுள் ஒன்றாக சேர்ந்திருக்கிறது, கள்ள மார்க்கெட்டில் கடத்தப்படும் ரேஷன் அரிசி. ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து வெளி மாநிலங்களுக்கு கடத்துவது தொடங்கி, மாட்டுத் தீவனம் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சப்ளை செய்வது வரையில் ரேஷன் அரிசி கடத்தல் பிசினஸ் நல்ல பணம் கொழிக்கும் பிசினஸாக உருவெடுத்திருக்கிறது.
ரேஷன் பொருட்களை கடத்தி கள்ள மார்க்கெட்டில் விற்கும் கொள்ளையர்கள் குறித்து கண்டுபிடித்து, நடவடிக்கை எடுப்பதற்கென்றே, சிவில் சப்ளை சி.ஐ.டி போலீஸ் என்று ஒரு தனிப்பிரிவே இயங்கி வருகிறது.
ஆனாலும், வருவாய் துறையினரோ, உள்ளூர் காவல்நிலைய போலீஸோ, ரேஷன் அரிசி கடத்துவோரை பிடித்தால், “சார் நாங்க சிவில் சப்ளை சி.ஐ.டி யூனிட்டுக்கு ஆல்ரெடி மாமூல் பணம் கட்டிட்டிட்டுதான் அரிசி எடுக்குறோம். எங்களை ஏன் பிடிக்குறீங்க.? ஆமா உங்களுக்கு எவ்வளவு வேணும்? வாங்கிட்டு போங்க சார்.. என்று வெளிப்படையாகவே பேசும் அளவுக்கு இருக்கிறது, அந்த தனிப்பிரிவு போலீசாரின் செயல்பாடு.
நாம் ஏற்கெனவே, திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான விவரங்களை பதிவு செய்திருந்தோம். அப்போது வழக்கில் சிக்கி நடவடிக்கைக்கு உள்ளான திருச்சி அரியமங்கலம் ரசுல்பீவி மில், உக்கடை ராஜா மில், பால்பண்ணை ஷேக், அரியமங்கலம் மில், நாகூர் ஆண்டவர் அரவைமில் அம்பிகாபுரத்தை சேர்ந்த அன்வர் அரவை மில் ஆகியவை அனைத்தும் தற்போது மீண்டும் திறக்கப்பட்டிருக்கின்றன.
2022 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 6 முறைக்கு மேல் மேற்சொன்ன இதே மில்கள் ரெய்டு நடவடிக்கைகளில் சிக்கியிருக்கின்றன. அடுத்தடுத்து வழக்குகளும் பதியப்பட்டிருக்கின்றன. ஆனாலும், அரிசி கடத்தல் சம்பவம் நின்றபாடில்லை. சிவில் சப்ளை சி.ஐ.டி யூனிட் போலீசாரை சரிகட்டி மேலிருந்து கீழ் வரையில் அனைத்து மட்டங்களிலும் நல்ல நெட்வொர்க்கை பராமரித்து வருகிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஏழை, எளிய மக்கள் தங்களது பசியைப் போக்கிக்கொள்ள ரேஷன் பொருட்களைத்தான் நம்பி இருக்கிறார்கள். தமிழகம் முழுவதுமே ரேஷன் கடைகளில் முறையாக சப்ளை இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. அதேசமயம், கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி கடத்தலோ தங்கு தடையின்றி தொடர்கிறது. ஏழைகளின் வயிற்றில் அடித்து கொள்ளை இலாபம் ஈட்டும் இந்த கடத்தல் கும்பலை கண்டறிந்து, குண்டாஸ் உள்ளிட்டு கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு கடிவாளம் போடுமா தமிழக அரசு ?
— அங்குசம் புலனாய்வுக்குழு.