வாசிப்பு மோகம் வளரவில்லை என்பதற்கு இந்த எழுத்தாளர்களே காரணம் !
தோராயமாய் ஒரு கணக்கு !
1000 ஸ்டால்கள். ஒவ்வொருவரும் 2 – 4 ஸ்டால்கள் எடுத்திருக்கலாம். ஒரு பதிப்பகம் 10 முதல் 100 டைட்டில்கள் வரை புதிய நூல்கள் வெளியிட்டுள்ளன. ஆக ஸ்டாலுக்கு சராசரியாக 10 முதல் 20 டைட்டில்கள் என்று கணக்கிட்டால் கூட 20,000 டைட்டில்கள் வந்துள்ளன.
புத்தம் புது புத்தகங்களை வந்த சில இலட்சம் பேரில் எத்தனை ஆயிரம் பேர் தேடி வாங்கியிருப்பர் ? இந்த 20,000 டைட்டில்களில் எது சிறந்த – வாசிக்கும்படியான புத்தகங்கள்? யார் பரிசோதித்து சொல்வது? சில பிரபல பத்திரிக்கைகள் வலிந்து வலிந்து 10 நாட்களும் 10 X 10 புத்தகங்களை மதிப்புரை என்ற பெயரில் விளம்பரப்படுத்தும் போது ஒவ்வொருவருக்கும் நூறு டைட்டில் தேறாது.
இலட்சம் பிரதிகள் விற்கும் பிரபல பத்திரிகைகள் தமிழில் பார்த்தால் இரண்டு – மூன்றுக்கு மேல் கிடையாது. சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களாக – Youtube பதிவுகளாக இவர் புத்தகத்தை அவர் வாங்க, அவர் புத்தகத்தை இவர் வாங்க, இவர்கள் புத்தகங்களை சில திடீர் விஐபிக்கள் வெளியிட அது மட்டும் விளம்பரம் ஆகி விடுமா? அதுவே சிறந்த புத்தகங்களுக்கான தரச்சான்றிதழ் ஆகி விடுமா ? இந்த லட்சணத்தில் இவ்வருடம் புத்தகத் திருவிழாவில் விற்பனை ரொம்ப கீழே இறங்கி விட்டது என்ற குரல்கள் வேறு.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த வருட வியாபாரத்திற்கு போன வருடம் பரவாயில்லை. போன வருட விற்பனைக்கு அதற்கு முந்தைய வருடம் விற்பனை பரவாயில்லை. அதற்கு முந்தைய வருட விற்பனை சிறப்பாக இருந்தது. வருடந்தோறும் இந்தப் புலம்பல் ஓயாது ஒலிக்கிறது. யாருக்கும் வாசகன் எதை விரும்புகிறான். எதைத் தேடுகிறான் என்பதை அறிந்து கொள்வதில் விருப்பமில்லை. தான் ஒரு பெரிய எழுத்தாளன், அதை வாங்கி வாசகன் வாசித்தே தீருவான் என்ற எண்ணப் போக்கு கொண்ட எழுத்தாளன்கள் வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே உள்ளவரை இந்தப் புலம்பல் அதிகமாகவே ஒலிக்கும்.
இது தமிழ் எழுத்துச் சூழலுக்கான சாபம். எழுத்தாளனை விட வாசகன் அதிகமாய் சிந்திக்கிறான், அறிவாளியும் ஆகி விட்டான் என்பதை மட்டும் யாரும் அறிந்து கொள்ளத் தயாராக இல்லை. இங்கே எழுத்தாளன் ஆகும் மோகம் வெறி கொண்டு கிளம்பியிருப்பதற்கு 1000 – இல் ஒரு பங்கு கூட வாசிப்பு மோகம் வளரவில்லை என்பதற்கு இந்த எழுத்தாளர்களே காரணம் என்பதை யார்தான் எடுத்துச் சொல்வது ?
— கா.சு. வேலாயுதன்.