எம்.பி. தேர்தல் (2024) களம் : அதிமுகவில் சீட் யாருக்கு ? திருவண்ணாமலை திகு திகு !
எம்.பி. தேர்தல் (2024) களம் : அதிமுகவில் சீட் யாருக்கு ? திருவண்ணாமலை திகு திகு ! நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அரசியல் கட்சிகளின் முன் தயாரிப்புப் பணிகள் மும்மரமாகவிட்டன. சீட்டு கேட்டு எதிர்பார்த்திருக்கும் கட்சி நிர்வாகிகளோ இப்போதே துண்டை போட்டு வைத்துவிட வேண்டுமென்றே காய்களை நகர்த்த தொடங்கிவிட்டார்கள். திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுகவின் கள நிலவரங்கள் என்ன? என்பது பற்றி அறிந்துகொள்ள அங்குசம் இதழ் சார்பில் களமிறங்கினோம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளும் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர், ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியதுதான் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி.
கேசி அழகரி
இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி வீரமணியின் உடன் பிறந்த அண்ணன் ஆவார். முன்னர் திமுகவில் இருந்தபோது ஓரளவுக்கு பெயர் பெற்றவர். நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலில் தொடர் தோல்வியை சந்தித்தவர். ஒருகாலத்தில் கேரளாவில் KCA பால் பண்ணைகள் வைத்து கொடிகட்டி பறந்தவர். மதிமுகவில் ஆட்சி மன்ற குழு தலைவராக பணியாற்றினார். அதன்பிறகு மீண்டும் திமுகவில் இணைந்து தனது சகோதரர் வீரமணியை வெற்றி பெற வைத்ததால் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர் தற்போது தம்பி தயவில் அதிமுகவில் இணைந்தார். நடைப்பெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் சீட் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு இருக்கும் பலம், பணம் பலம் வன்னியர் பெல்ட் தொகுதி , முன்னாள் அமைச்சர் தம்பி வீரமணி திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓரளவுக்கு அறிமுகம் ஆனவர். இத்தொகுதியில் தொடர்ந்து திருவண்ணாமலையை சேர்ந்தவர்களே போட்டியிட்டு வருவதால், இந்த முறை திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் போட்டியிட வேண்டும் எனவும் வீரமணி அண்ணன் கேசி அழகிரி தான் பேட்டியிட வேண்டும் அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் திருப்பத்தூர் ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகின்றனர்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி :
”என்னால் மீண்டும் சீட் வாங்கி நின்று பணம் செலவு செய்ய முடியாது. கடந்த முறையே தலைமை ஒத்துழைப்பு தரவில்லை” என்று புலம்புவதாக கூறுகின்றனர் சில ரத்தத்தின் ரத்தங்கள் . 2006, மற்றும் 2011-ல் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார் , உணவுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். 2019 நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய திமுக எம்.பி. சிஎன் அண்ணாதுரையிடம் தோல்வியை தழுவியவர். திமுக சிட்டிங் எம்பி அண்ணாதுரை மீண்டும் போட்டியிட்டால் அதிமுக சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி களமிறக்கப்படலாம் என்கின்றனர்.,
ராமச்சந்திரன் :
பழைய ரேடியோ மெக்கானிக்; எம்ஜிஆர் மன்ற மாநில இணை செயலாளர் ; முன்னாள் பால்வளத்துறை அமைச்சர்; கல்வித்தந்தை – என பன்முகம் கொண்டவர் மீசை ராமச்சந்திரன். இவர் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த நன்மதிப்பை பெற்றவர் இவருடைய ஒரே பலம் “வன்னியர்” சமுதாயம் என்கிற அடையாளம்தான். தேர்தல், போராட்டம், ஆர்ப்பாட்டம் என்றால் ஆஜராகிவிடுவார். எம்.பி. சீட்டு எனக்குத்தான் என்று வேட்டியை மடிச்சி மீசையை முறுக்குகிறாராம். மேலும், சிட்டிங் அமைச்சர் வேலு மகன் கம்பன் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அவரை எதிர்க்க சரியான போட்டி வேட்பாளர் என்கிறனர் அதிமுகவினர். ஆனால், மாவட்டமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி , ராமச்சந்திரன் வருகையை விரும்பவில்லையாம். சீட்டு வழங்கினாலும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஒத்துழைப்பு கிடைக்காது என்கிறார்கள் .
ஜெயசுதா :
திருவண்ணாமலையை கிழக்கு, மத்திய, தெற்கு, வடக்கு என நான்கு மாவட்டங்களாக பிரித்த எடப்பாடி பழனிசாமி, மத்திய மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் எம்எல்ஏ ஜெயசுதாவை நியமித்துள்ளார். ஜெயசுதா 2001ஆம் ஆண்டு முதல் அதிமுகவுக்காக பணியாற்றி வருகிறார். 2007ஆம் ஆண்டு போளூர் ஒன்றிய மகளிர் அணி செயலாளராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். கட்சியில் இவரது செயல்பாட்டை கண்டு 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போளூர் தொகுதியில் போட்டியிட ஜெயசுதாவுக்கு வாய்ப்பு வழங்கினார், ஜெயலலிதா. அந்தத் தொகுதியில் இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் எதிரொலி மணியனை காட்டிலும் 28,545 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நெல்லை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளராக வசந்தி முருகேசனை ஜெயலலிதா இருந்தபோது நியமித்தார். அவர் தான் அதிமுகவின் முதல் பெண் மாவட்டச் செயலாளர். அதிமுகவின் 2,வது பெண் மாவட்டச் செயலாளரான ஜெயசுதாவுக்கு சீட் கிடைக்கலாம் என்கிறார்கள்.
ராஜன் :
முன்னாள் மாவட்டம். இவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரடி தொடர்பில் இருப்பவர். மாவட்டம் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அரசியல் எதிரியும் கூட. ஒதுங்கி இருந்து தற்போது மீண்டும் வந்திருக்கிறார். எம்பி சீட்டும் கேட்கிறாராம். கூடவே, மாவட்டத்தை இரண்டாக பிரிக்கச் சொல்லி எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கையும் வைத்திருக்கிறார். பெருமாள்நகர் ராஜனின் இந்த கோரிக்கை நிறைவேறும் என்று நம்புகிறார்களாம் அவரது ஆதரவாளர்கள். தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்த்து வைக்கக் கோரி தன்னை நம்பி வந்த சேகர் என்பவரின் மனைவியை அபகரித்து அவரை பைத்தியமாக்கி விட்டார் ராஜன் என இவர் மீது தேர்தல் நேரத்தில் பூதாகரமாக வெடிப்பது வழக்கமான ஒன்று. ஒருவேளை தேர்தல் நேரத்தில், பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் பாஜகவுக்கு ஒதுக்க கூடாது அதிமுகதான் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்துவோம்னு கூறுகின்றனர் நம்மிடம் பேசிய அதிமுகவினர் . இந்த தொகுதியில் திமுக அதிமுக இடையேதான் போட்டி கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!
-மணிகண்டன்.