ஊருக்கு உபதேசம் கிடக்கட்டும் … முதல்ல உட்கார சீட் கொடுங்கள் ஆபிசர்ஸ் !
தேனி மாவட்டம், உத்தம பாளையம் தாலுகா, மணலாறு பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தமிழ்நாட்டில் வளரிளம் பருவத்தில் அதிகமாகக் கர்ப்பங்கள் நிகழும் 24 வட்டாரங்களில் தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்ட தொடக்க விழா மணலாறு மேகமலையில், நடைபெற்றது.
இதில் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இசை கருவிகளை இசைத்து தொடங்கி வைத்தார். தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹ ப்ரியா, மேகமலை கோட்ட உதவி இயக்குனர் விவேக் குமார் பிரசாந் யாதவ், மாவட்ட இணை இயக்குனர் கலை செல்வி, தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முத்து சித்திரா, மாவட்ட சுகாதார அலுவலர் ஜவகர் லால், துணை இயக்குனர் (தொழு நோய்) ரூபன் ராஜ், துணை இயக்குனர் (காச நோய்) ராஜ பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆனாலும், இந்த நிகழ்ச்சியில் மணலாறு சேர்மன் மற்றும் துணை சேர்மன் இரண்டு பெண்களையும் உட்கார கூட அனுமதிக்கப்படாதது சர்ச்சையாகியிருக்கிறது. குழந்தை திருமணங்களை தடுக்கும் நோக்கில் அதுவும் பெண்களை மையப்படுத்தி நடத்தப்பட்ட அரசு விழாவில், சேர்மன் துணை சேர்மன் பதவி வகிக்கும் இரண்டு பெண்களைக்கூட மதிக்காமல் என்ன விழிப்புணர்வு நிகழ்ச்சியோ என வேதனை தெரிவிக்கிறார்கள், உள்ளூர் பகுதி மக்கள்.