துறையூர் – பணியிலிருந்த போக்குவரத்து பெண் காவலரை கடித்த இளைஞர் கைது !
துறையூரில் பணியிலிருந்த போக்குவரத்து பெண் காவலரை கடித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகேயுள்ள வேலம்பட்டியைச் சேர்ந்த ஜெயகுமாரின் மனைவி அம்பிகா(32). இவர் துறையூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக உள்ளார். இவர் இன்று இரவு 8 மணியளவில் துறையூர் பாலக்கரையில் நின்று பணி செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் சென்றனர். காவலர் அம்பிகாவைப் பார்த்ததும் வேகமாக அந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞர் தன் வாகனத்தை வேகமாகத் திருப்பிய போது கீழே விழுந்தனர்.இதைக் கவனித்த அம்பிகா விரைந்து சென்று இருவரையும் தூக்கிவிட முயன்ற போது வாகனம் ஓட்டி வந்த நபர் அம்பிகாவின் கையை விடாமல் கடித்துள்ளார்.
ரத்தம் வரும் அளவிற்கு வலதுகை கட்டை விரலை கடித்தபடியே இருந்துள்ளார். இதனால் வலி பொறுக்க முடியாமல் கதறிய அம்பிகாவை அந்தப் பகுதியிலிருந்த பொதுமக்கள் கடித்த நபரை நன்கு கவனித்து அம்பிகாவை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே பொதுமக்கள் அந்த இரண்டு இளைஞர்களையும் பிடித்து துறையூர் போலீஸில் ஒப்படைத்தனர்.
போலீஸார் இருவரையும் விசாரித்த போது வாகனம் ஓட்டிய நபர் முசிறி தாலுகா மேலபுதுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ஜெகதீசன்(18) என்பதும், பின்னால் அமர்ந்து சென்ற நபர் முசிறி தாலுகா, வடக்கு நல்லியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் அஜீத்(30) என்பதும் தெரிந்தது. இதையடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். பெண் காவலர் கையை கடித்த சம்பவத்தால் அந்தப் பகுதி பெரும் பரபரப்பாக இருந்தது. 2 நபர்களும் குடிபோதையில் இருந்துள்ளனர். என்பது குறிப்பிடதக்கது.
– அருண்








Comments are closed, but trackbacks and pingbacks are open.