மானுட வாழ்வியலுக்கான தத்துவ நூல் திருக்குறள் – வேளாக்குறிச்சி ஆதீனம் பெருமிதம் !
இனம் கடந்து, மொழி கடந்து, மதம் கடந்து மானுட வாழ்விற்கான தத்துவ நூலாகத் திருக்குறள் நூல் திகழ்கின்றது என வேளாக்குறிச்சி ஆதீனம் பெருமிதத்துடன் கூறினார்.
மருங்காபுரி வட்டம், முத்தாழ்வார்பட்டி ஊராட்சி, முடுக்குப்பட்டியில் பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையானது வியாழக்கிழமை, 1928-இல் “திருக்குறள் தீபாலங்காரம்” என்னும் உரைநூலைத் தந்த மருங்காபுரி ஜமீன்தாரிணி கி.சு.வி.இலட்சுமி அம்மணி புகழ் போற்றும் விழா, பொங்கல் பெருவிழா மற்றும் திருவள்ளுவர் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழாவானது “குறளாலயம்” திருப்பணிக்குழுவின் தலைவரும், மணப்பாறை சிந்துஜா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் பெ.கலையரசன் தலைமையில் நடந்தது.

இந்த விழாவில் பங்கேற்று வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மேலும் பேசியது.
“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை முன்னெடுத்து வரும் “குறளாலயம்” தமிழ்த்திருப்பணி என்பது காலம் கடந்தும் போற்றக் கூடியதாகும்.
இந்தத் துணிச்சலான பணியை ஏற்று இன்று திருவள்ளுவர் சிலை நிறுவி, இன்னும் பத்து மாதங்களில் குறளாலயம் முழுமையான பணிகளை நிறைவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அறக்கட்டளையின் நிறுவனர் மணவை தமிழ்மாணிக்கம், திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் பெ.கலையரசன் உள்ளிட்ட திருப்பணிக் குழுவினரை பெரிதும் பாராட்டுகின்றோம்.
இந்தளவிற்கு தகவல் தொழில் நுட்ப வசதி இல்லாத அக்காலத்தில், சுமார் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு “திருக்குறள் தீபாலங்காரம்” என்னும் ஒப்பரிய நூலை யாத்துத் தந்த, இப்பகுதியை ஆண்ட மருங்காபுரி ஜமீன்தாரிணி கி.சு.வி. இலட்சுமி அம்மணி அவர்களை பெரிதும் போற்றுவோம்.
இதுபோன்ற செயற்கரிய சாதனைகளை நிகழ்த்துகின்றவர்களை தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும்.
திருக்குறள் நூலின் பெருமையை உரைக்கும் வகையில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்கள் அதன் பெருமையை விளக்குகின்றன.
திருவள்ளுவரின் பெருமையும், திருக்குறளின் தெளிவும் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் நம்மை வார்ப்பிக்கும். வழிநடத்தும் என யாம் நம்புகிறோம்.
இந்த நிகழ்வில் இந்து, இசுலாமியர், கிறித்தவர் என்ற சமய வேறுபாடின்றி தமிழ் மொழி என்ற உணர்வால் நாம் கூடியுள்ளோம். அதைத்தான் சார்லஸ் பாதிரியார் அவர்கள் தமது பேச்சில் குறிப்பிட்டார்.
செயற்கரிய செயலை செய்கின்ற ஒருவரைத்தான் வரலாறு வரவு வைக்கும். அத்தகைய செயற்கரிய செயலை மருங்காபுரி ஜமீன்தாரிணி கி.சு.வி.இலட்சுமி அம்மணி அவர்கள் செய்ததால் தான் நாம் போற்றுகிறோம்.
அதேபோல, குறளாலயம் என்னும் அரும்பெரும் பணியைச் செய்கின்ற அனைவரையும் நாளைய உலகம் பாராட்டும். நல்லதைச் செய்யவேண்டும் என நினைத்துவிட்டால் நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டியதில்லை. அதை இப்போதே செய்துவிடலாம்.
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற” என்று வள்ளுவர் கூறுவது, மனம் தூய்மையாக இருப்பதே அறம். மற்ற எல்லாம் வெற்று ஆரவாரம் தான் என்பார். அத்தகைய தூய்மையான அறத்தைச் செய்திட நாம் முயலவேண்டும்.
மனம் தூய்மையாவதற்கும், மானுட நேசத்தை வளர்ப்பதற்கும் திருவள்ளுவர் தந்த திருக்குறள் நூலைத்தவிர நமக்கு வேறு ஒன்றும் தேவையில்லை. ஆகவே, திருக்குறள் படித்தால் தெளிவு பெறலாம் என்றார் வேளாக்குறிச்சி ஆதீனம்.
நிகழ்வில் திருக்குறள் தொண்டாற்றி வரும் திருச்சியைச் சேர்ந்த திருக்குறள் சு.முருகானந்தம் அவர்களைப் பாராட்டி, திருக்குறள் திருத்தொண்டர் விருது வழங்கப்பட்டது.
அறக்கட்டளை நோக்கங்கள் மற்றும் “குறளாலயம்” திருப்பணிகள் குறித்து அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலர் மணவை தமிழ்மாணிக்கம் பேசினார்.
நிகழ்வில் திருச்சி புனித ஜான்பால் பல்சமய உரையாடல் மன்ற இயக்குநர் அருள்பணி முனைவர் ச.சார்லஸ், மணவைத் தமிழ்மன்றத் தலைவர் புரவலர் சௌமா.இராசரத்தினம், மணவை இலக்கிய வட்ட நிறுவனர் கவிஞர் மு.மு.அஷ்ரப்அலி, திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தின் அமைச்சர் உதயகுமார் பெரியசாமி, மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் கீழ் இயங்கிடும் செந்தமிழ்க் கல்லூரி பேராசிரியர் ஆறுமுகம், மணப்பாறை திருக்குறள் பயிற்றக நிறுவனர் திருக்குறள் புலவர் நாவை.சிவம், டாக்டர் பி.எம்.இராமச்சந்திரன், மருங்காபுரி இளைய ஜமீன்தார் கிருஸ்ண விஜயன், மணவைத் தமிழ்மன்றச் செயலாளர் கவிஞர் கோ.நவமணி சுந்தரராசன், புரவலர் ஏ.டி.பி.ஆறுமுகம், புரவலர் மருதை, திருவாசகம் நல்லுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளையின் செயலாளர் வழக்கறிஞர் ஆ.தமிழ்மணி, பொருளாளர் கவிஞர் ந.பாலசுப்பாரமணியன், துணைச் செயலாளர் டாக்டர் அ.பிரேம்குமார், அறங்காவலர்கள் ஆ.துரைராஜ், எம்.கே.முத்துப்பாண்டி, இரா.கார்த்திகேயன், சி.ராஜகோபால், இரா.கலைக்கோவன், பெ.வீராசாமி ஆகியோர் செய்திருந்தனர்.
முன்னதாக “குறளாலயம்” திருப்பணி நடைபெறும் மண்டபத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு வேளாக்குறிச்சி ஆதீனம் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அனைவரும் மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தினார்கள். அதேபோல, மருங்காபுரி ஜமீன்தாரிணி கி.சு.வி.இலட்சுமி அம்மணி படத்திற்கும் மலர் வணக்கம் செய்யப்பட்டது.