பல்கலைக்கு துணைவேந்தரும் இல்லை ! ஊழியர்களுக்கு சம்பளமும் இல்லை !
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் ஊழியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஓய்வுதியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக எழுந்து வருகிறது. அவ்வப்போது பேராசிரியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது; விடைத்தாட்களை திருத்தாமல் புறக்கணிப்பது என பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை நிரந்தர தீர்வு காணப்படாமலே சிக்கல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், மீண்டும் முறையாக சம்பளம் வழங்கவில்லை என்று, காமராஜர் பல்கலை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கண்களில் கருப்புத் துணி கட்டி பல்கலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கமான பல்கலை பணி பாதிக்காத வகையில் தங்களது பணி நேரத்திற்கு முன்பாகவும், பணி முடித்து வீடு திரும்பும்போதும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த அமைதி வழி போராட்டத்தை தொடர்கின்றனர்.
ஏற்கெனவே, முறையாக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது பல்கலை துணைவேந்தரும் ராஜினாமா செய்துவிட்ட நிலையில், ஒருங்கிணைப்பு கமிட்டியின் மேற்பார்வையில் பல்கலை இயங்கி வருவதும் இந்த தாமதத்திற்கு காரணம் என்கிறார்கள். ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவர் சென்னையில் இருப்பதால் நிர்வாகத்தை நேரடியாக கவனிக்க இயலாமல் பல்கலைகழகத்தின் பணிகள் முடங்கிக்கிடக்கின்றன என்கிறார்கள்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.