மானிய டிராக்டருக்கு மல்லுக்கட்டு ! அறிவாலயம் வரை எதிரொலித்த காரசார ஆடியோ !
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகிவரும் நிலையில், ”கூட்டணிக்கட்சிகளைக்கூட சமாளித்துவிடலாம் போல! சொந்தக்கட்சிக்காரனின் உள்ளடி வேலைகளை சமாளிக்க முடியலேயேனு” தருமபுரி மாவட்ட திமுகவில் முனுமுனுத்துக் கிடக்கிறார்கள் உடன்பிறப்புக்கள்.
திமுகவை சேர்ந்தவரும், தனக்கு வேண்டப்பட்டவருமானவருக்கு மானிய விலையில் டிராக்டர் ஒதுக்கீடு வழங்கவில்லை என்றும்; பாமக கட்சியை சேர்ந்தவருக்கு 50,000 ரூபாய் காசை வாங்கிக்கொண்டு சிபாரிசு செய்துவிட்டார் என்றும் தருமபுரி மேற்கு மாவட்டம் காரிமங்கலம் மத்திய ஒன்றிய செயலாளர் கிருஷ்ணனுக்கு எதிராக புகார் வாசிக்கிறார், தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கேஆர்சி. பிரபு.
இந்த ஒதுக்கீடு தொடர்பாக இருவரும் பேசிக்கொண்ட ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அறிவாலயம் வரையில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறி, ஒருவரையொருவர் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் திட்டிக் கொள்ளும் அளவுக்கு போயிருக்கிறது. அதில் ஒரு படி மேலே சென்ற ஒன்றியம் கிருஷ்ணன், நீ என்ன பறப்பய மாதிரி பேசுற என்பதாக சாதியை இழிவுபடுத்தி பேசும் அளவுக்கு போனதுதான் விவகாரமாகியிருக்கிறது.
அந்த ஆடியோ சர்ச்சை குறித்து, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணனிடம் பேசினோம். “அந்த ஆடியோவில் குறிப்பிட்ட ஒரு சாதி பிரிவின் பெயரை நான் பேசியது போல மிமிக்ரி செய்து சேர்த்து வெளியிட்டு உள்ளனர். நீங்கள் சொல்லும் அந்த பிரபு காரிமங்கலம் நகரத்தை சேர்ந்தவர். முன்னாள் கேப்டன் டிவி நிருபரும் கூட. என் ஒன்றியத்தில் மூக்கை நுழைத்து அவருக்கு வேண்டப்பட்ட நபருக்கு மானிய ட்ராக்டர் வழங்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்.
எங்கள் மாவட்டத்திடமோ பொறுப்பு அமைச்சரிடமோ தெரியப்படுத்தாமல் உட்கட்சி பிரச்சினையை எப்படி அவர் வெளியே சொல்லலாம்? அவரோடு இருக்கும் ஒரு நபர் ஒன்றிய செயலாளர் பொறுப்புக்கு வர வேண்டும் என்று இப்படி கீழ்த்தரமான குறுக்கு வழி அரசியலை கையில் எடுத்து வருகிறார். இந்த விவகாரம் குறித்து எங்கள் மாவட்ட செயலாளரிடம் விளக்கம் அளித்துவிட்டேன் எந்த பிரச்சனையும் இல்லை” என்றார்.
சர்ச்சையில் சிக்கியிருக்கும் மற்றொரு நபரான மாணவரணி துணை அமைப்பாளர் பிரபுவிடம் பேசினோம். “அந்த ஒன்றிய செயலாளர் போக்கு சரியில்லைங்க. எனக்காகவா ட்ராக்டர் வேண்டும் என்று கேட்டேன்? எங்கள் கட்சியை சார்ந்தவருக்காதன் கேட்டேன். ஆனால், ரூ 50 ஆயிரம் பெற்றுக்கொண்டு பாமகவை சேர்ந்தவருக்கு பரிந்துரை செய்துள்ளார். இதை எப்படிங்க பொறுத்துக் கொள்ள முடியும்? நானும் அவரும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
பாமகவை சார்ந்தவருக்கு ” ட்ராக்டர்” வழங்கியதை கேட்டதற்குதான். நீ என்ன அந்த சாதிக்காரன் போல பேசுற என்கிறார் . இதற்கு எதுக்குங்க சாதியை இழுக்க வேண்டும்? அவர் சாதிய கண்ணோட்டத்தில் தான் செயல்பட்டு வருகிறார். இந்த ஆடியோ விவகாரத்தை எங்கள் மாவட்ட செயலாளரிடம் தெரியப்படுத்தி விட்டேன். நான் யாருக்காகவும் அவரை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆடியோவை நான் வெளியிடவும் இல்லை. அந்த ஆடியோவில் பேசியது ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன்தான். அவர் சொல்வது போல ஒட்டு ஏதுமில்லைங்க” என்கிறார்.
தருமபுரி மாவட்ட செயலாளர் பழனியப்பனிடம் பேசினோம். “நீங்கள் குறிப்பிடும் கோஷ்டி மோதல் எங்கேயும் இல்லை. எனக்கும் அந்த ஆடியோவை வாட்சப்பில் அனுப்பி வைத்தார்கள். எதிர்கட்சி செய்தி சேனலில் கூட ஒளிபரப்பினார்கள். மேலும் இந்த விவகாரம் குறித்து எங்கள் பொறுப்பு மந்திரியிடம் கலந்து ஆலோசித்துவிட்டுதான் சொல்ல முடியும்” என்பதாக நறுக்கென்று முடித்துக்கொண்டார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சமீபத்தில், ”தன்னை பாலக்கோடு ஒன்றிய செயலாளர் மதிப்பதில்லை. மானிய ட்ராக்டர் உள்பட அரசின் சலுகைகள் கிடைக்க விடுவதில்லை. இதற்கு காரணம் பாலக்கோடு ஒன்றியம் கோபால்தான். “ என மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எம்.சந்தர் திமுகவில் இருந்து விலகி விஜய் கட்சியில் இணைந்து மறுநாளே திமுகவுக்கு திரும்பி பரபரப்பை ஏற்படுத்திருந்தார். இந்த சம்பவம் குறித்து ” அங்குசம் ” இனையத்தில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திருந்த நிலையில்தான், அதே மாவட்டத்தில் அதே போன்றதொரு மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மிக முக்கியமாக, விவசாயிகளின் நலனுக்காக அவர்களின் மேம்பாட்டிற்காக அரசு அமல்படுத்திவரும் மானிய விலையில் டிராக்டர் வழங்கும் திட்டத்தை, அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி தகுதியான விவசாயிகளுக்கு வழங்குவதற்குப் பதிலாக, தனக்கு வேண்டியவர்களுக்கும் பணத்தைப் பெற்றுக்கொண்டும் விறுப்பு வெறுப்புக்கு ஏற்ப அதனை அணுகி வருகிறார்கள் என்பதைத்தான் இந்த சம்பவம் போட்டு உடைத்திருக்கிறது. எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் ஆளாகியிருக்கிறது.
— மணிகண்டன்.