ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பிற்கு சிறந்த கல்லூரிகள் ! ஹோட்டல் துறை என்றொரு உலகம் பகுதி –7
உலகெங்கும் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பை பற்றிக்கொள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு பேருதவியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இனி வரும் காலங்களில் மக்களின் பயணமும் அதிகரிக்கும், வீட்டில் உணவு சமைத்து சாப்பிடும் பழக்கமும் குறைந்து கொண்டே இருக்கிறது. காரணம், இன்றைய சூழ்நிலையில வேலை மற்றும் வாழ்வியல் முறை அப்படி சென்று கொண்டிருக்கிறது. அதனால் ஹோட்டல் துறையின் வளர்ச்சி வரும் காலங்களில் இன்னும் வேகமாக இருக்கும்.
ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கான சிறந்த கல்லூரிகள் எவை என்ற சந்தேகம், எப்பொழுது இந்த படிப்பிற்கான முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்ற கேள்விகள் எழுவது நிதர்சனம். முதலில் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் உலகத்திலேயே மிகச் சிறந்த கல்லூரிகளைப் பார்ப்போம். Culinary Institute of America என்ற சமையல் கலையில் ஆகச்சிறந்த கல்லூரி அமெரிக்காவில் இருக்கிறது. அவர்களது ஒரு கிளை சிங்கப்பூரிலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது அல்லாமல் ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்று ஒட்டு மொத்த ஹோட்டல் துறையைப் பற்றி படிக்க வேண்டும் என்றால் உலகிலேயே சிறந்த நாடு ஸ்விட்சர்லாந்து ஆகும்.
என்னங்க? நீங்க பாட்டுக்கு அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து அப்படின்னு வெளிநாடுகள் பத்தியே பேசிட்டு இருக்கீங்கன்னு நினைக்கலாம். ஹோட்டல் துறைங்கிறது ஒரு உலகமயமான துறை ஆகியதால், உலகத்திலேயே சிறந்த கல்லூரிகள் பற்றி நாம் பேச வேண்டிய அவசியம் இருக்கிறது.
அதே போல, இந்தியாவிலேயே ஹோட்டல் மேனேஜ்மென்ட் மிகச் சிறந்த படிப்புக்காக இருக்கும் கல்லூரி மத்திய அரசால் நடத்தப்படும் கல்லூரிகள் ஆகும். IHMCT(Institute of Hotel Management and Catering Technology) என்றும் SIHMCT (State Institute of Hotel Management and Catering Technology) என்றும் அரசாங்க கல்லூரிகள் இந்தியா முழுவதும் இயங்கி கொண்டிருக்கின்றன. IHMCT என்பது மத்திய அரசால் நடத்தப்படும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கான மிகச் சிறந்த கல்லூரியாகும். இவை ஒரு மாநிலத்திற்கு ஒரு கல்லூரி இருக்கிறது. அதேபோல SIHMCT என்பது மாநில அரசுகளால் நடத்தப்படும் கல்லூரியாகும்.
இந்த இரண்டு கல்லூரியுமே ஒரே பாடத்திட்டத்தின் கீழ், மத்திய அரசின் வழிகாட்டுதலின் கீழேயே நடக்கிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. பொதுவான பள்ளி மற்றும் பொது அறிவு கேள்விகள்தான் இந்த தேர்வில் இருக்கும்.
அந்த நுழைவுத்தேர்வின் விண்ணப்பங்கள் கடந்த 2024-ல் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து மார்ச்சு மாத இறுதிவரை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. https://exams.nta.ac.in/NCHM/ என்ற இணையதளத்தில் தேர்வுக்கான விபரங்கள், கட்டண விபரங்கள் சேர்க்கை விபரங்கள் என அனைத்து தகவலும் தரப்பட்டுள்ளது.
உலகத்திலேயே சிறந்த கல்லூரிகளின் பட்டியலில் இந்தியாவின் சில கல்லூரிகளும் உள்ளது. அதில் ஒன்று, சென்னை தரமணியில் பிலிம் இன்ஸ்டிடியூட்டின் அடுத்து இருக்கும் கல்லூரி ஆகச் சிறந்த கல்லூரியாகும். இங்குதான் செஃப்தாமு, அவருக்கும் சீனியரான ஐயா பொன்னிளங்கோ ஆகியோர் படித்தனர்.
இந்தியாவிலேயே ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரிக்கான மிகப்பெரிய இடவசதியைஅழகின் வசதியைக் கொண்டது நம் திருச்சியில் உள்ள (SIHMCT ) மாநில உணவக மேலாண்மைக் கல்லூரியாகும். சென்னையில் இருப்பது மத்திய அரசு திருச்சியில் இருப்பது மாநில அரசு நடத்தும் கல்லூரிகள் ஆகும். இரண்டுமே சுற்றுலாத்துறையின் கீழ் இயங்குகிறது.
இங்கிருந்துதான் பல உலக புகழ்பெற்ற ஹோட்டல் நிர்வாகிகள், முதலாளிகள், ஆகியோர் உருவாகி இருக்கிறார்கள். அரசு கல்லூரிகள் மட்டும் இல்லாம தனியார் கல்லூரிகளும் நிறைய இருக்கின்றன. தாஜ் ஹோட்டல் நடத்தும் தனியார் கல்லூரி, வெல்கம் ஹோட்டல் நடத்தும் தனியார் கல்லூரி ஆகியவையும் உள்ளன. அதோடு மட்டுமல்லாமல் கோவா, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், துர்காபூர் போன்ற ஊர்களிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறந்த தனியார் கல்லூரிகளும் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் பல தனியார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்கல்லூரிகள் இருக்கிறது. சென்னையில் SRM, Asan Memorial, Dr. MGR, Bharat Univeristy, VELS university போன்ற தனியார் கல்லூரிகளும், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறது. கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி, PSG College,போன்ற கல்லூரிகள் தனியார் கல்லூரிகள் உள்ளன. திருச்சியில் Jenneys Academy, SRM, இருக்கிறது. இதுபோன்று Bell IHM சிவகாசி, VITவேலூர், Annai Fathima மதுரை, IIHMCT, Bharath தஞ்சாவூர், அழகப்பா பல்கழைக்கழகம் காரைக்குடி ஆகிய கல்லூரிகளும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்த கல்லூரிகளில் இருக்கும் படிப்புகள் அனைத்தும் பல்கலைக்கழகங்களின் கீழும் அரசு வழிகாட்டுதலின் படியும் நடந்து கொண்டிருக்கிறது. NCHMT -National Council for Hotel Management and CeteringTechnolgy இன் கீழ் இயங்கும் IHMCT மற்றும் SIHMCTஆகியஅரசு கல்லூரிக்கான விண்ணப்பத்தை ஜனவரியில் இருந்தே இணையதளத்தில் தேடத் துவங்குவது சிறந்தவழியாகும். தனியார் கல்லுரிகளுக்கு விண்ணப்பங்கள் 12-ஆம் வகுப்பு முடிக்கும் பொழுது வாங்கத் துவங்கலாம். மேற்கொண்டு ஏதேனும் தகவல்கள் நமக்கு தேவைப்படும்போது https://exams.nta.ac.in/NCHM/ மற்றும் https://nchm.gov.in ஆகிய இணையதளங்களில் இருக்கிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உலகெங்கும் வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கும் இந்தத்துறையை படிக்க தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்,சிலர் ஏற்கனவே நமது தொடரை படித்துவிட்டு சில சந்தேகங்கள் கேட்டு நம்மை தொடர்பு கொண்டதில் மகிழ்ச்சி. அந்த ஆர்வத்தை நாம் பாராட்டுகிறோம். தேவையான தகவல்களை நம்மிடம் கேட்க தயங்க வேண்டாம்.
இந்த தொடரின் இந்த இதழைப் படித்துவிட்டு மேற்கொண்டு ஏதேனும் சந்தேகம் இருப்பின், அங்குசம் மின்னஞ்சல் (angusamnews2@gmail.com) அல்லது அலுவலகத்திற்கு தகவல் அனுப்பினால் நாம் தொடர்ந்து வழிகாட்ட காத்திருக்கிறோம். மேற்குறிப்பிட்ட பெரும்பாலான கல்லூரிகளுக்கு இக்கட்டுரை ஆசிரியரைப் பற்றி நன்கு தெரியும் என்பதால் அந்த கல்லூரிகளை தொடர்புகொள்ளவும். உதவி புரிய இயலும். ஆனால், கல்லூரியின் விதிமுறை பின்பற்றிதான் சேர்க்கை நடைபெறும். இது அட்மிசன்நோட்டீஸ் அல்ல! வழிகாட்டும் உதவி மட்டுமே!
தொடரும் …
— கபிலன்.
[…] […]