“பெரியார் குறித்து சீமான் பேசியது எனக்கு தெரியாது”– ‘வணங்கான்’ பாலா சொன்னது!
நல்ல படங்களை தயாரித்தால் மக்கள் நிச்சயம் வரவேற்பு தருவார்கள், வெற்றியை பரிசளிப்பார்கள் என தொடர்ந்து நம்பிக்கையுடன் படங்களை தயாரித்து வரும் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘வணங்கான்’ படத்தின் வெற்றியால் இன்னும் உற்சாகம் அடைந்துள்ளார்.
ஊடகங்களின் நேர்மையான, பாசிட்டிவான விமர்சனமும் ரசிகர்களின் வரவேற்பும் இந்தப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஜனவரி 19 ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது வணங்கான் படக்குழு.
இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் பாலா மற்றும் நாயகன் அருண்விஜய் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது நன்றியை தெரிவித்தனர்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி,
“ஒரு படம் முழுக்க கதாநாயகனை வாய் பேச முடியாமல் நடிக்க வைக்க முடியும் என்றால் அந்த பெருமை இயக்குநர் பாலா அண்ணனை தான் சேரும். இந்த படம் மக்களுக்கும் மீடியாக்களுக்கும் ரொம்ப நெருக்கமாகவே அமைந்து விட்டது என நான் நம்புகிறேன். இதை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் சிம்புவையோ இயக்குநர் பாலாவையோ அவர்களுடன் பணியாற்றி வேலை வாங்குவது சிரமம் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் அப்படி எதுவும் கிடையாது. இவர்களை எளிதாக கையாள முடியும் என்று நாம் நினைப்பவர்களிடம் படைப்புத்திறன் இருக்காது. நாம சரியாக இருந்தால் மற்றவர்கள் சரியாக இருப்பார்கள். உறவு என்பது கண்ணாடி போன்றது தான். அதை சரியாக கையாள வேண்டும்”.
ஹீரோ அருண்விஜய்
‘வணங்கான்’ படத்தை மக்களிடம் நீங்கள் கொண்டு சேர்த்த விதமும் மக்கள் அதை பார்த்துவிட்டு பாராட்டும் போதும் மீடியாக்களின் பங்களிப்பு அதில் நிறைய இருக்கிறது என்பது மறுக்க முடியாதது. என்னுடைய திரையுலக பயணத்தில் ‘வணங்கான்’ ஒரு மைல் கல் படமாக அமைந்ததற்கு பாலா சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படம் முழுக்க பேசாமல் நடிக்கும் ஒரு கதாநாயகனாக மக்களை சென்றடைய முடியும் என என் மீதே எனக்கு நம்பிக்கை வர செய்தவர் இயக்குநர் பாலா. அந்த அளவிற்கு எனக்குள்ள இருந்து நிறைய உழைப்பை பாலா சார் வாங்கி இருக்கிறார்.
இந்தப் படத்தின் உருவாக்கமே எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது.. ஒரு கதாபாத்திரத்தின் ஆழத்தை புரிந்து கொள்வது எப்படி என்கிற விஷயத்தை இதில் கற்றுக் கொண்டேன். வாழ்க்கையில் இது போன்று மீண்டும் ஒரு படம் பண்ண முடியுமா என தெரியவில்லை. பொங்கல் பண்டிகை ரிலீஸாக இந்த படம் வர வேண்டும் என, தான் எடுத்த முடிவில் உறுதியாக நின்று ரிலீஸ் செய்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சாரின் தைரியம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அவருக்கும் நன்றி”.
“நன்றி என ஒற்றை வார்த்தையில் சொல்லி கடந்து சென்று விட முடியாது” என சில வார்த்தைகள் மட்டுமே பேசிய டைரக்டர் பாலா “நீங்கள் கேள்விகள் கேட்கலாம். நான் பதில் சொல்றேன்” என்று சொல்லிய பின்பு நடந்த உரையாடல். “இந்தப் படத்தை நீங்க எல்லாரும் ரசித்ததால் தான் இந்த அளவிற்கு அதைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய நன்றி.

என்னுடைய படங்களின் க்ளைமாக்ஸில் தொடர்ந்து வன்முறை, ரத்தம், சோகம் இடம்பெறுகிறதே, இது உங்கள் குருநாதர் பாலுமகேந்திராவிடம் இல்லையே.. உங்களிடம் மட்டும் எப்படி என நீங்கள் கேட்கிறீர்கள், இது கற்றுக்கொண்டு வருவதில்லை.. அது ரத்தத்திலேயே இருக்கிறது. நான் சொல்வது தவறான பதிலாக கூட இருக்கலாம்..
படத்தின் துவக்கத்தில் அருண்விஜய் ஒரு கையில் பெரியார் சிலை, ஒரு கையில் விநாயகர் சிலையுடன் தோன்றுவதே படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கான ஒரு குறியீடு தான். பல வருடங்களாகவே கன்னியாகுமரியை களமாக கொண்டு படங்கள் எடுக்கப்படவே இல்லை. மற்ற எல்லா ஊர்களையும் படங்களில் கொண்டு வந்து விட்டார்கள். இது மட்டும் பாக்கி இருக்கிறதே என்பதற்காக கன்னியாகுமரியை எடுத்துக் கொண்டேன்.
என்னுடைய படங்கள் இரண்டே கால் மணி நேரத்திற்குள் தான் இருக்கும். இந்தப் படத்தில் கதை சொல்லப்பட்ட விதம், குறிப்பாக இரண்டாம் பகுதி ரொம்பவே வேகமாக செல்லும். அதனாலேயே உங்களுக்கு ஏதோ சிறிய படம் போல தோன்றுகிறது. இந்த படத்தின் கதை சென்னையில் நிஜமாகவே ஒரு பள்ளியில் நடந்த நிகழ்வு தான்.. பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை.. பாலியல் கொடுமைகளுக்கு இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளதை விட இன்னும் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
பேசிப்பேசி தான் எல்லா விஷயத்தையும் புரிய வைக்க வேண்டும் என்கிற இந்த காலகட்டத்தில் பேசாமலும் புரிய வைக்கலாம் என எடுத்துக்கொண்ட ஒரு முயற்சி தான் அருண்விஜயின் வாய் பேச முடியாத, காது கேட்காத கதாபாத்திரம். கிறிஸ்துவத்தை கிண்டல் பண்ணுகிறேனா என தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அந்த தங்கை கதாபாத்திரம் பாடும் ஒரு பாடலை ஒருமுறை கேட்டுப் பாருங்கள்.. அதன்பின் நீங்கள் அப்படி சொல்லவே மாட்டீர்கள்.. நடிகர் திலகம் சிவாஜியை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்பதால் அவரைப் போன்ற தோற்றம் கொண்ட ஒரு கதாபாத்திரம் என் படத்தில் வந்து விடுகிறதோ என்னவோ ?

இந்த படத்தில் எப்படி ஜெயிலில் இரண்டு பெண்கள் சர்வ சாதாரணமாக ஒரு கைதியை சென்று பார்க்க முடியும் என சிலர் லாஜிக் கேட்டார்கள் ஆனால் அது ஜெயில் அல்ல.. அது மருத்துவமனையிலேயே உள்ள தனியான நோயாளிகள் பிரிவு. நீதிபதி அதைத்தான் உத்தரவாக சொல்லி இருப்பார். அதை பலர் கவனிக்க தவறியதால் தான் லாஜிக் மிஸ்டேக் என கூறுகிறார்கள். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திலிருந்து மிஷ்கினுடன் இணைந்து ஒரு படம் பண்ணி விட வேண்டும் என ஆர்வமாக இருந்தேன். அது இந்தப் படத்தில் நிறைவேறி விட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சூர்யா நடித்திருந்தால் இந்த படம் எப்படி இருந்திருக்கும் என்கிற கேள்வி இப்போது தேவையில்லை. ஏன்னா அருண்விஜய் நடித்து, இதோ இப்போது இந்த படத்தை நீங்களே ஹிட் பண்ணியும் கொடுத்து விட்டீர்கள். என்னை எல்லோரும் கோபக்காரன் என்றும், என்னிடம் பயப்படுகிறார்கள் என்றும் சொல்கிறீர்கள். அப்படி இதுவரை எங்காவது நடந்திருக்கிறதா ? தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அருண்விஜய், இதற்கு முன் நடித்த, என்னுடன் பணியாற்றியவர்களிடம் கூட கேட்டுப் பாருங்கள். என்றாவது ஒரு நாள் கூட யாரிடமாவது முகம் சுண்டி இருக்கிறேனா என்று கேட்டு பாருங்கள்.
என்னுடைய படங்களில் நடித்த ஹீரோக்கள் அடுத்து என் படங்களுக்கு மீண்டும் நடிக்க வருவது இல்லையே எனக் கேட்கிறீர்கள்.. ஏன் சூர்யா, ஆர்யா எல்லோருமே நடித்திருக்கிறார்களே? அது மட்டுமல்ல புதுப்புது நடிகர்களுடன் பணியாற்றும்போது தான் புதிய அனுபவங்கள் கிடைக்கும். மாற்றுத்திறனாளிகளை பார்த்துவிட்டு பரிதாபப்பட்டு அப்படியே விலகி செல்லக்கூடாது. அவர்களின் உலகத்தையும் நாம் காட்ட வேண்டுமே. நம்மிடையே தானே, நம்மை நம்பித்தானே அவர்களும் வாழ்கிறார்கள்.
பொங்கலுக்கு வெளிவந்த மதகஜராஜா படம் வெற்றி பெற்றிருக்கிறது. விஷாலுக்கு என் வாழ்த்துக்கள். விஷாலுக்கு சமீபத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டதற்கு ‘அவன் இவன்’ படத்தில் நான் அவரது கண் பார்வை குறைபாடான கதாபாத்திரத்தை கொடுத்தது தான் என ஒரு சிலர் குற்றம் சாட்டி பேசி வருகிறார்கள். இன்னும் சிலர் நான் அவரது கண்ணை தைத்து விட்டதாக வேறு கூறினார்கள். அவரவர்களுக்கு தோன்றியதை பேசுகிறார்கள். அதை கண்டுகொள்ளத் தேவையில்லை. அதேபோல சீமான் பெரியார் பற்றி என்ன சொன்னார் என்று இப்போது வரை எனக்கு தெரியாது. நேற்று கூட அவரிடம் பேசினேன். இது பற்றி நானும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவரும் என்னிடம் அரசியல் பேச மாட்டார்” என்றார்.
— மதுரை மாறன்.