வெள்ளி விழா ஆண்டில் இயக்குனர் எழிலின் ‘தேசிங்குராஜா-2’
விஜய்யின் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக எழில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. இவரின் இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்களைத் தயாரித்த நிறுவனங்களும் தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியாகவே உள்ளனர். ஃபேமிலி செண்டிமெண்ட், காமெடி ஜானரில் தொடர் ஹிட்டுகளைக் கொடுத்து வரும் எழிலின் வெள்ளிவிழா ஆண்டில் ‘தேசிங்கு ராஜா-2’ தயாராகியிருப்பது மிகப் பொருத்தமே.
’இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ்’ பி.ரவிச்சந்திரன் தயாரித்து வரும் 11—ஆம் தேதி ரிலீசாகும் ‘தேசிங்கு ராஜா-2’வில் விமல் ஹீரோவாக நடிக்க, இவருக்கு இணையான கேரக்டரில் தயாரிப்பாளர் ரவிச்சந்திரனின் மகன் ஜனா அறிமுகமாகிறார். பூஜிதா பொன்னடா, ஜூலி, ஹர்ஷிதா, ஆர்.வி.உதயகுமார், சிங்கம்புலி, ரவிமரியா, ரோபோ சங்கர், சாம்ஸ், மதுரை முத்து, மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், குக்வித் கோமாளி புகழ் மற்றும் பலர் நடித்துள்ளனர். எழிலின் ‘பூவெல்லாம் உன்வாசம்’ படத்திற்குப் பிறகு, 23 வருடங்கள் கழித்து எழிலின் இந்தப் படத்தில் இசையமைத்துள்ளார் வித்யாசாகர். படத்தின் ஒளிப்பதிவு; செல்வா, பி.ஆர்.ஓ. : ஜான்சன். ‘தேசிங்கு ராஜா’ முதல் பாகம் 2013-ல் ரிலீசானது. 12 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் ரிலீசாகிறது.
அடுத்த வாராம் படம் ரிலீசாவதையொட்டி, ஜூன்.30—ஆம் தேதி இரவு சென்னை கமலா தியேட்டரில் ‘தேசிங்கு ராஜா-2’வின் டிரைலர் & பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
படத்தில் நடித்த அனுபவத்தையும் எழிலின் காமெடி சென்ஸையும் வெகுவாகப் பாராட்டினார்கள் படத்தில் நடித்த சாம்ஸ், ரவிமரியா, பூஜிதா, ஜூலி, ஹர்ஷா ஆகியோர்.
ரவிச்சந்திரனின் மகன் ஜனா பேசும் போது,
“மக்களை சிரிக்க வைக்கும் காமெடி படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்த போது எழில் சாரின் இந்தப் பட வாய்ப்பு வந்தது. என்னுடன் நடித்த சீனியர்களின் உதவியுடன் காமெடியில் என்னை இம்ப்ரூவ் செய்து கொண்டேன். நானே சில விஷயங்களை செய்ய நினைத்த போது, மீட்டருக்கு மேல நடிக்கக் கூடாது, நீங்க காமெடி பண்ணக்கூடாது. உங்களைச் சுற்றி தான் காமெடி நடக்கும் என ஸ்ட்ரிக்டா சொல்லிவிட்டார்கள் உதவி இயக்குனர்கள். அதான் எனக்கும் சரியாகப்பட்டது. ஹீரோ விமல் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்” என்றார்.
வித்யாசாகர் பேசும் போது,
“இந்தப் படத்தில் பேக்ரவுண்ட் ஸ்கோர் பண்ணுவதற்கு ரொம்பவே சிரமப்பட்டேன். அந்தளவுக்கு படத்தில் காமெடி சரவெடியாக அனைவரும் டயலாக் பேசியுள்ளார்கள். காமெடிக்கு 100% க்யாரண்டி இந்த ‘தேசிங்கு ராஜா-2’. எழிலின் படங்களை குடும்பத்துடன் பார்க்கலாம்” என்றார்.
ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு ஆகியோர் தமிழ் சினிமாவில் எழில் 25 ஆண்டுகள் கடந்து வந்திருப்பதை மிகவும் பெருமையாகப் பேசினார்கள்.
ஹீரோ விமல் பேசும் போது,

“எழிலுடன் எனக்கு இரண்டாவது படம். தேசிங்கு ராஜாவின் முதல் பாகத்தில் இருந்த நான் உட்பட சில கேரக்டர்கள் தான் இப்படத்தில் இருக்கு. மத்தபடி எல்லாமே வேறு, காமெடியால் புண்ணாகும் உங்க வயிறு” என்றார்.
டைரக்டர் எழில் பேசும் போது,
“ஒரு படத்தில் வேலை செய்யும் போது அதில் நடித்தவர்கள் ஒத்துழைப்பு கொடுப்பது பெரிய விஷயம் இல்லை. படம் முடிந்து ரிலீசாக்குத் தயாராகி, இது போன்ற புரமோஷன்களுக்கும் ஒத்துழைப்பது தான் பெரிய விஷயம். சினிமாவை நேசிக்க கூடிய தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் எனக்கு கிடைத்திருப்பது அதைவிட பெரிய விஷயம். முதல் பாகத்தின் வெற்றிக்குக் காரணம் விமல் தான். இந்த இரண்டாம் பாகம் வெற்றி பெறப் போவதற்கும் காரணம் விமல் தான். ரசிகர்களுக்கும் மீடியாக்களுக்கும் இப்படம் பிடிக்கும். அதனால் நிச்சயம் ஜெயிக்கும்” என்றார் மிகவும் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும்.
— மதுரை மாறன்