வறுமைக்காக வாடகை தாயாக மாறிய இளம்பெண் – ஏமாந்து தவிக்கும் அவலம் !
வறுமைக்காக வாடகை தாயாக மாறிய இளம்பெண் – ஏமாந்து தவிக்கும் அவலம் !
வாடகைத்தாய் கலாசாரம் தற்போது வேகமாக எல்லா இடங்களிலும் பரவி வருகிறது. குழந்தை பேறு இல்லாத பணக்கார தம்பதிகள் இந்த வாடகை தாய்மார்களை பயன்படுத்தி, செயற்கை முறையில் குழந்தை பெற வைத்து, பின்னர் அதற்கு பெரிய அளவில் பணம் கொடுத்து, குழந்தைகளை வாங்கி சென்று விடுவார்கள்.
தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள பெரிய தனியார் செயற்கை கருத்தரிப்பு மருத்துமனைகள் இந்த குழந்தை வியாபாரத்தை செய்து வருகிறார்கள். பணத்துக்கு ஆசைப்பட்டு பல இளம்பெண்கள் இந்த வாடகை தாய் தொழிலை செய்து வருகிறார்கள்.
இதில் பாதிக்கப்பட்ட 24 வயதான இளம்பெண் ஒருவர் தான், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவை கொடுத்து அதிரடி வைத்துள்ளார். புகார் கொடுத்த இளம்பெண் திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்.
புகாரில் அவர் குடும்ப வறுமையான சூழல் காரணமாக, என் தோழி ஒருவர் மூலம், அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில், வாடகை தாயாக இருக்க சம்மதித்தேன். நான் வாடகை தாய் தொழிலில் முதன்முதலாக ஈடுபட்டேன். செயற்கை முறையில் கருவை வயிற்றில் சுமந்து, ஒரு ஆண் குழந்தை பெற்று கொடுத்தால், ரூ.4 லட்சம் தருவதாக சொன்னார். நானும் அதற்கு சம்மதித்தேன். என்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு ஒப்பந்தம் போட்டார்கள். குழந்தை பிறந்தவுடன், பணத்தை வாங்கிக்கொண்டு வெளியில் சொல்லாமல் போய் விடவேண்டும், என்று நிபந்தனை போட்டார்கள். குழந்தையை யாருக்கு கொடுக்கப்போகிறார்கள் என்பதை என்னிடம் சொல்லவில்லை.
2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான் குறிப்பிட்ட ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன். செயற்கை முறையில் கருவுற்று, நான் குழந்தையை வயிற்றில் சுமந்தேன். சுகமான சுமையாகத்தான் இருந்தது. ரூ.4 லட்சம் கிடைக்கும் என்ற சந்தோசத்திலும் என்னுடைய குடும்ப பிரச்சனை தீர்ந்து விடும் என்கிற நம்பிக்கையில் எனக்கு அந்த சுமை மேலும் சுகமாக இருந்தது. குழந்தை பிறக்கும்வரை என்னை கண்ணைப்போல அந்த ஆஸ்பத்திரியில் கவனித்து கொண்டார்கள்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக எனது வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருந்தன. இதனால் எனக்கு ரூ.1 லட்சம் கூடுதலாக, ரூ.5 லட்சம் தருவதாக சொன்னார்கள். இரட்டை குழந்தை எனக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்தது. கடந்த ஜனவரி 3-ந் தேதி எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளை என்னிடம் காட்டிவிட்டு எடுத்து சென்று விட்டனர். பின்னர் என்னை ஆஸ்பத்திரியில் இருந்து அனுப்பிவிட்டனர். ஒரு வாரம் கழித்து வந்து ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறினார்கள். ஒரு வாரம் கழித்து ஆஸ்பத்திரிக்கு வந்தேன்.
அப்போது அவர்கள் சொன்ன தகவல் எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. நான் பெற்று கொடுத்த இரண்டு குழந்தைகளும் இறந்து விட்டன என்றும், எனவே ரூ.5 லட்சம் தர முடியாது என்றும் தெரிவித்தனர். ரூ.10 ஆயிரம் மட்டுமே தர முடியும் என்றும் சொன்னார்கள். என்னை மிரட்டி ரூ.10 ஆயிரத்தை மட்டும் கொடுத்து வெளியில் அனுப்பி விட்டனர்.
எனக்கு ரூ.5 லட்சம் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை ஏமாற்றிய ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் மீதும் உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அமைந்தகரை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இருதரப்பினரையும் காவல் நிலையத்தில் போலீசார் விசாரித்தனர். இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: இருதரப்பினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரண்டு தரப்பினரும் சமாதானமாக செல்வதாக கூறினர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு தொகை வழங்குவதற்கு, நடவடிக்கை எடுப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இழப்பீடு தொகை வழங்குவதாக உறுதியளித்து உள்ளனர். என்கிறார்கள்.
வாடகைத் தாயாக செல்லும் பெண்களை, மருத்துவமனை நிர்வாகம், குழந்தையில்லாத தம்பதி மற்றும் புரோக்கர்கள் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள். ஆனால் குழந்தையை பெற்ற பிறகு வாடகை தாய்களை யாரும் கண்டுகொள்வதில்லை. மேலும் புரோக்கர்கள் பிடியில் சிக்கி வாடகைத் தாய்கள் ஏமாற்றப்பட்டு சீரழிந்து விடுகிறார்கள்.
இந்தியாவில் செயற்கை முறை கருவூட்டலுக்கான வாடகை தாய் செலவு குறைவு என்பதால் வெளிநாட்டு தம்பதியினர் அதிகம் இங்கு படையெடுத்து வருகின்றனர்.