”சாதிய வன்மத்தைக் காட்டிலும் நடுநிலையாளர்களின் மௌனம் ஆபத்தானது ! ” – வி.சி.க. சிந்தனை செல்வன்MLA நேர்காணல்
தவறு செய்பவர்களின் வன்மத்தைக் காட்டிலும், தவறு நிகழ்ந்தபின்னும் அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்ற நடுநிலையாளர்களின் மௌனம் மிகவும் ஆபத்தானது.
” சாதிய வன்மத்தைக் காட்டிலும் நடுநிலையாளர்களின் மௌனம் ஆபத்தானது ! ”
– வி.சி.க. சிந்தனை செல்வன்.MLA நேர்காணல்
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரௌபதியம்மன் கோவிலை தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் வீரணம்பட்டி காளி கோயிலும் மூடி சீல் வைக்கப்பட்டிருக்கிறது. சாதி பிரச்சினையை சாக்காக வைத்துக்கொண்டு, ஆலயத்துக்குப் பூட்டு போடுவது, பட்டியலின சாதியினரின் உரிமைக்கும் வைக்கப்படும் வேட்டு என்றும்; தேவையற்ற பதட்டத்தை தணிக்கும் விதத்திலான அரசின் நடவடிக்கை சரியானதுதான் என்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இவ்விவகாரம் தொடர்பாக, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றத் தலைவருமான அ.சிந்தனைச்செல்வன் அவர்களிடம் அங்குசம் இதழுக்காக பேசினோம்.
”சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் பாழ்படுத்தும் வகையில் சனாதன சங்பரிவார் அமைப்புகள் சாதிய உணர்வுகளை ஆங்காங்கே கூர்தீட்டி விடுகிறார்கள். பேசி தீர்க்கக்கூடிய சிறிய பிரச்சினைகள்கூட, பேச்சுவார்த்தையே நடத்த முடியாதபடிக்கு கடுமையான முரண்களாக மாற்றப்படுகின்றன. ஆளும் அரசுக்கு நெருக்கடியை உண்டாக்குவதற்காகவே இவ்வாறு திட்டமிட்டு பிரச்சினையை கிளப்புகிறார்களா? என்ற சந்தேகம் எழுகிறது.
கோவில் பூட்டப்படுவதை யாருமே விரும்ப மாட்டார்கள். வழிபாட்டு உரிமை என்பது நாகரிக சமூகத்தின் தொடக்க அடையாளம். கோயில் நிர்வாக உரிமை என்பது வேறு. கோவில் வழிபாட்டு உரிமை என்பது வேறு. ஒரு டீக்கடையை நிர்வகிப்பது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். டீக்கடைனு திறந்துட்டா, எல்லோருக்கும் டீ கொடுத்துதான் ஆகனும். நீங்கள் கட்டி வைத்திருக்கிற உங்களது சொந்த வீட்டில்கூட, சாதியின் அடிப்படையில் ஒருவரை நீங்கள் அனுமதிக்க மறுத்தீர்கள் என்றால், சட்டத்தின் முன் குற்றம் என்பதைவிட, பண்பட்ட சமூகத்திற்கான அடையாளம் அதுவல்ல. இவர் ஒழுக்கமானவர் இல்லை, குடித்துவிட்டு வந்திருக்கிறார் என்று ஒருவரது பண்புநலன் சார்ந்து வேண்டுமானால் அனுமதிக்க மறுக்கலாம். ஆனால், சாதியை வைத்து மறுப்பது பண்பட்ட அணுகுமுறை அல்ல.
அந்த குறிப்பிட்ட கிராமங்களில் உள்ள தங்களை ஆதிக்க சாதியினர் என்று கருதிகொள்ளும் சாதாரண ஏழை உழைக்கும் மக்கள் மத்தியில், அவர்கள் சார்ந்து இயங்கக்கூடிய அரசியல் கட்சிகள் ஜனநாயக அமைப்புகள் அவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். நமது சாதி சார்ந்த கோயில், நமது குலத்துக்கான கோவில், நமது ஊருக்கான கோயில் என்று நிர்வாகம் சார்ந்த உரிமையை வேண்டுமானால் அவர்கள் கோரலாம். அவர்களது நிர்வாக உரிமையை யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஆனால், வழிபாட்டு உரிமையை சாதியை காட்டி எவருக்கும் மறுக்கக்கூடாது. வழிபாட்டு உரிமை அனைவருக்கும் பொதுவானது என்பதை அனைத்து சமுதாயத் தலைவர்களும், அரசியல் கட்சிகளும் அழுத்தமாக அவர்களிடையே எடுத்துரைக்க வேண்டும்.
தவறு செய்பவர்களின் வன்மத்தைக் காட்டிலும், தவறு நிகழ்ந்தபின்னும் அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்ற நடுநிலையாளர்களின் மௌனம் மிகவும் ஆபத்தானது. கோவிலுக்கு பூட்டு போட்ட விவகாரம் குறிப்பிட்ட சாதிக்கு என்றில்லை, இது நாட்டுக்கே அவமானம். தேசிய அவமானம். ஜனநாயக சக்திகள் மௌனம் கலைக்க வேண்டும்.
இவ்விவகாரம் தொடர்பாக, ஜூன்-09 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கூட இதனை குறிப்பிட்டிருந்தேன். இந்த ஆர்ப்பாட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைத்திருப்பதால், இந்த முரண் இன்னும் கூர்மையடையத்தான் வாய்ப்பு இருக்கிறது. ஏன் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரசு கட்சி, இதர இடதுசாரி இயக்கங்கள் ஒருங்கிணைத்திருக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பினேன்.
பல்வேறு காரணங்களால் விளைநிலங்களின் பரப்பு குறைவது; விவசாயத் தொழிலே நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது. உணவுப் பஞ்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இச்சூழலில் மண்ணையும் தலைமுறையையும் காப்பதற்கான போராட்டத்தில் சாதி கடந்த தமிழ்ச்சமூகமாக ஒன்றிணைய வேண்டுமென்பதே எங்களது எதிர்பார்ப்பு.
கோவில்களுக்கு பூட்டு என்பதை அரசு தனது அதிகாரத்தை நிலைநிறுத்தியிருக்கிறது என்பதாகத்தான் பார்க்கிறேன். சட்டத்தால் மட்டுமே வழிபாட்டு உரிமையை நிலைநாட்டிவிட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கில்லை. நாங்கள் நினைத்தால், நாளையே போலீசு படையோடு சென்று மக்களை வழிபட வைத்துவிட முடியும். ஆனால், இதுபோன்ற நாடகங்களை நாங்கள் விரும்பவில்லை. அந்த கிராமங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்களிடத்தில் வழிபாட்டு உரிமை குறித்து எடுத்துச் சொல்லி அவர்களுக்கு முதலில் புரிதலை ஏற்படுத்த வேண்டும். அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள் இந்த பணியை எடுத்து செய்ய வேண்டும். இத்தகைய புரிந்துணர்வுகளால் நிகழும்போது மட்டுமே, அது நிரந்தர தீர்வாக அமையும் என்பதைத்தான் எங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி தீர்க்கமாக நம்புகிறது.” என்கிறார், சிந்தனைச் செல்வன்.
– இளங்கதிர்