விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜூன் உடனடி நீக்கம் இல்லை ! திருமா திடீர் முடிவு
டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் விழாவில் விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் திமுக கூட்டணியைக் கடுமையான விமர்சனம் செய்திருந்தார். இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்பதை விசிகவின் அனைத்து முன்னணித் தலைவர்கள் அனைவரும் பொதுவெளியில் கருத்து தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து விசிக தலைவர் தொல்.திருமாவும் கருத்து தெரிவித்துள்ளார்.
“ஆதவ் அர்ஜூன் என்னுடைய அனுமதியின்பேரில்தான் அம்பேத்கர் விழாவில் கலந்துகொண்டார். அவரைக் கலந்துகொள்ளக்கூடாது என்பது ஜனநாயமாக இருக்காது என்பதின் அடிப்படையில்தான் அனுமதி வழங்கினேன். அரசியல் விமர்சனம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் அறிவுரைகள் வழங்கினேன். என் அறிவுரைகளை மீறி ஆதவ் கூட்டணிக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் திமுகவை விமர்சனம் செய்திருக்கிறார்.
இது குறித்து ஆதவ்-விடம் விளக்கம் கேட்கப்படும். உயர்நிலைக் கூடிதான் முடிவு எடுப்போம். குறிப்பாக தலித் அல்லாத விசிகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இயக்கத்திற்கு வந்தவர்கள் மீது நடவடிக்கை மிகவும் கவனமாக எடுக்கப்படும். திமுக, அதிமுக போல் எங்கள் இயக்கத்தில் உடனே நடவடிக்கை எடுக்கமுடியாது” என்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் திருமா பேசினார்.
இதனைத் தொடர்ந்து, விசிகவின் துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் மீது என்ன மாதிரி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று விசிக வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள் வாசகர்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றது.
ஆதவ் அர்ஜூன் அவர்களிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்படும். அதில் 15 நாட்களுக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
15 நாள்களுள் ஆதவ் அர்ஜூன் விளக்கம் அளித்தப் பின்னர் தேவைப்பட்டால் நேரில் அழைத்தும் அவரிடம் கூடுதல் விசாரணை செய்ய வாய்ப்பு உள்ளது.
ஆதவ் அர்ஜூன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக முகாந்திரம் இருந்தால், அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவார். பின்னர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு முழு விசாரணை நடத்தப்படும்.
விசாரணைக் குழு அறிக்கையின் அடிப்படையில் ஆதவ் அர்ஜூன் கட்சியிலிருந்து நீக்கப்படலாம். அல்லது தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து அல்லது மன்னிப்பு கோரினால் ஆதவ் மீதான இடைநீக்கம் இரத்து செய்யப்பட்டு, கட்சியில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படுவார். இந்த நடவடிக்கை மேற்கொள்ள ஒருமாத காலம் ஆகும் என்று கூறப்படுகின்றது.
இதற்கிடையில், கட்சி தலைமையிடம் விளக்கம் கோரி கடிதம் கிடைக்கப் பெற்றவுடன் ஆதவ் அர்ஜூன் விளக்கம் எதுவும் அளிக்காமல், தானே கட்சியிலிருந்து விலகிக்கொள்வார் என்றும் கூறப்படுகின்றது. ஆதவ்-ஐ நீக்குவதில் திருமா கொஞ்சம் தயக்கம் காட்டுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காரணம் விசிக தொண்டர்களில் சிலர் ஆதவ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று சமூக வலைதளங்களில் செய்தியினைப் பதிவு செய்துள்ளனர். இதனால் திருமாவுக்குத் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தலைவர் திருமாவிற்குத் தர்மசங்கடத்தைத் தவிர்க்க ஆதவ் கட்சியிலிருந்து விலகுவார் என்பதே அரசியல் களத்தில் முக்கிய செய்தியாக உள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கட்சியிலிருந்து ஆதவ் விலகினால் அவர் நடிகர் விஜய் தலைமையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் சேரும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் செய்திகள் உலாவுகின்றன.
விசிக தலைவர் திருமா என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதை அரசியல் கட்சிகள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் விடுதலை சிறுத்தைக் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா 6 மாதம் சஸ்பெண்ட் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அறிவித்தார் திருமா –
— ஆதவன்.