காவிரி பாய்ந்தோடும் பகுதிகளில் குடிநீர் பஞ்சம் ! – தண்ணீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் !
காவிரி பாய்ந்தோடும் பகுதிகளில் குடிநீர் பஞ்சம் ! – தண்ணீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் ! கடத்தூர் பேரூராட்சியில் 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்குவதாகவும் அதையும் கடந்த, 20 நாட்களாக வழங்கவில்லை எனவும் முறையாகக் குடிநீர் வழங்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள், காலிக் குடங்களோடு போராட்டத்தில் குதித்தனர்
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. அதில் ஒன்றுதான் 15-வது வார்டுக்குட்பட்ட ரத்தினம் பிள்ளை தெரு இப்பகுதியில் சுமார் 1000 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனர்,
இவர்களுக்கு வழக்கமாக பத்து முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிதண்ணீர் வழங்கப்படுவதாகவும் தற்போது 20 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வழங்காததால் ரூ1000 முதல் 1500 ரூபாய் வரை விலை கொடுத்து தங்களுக்கு வேண்டிய குடி தண்ணீரை வாங்கி பூர்த்தி செய்துக் கொள்வதாகவும் , இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், அவர்கள் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி, ஆத்திரமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்தினம் பிள்ளை வீதியில் மறியலில் ஈடுபட்டனர்.
“மறியலில் ஈடுபட்ட அப்பகுதியை சேர்ந்த ஆதிமூலம் கூறுகையில் இப்பகுதி தண்ணீர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிதான் கிட்டதட்ட 5 வார்டுகளில் ஐந்தாயிரம் பேருக்கு மேல் வசிக்கும் இப்பகுதியில் வெறும் முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவுக்கொண்ட நீர்த்தேக்க தொட்டி ஒன்றுதான் உள்ளது.
ஒரு மனிதனுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 60 லிட்டர் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை, இங்கு வசிக்கும் ஐந்தாயிரம் பேருக்கு ஒருநாளைக்கு குறைந்தது முப்பது ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவை ஆனால் இங்கு 12 நாளைக்கு ஒருமுறைதான் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது , மற்ற 11 நாட்களுக்கு நாங்கள் விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் , இங்க நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை காரணமாக வைத்து தண்ணீர் கேன் விற்பனையாளர்கள் ரூ. 35 முதல் 40 ரூபாய் வரை விலையை உயர்த்தி விட்டார்கள்
சமீபத்தில் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்திலும் , மேலும் ஒரு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி கொடுக்க வேண்டும் என பலமுறை மனு அளித்து கோரிக்கை வைத்தோம் , ஆனால் பேரூராட்சி நிர்வாகம் அதற்காக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை, பேரூராட்சி தலைவர் மணி என்பவர் நீங்கள் என்ன எனக்கு ஓட்டு போட்டிங்களா என்று நக்கலாக கேட்கிறார்.
வேண்டப்பட்டவர்களிடம் . 25 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு உள்ளாட்சி நிர்வாகத்திற்கு கணக்கு காட்டாமல்
பொது குடிநீர் குழாய் அமைத்து விடுகிறார்கள் பேரூராட்சிக்கு சம்பந்தப்பட்டவர்கள், அந்த குழாய் மூலம் திருட்டு தானமாக மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சி எடுப்பதால் , மற்றவர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை , உடைந்த பைப்பில் கசியும் உப்பு தண்ணீர் இப்பகுதி மக்கள் சேகரித்து உபயோகித்து வருகின்றனர் அதை கூட சீர் செய்யவில்லை.
அதேபோல் சிறிய அளவு நீர்த்தேக்க தொட்டியை வைத்து , 12 பிரிவுகளாக பிரித்து , நாளொன்றுக்கு ஒரு பிரிவு என குடிநீர் வழங்குவதால் 12 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் சுழற்ச்சி முறையில் குடிநீர் இங்கு விநியோகம் செய்யப்படுகிறது என மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து கடத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயசங்கரிடம் கேட்டபோது ? சார் நீங்கள் குறிப்பிடும் ரத்தினம் பிள்ளை தெருவில் போராட்டம் எல்லாம் செய்யவில்லை, புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி முடிவு பெற்றது. தற்போது 3 நாட்களாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது , புதிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கோரிக்கையை பேரூராட்சி தலைவரிடம் மனு கொடுத்து அப்பகுதி மக்கள் முறையிட வேண்டும் அதேபோல் முறையற்ற குடிநீர் கனெக்சன் யாருக்கும் வழங்கவில்லை என்றார்.
குடிநீர் இன்னும் வழங்கவில்லை புதிய குழாய்களில் கசிவு ஏற்படுகிறதா என்று ஒருநாள் தண்ணீர் விட்டு பார்த்தோம் கசிவு ஏற்பட்ட இடங்களில் சரி செய்து பின்னர் குடிதண்ணீர் வழங்குவோம் என்றார் வார்டு கவுன்சிலர் மயில்சாமி
அருகில் இருக்கும் ஒகேனக்கல் காவிரிக்கரையோரப் பகுதியை ஒட்டியுள்ள தர்மபுரி மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடத் துவங்கியுள்ளது கடத்தூர் பேரூராட்சி நிர்வாகம் என்ன செய்ய போகிறது பார்கலாம் .
– மணிகண்டன்