சுயமரியாதை வீரர் திருவாரூர் கே.தங்கராசு ! யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை 35
“பெரியாரின் கருத்துக்களைப் பன்முக திறனோடு மக்களிடம் கொண்டு சென்றவர்” – திருவாரூர் தங்கராசு – சீனி. விடுதலைஅரசு புகழாரம்!
அங்குசம் சமூக நல அறக்கட்டளை சார்பில் யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடையின் 35 ஆம் நிகழ்வு 13.12.2025 அன்று, சுயமரியாதை வீரர் திருவாரூர் கே.தங்கராசு நூற்றாண்டு விழாவாக நடைபெற்றது. இவ் விழாவில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சீனி.விடுதலை அரசு சிறப்புரையாற்றினார். சிறப்புரையாளரை அறிமுகம் செய்து வைத்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் உரையாற்றினார். நிகழ்ச்சியின் புரவலர் பேராசிரியர் ரெ.நல்லமுத்து பயனடை அணிவித்து சிறப்பு செய்தார். பெரியார் விருதாளர் தி.அன்பழகன் பெரியாரியல் நூல்களை வழங்கினார்.

“பெரியாரின் கருத்துக்களை, கொள்கைகளை, இலட்சியங்களைப் பொதுமக்களிடம் கொண்டு சென்ற பெரியார் கருத்தியல் தளபதிகளில் முன்னணி வரிசையில் இருப்பவர் திருவாரூர் தங்கராசு. அவரின் நூற்றாண்டு விழாவில் சிறப்புரையாற்ற வருகை தந்துள்ள சீனி.விடுதலைஅரசு, பெரியாரின் பெருந்தொண்டர் இராமகிருஷ்ணன் தலைமையில் இயங்கி வரும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராகச் செயல்பட்டு வருகிறார். திராவிட இயக்கக் குடும்பத்தில் பிறந்து, தொடர்ந்து பெரியார் கொள்கையைப் பொதுமக்களிடம் பரப்புவதில் சமரசம் இல்லாமல் செயலாற்றி வரும் இளமை துடிப்பு மிக்கவர் சீனி.விடுதலைஅரசு.” என்பதாக, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து தொடக்க உரையாற்றினார் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன்.
இதனை தொடர்ந்து, சிறப்புரையாற்றிய சீனி.விடுதலைஅரசு, “தந்தை பெரியாரின் கருத்துகளைப் பொதுமக்களிடம் கொண்டு சென்றதில் திருவாரூர் தங்கராசு அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. அவர் தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் 3 மணி நேரம் பேசும் ஆற்றல் மிக்கவர். புராண, இதிகாசங்களைப் படித்து, அதை பகடி செய்து உரையாற்றும் திறன் படைத்தவர். திரைக்கதை – வசனம் எழுதிய இரத்தக்கண்ணீர் பெரும் வெற்றியைப் பெற்றது.
பெரியார் கருத்துகளைப் பொதுமக்களிடம் கொண்டு செல்வது குறித்து தங்கராசு, “அவர் வயது என்ன? நம்முடைய வயது என்ன? அவருடைய சிந்தனை என்ன? நம்முடைய சிந்தனை என்ன? நாம் சாதாரண ஒலிபெருக்கிதான். நான் என்னை அதற்கு மேல் என்றுமே நினைத்துக் கொண்டது கிடையாது” என்று கூறுவார்.

தந்தை பெரியாரோடு அணுக்கமாக பழகியவர் திருவாரூர் தங்கராசு. பக்தவத்சலம் பதவிக்கு வரும் முன்பே “பக்தவத்சலம் வேண்டாம்” என்ற தலைப்பில் எனது பகுத்தறிவு வார ஏட்டில் தலையங்கத்தைத் திருவாரூர் தங்கராசு எழுதியிருந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு விடுதலையில் தலையங்கக் கருத்து எனது கருத்தல்ல.” என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார் பெரியார்.
தன்னை சந்தித்த, திருவாரூர் தங்கராசுவிடம் வழக்கமான உபசரிப்பை வழங்கிவிட்டு, ”நீங்க கொஞ்சம் அவசரப்பட்டு அப்படி எழுதிட்டீங்க. இது அவுங்க கட்சி விஷயம். நாம ஏன் அதிலே தலையிடனும்.” என்றார் பெரியார். உடனே தங்கராசு ,“ இனிமே உங்களைக் கேட்காமல் இந்த மாதிரி பெரிய விஷயங்களை பற்றி எதுவும் எழுதமாட்டேன்” என்று மிகவும் பணிவோடு விடைபெற்றார் தங்கராசு. இப்படிப்பட்ட பண்பு மிக்கவர்.
திருவாரூர் தங்கராசு தன் இளமைக் காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தார். காமராஜர் தலைமையில் இயங்கினார். பொதுக்கூட்டங்களுக்கு துண்டுப்பிரசுரம் அச்சிடுவதில் தங்கராசு எழுத்துநடை பலருக்கும் பிடித்து இருந்தது. திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் காமராஜருடன் கலந்துகொண்டார். அடுத்த நாள் தான் வேலை பார்த்த கடை முதலாளி, ‘தம்பி நீங்க பெரிய தலைவராகி விட்டீர்கள்’ என்று வேலையை விட்டு நீக்கிவிட்டார். பின்னர் இனி யாரிடமும் வேலை செய்யக்கூடாது என்று முடிவு செய்து தனக்குத் தெரிந்த பன்னீர் தொழிலைச் செய்து வந்தார்.
தங்கராசு இராமயணம். மகாபாரதம் பற்றிய பேசும்போது அந்த இதிகாசங்கள் எப்படி மனித குலத்திற்கு எதிராக இருந்தது. எளிய மக்களை, ஏழை மக்களை எவ்வளவு இழிவு செய்கிறது என்பதை ஆதாரங்களோடு பேசுவார்.
பகுத்தறிவு குறித்து நகைச்சுவையாகப் பேசுவார். பூனை குறுக்கே சென்றால் சகுனம் சரியில்லை என்று கூறுகிறார்கள். நம்ம ஊரில் புலியா போகும்? என்று கேட்பார். மக்கள் கைத்தட்டி இரசிப்பார்கள். தங்க லிங்கத்தை பாபா பக்தியினால் எடுத்துத் தருகிறார். சரி ஒரு மோட்டார சைக்கிள் ஏன் வரவழைத்து தரமுடியாதா? என்று மக்களிடம் பக்தி ஒரு மோசடி என்று பரப்புரை செய்வார்.
திருச்சியில் ஒரு முறை தங்கராசு பேசிய கூட்டத்தில் கல்வீச்சு நடைபெற்று, தங்கராசுவின் மண்டை உடைந்து இரத்தம் வழிந்தது. கூட்டத்தைப் பாதியில் முடித்து சென்றபோது மனம் வருந்தினார். பெரியார் கருத்தியலைப் பன்முக ஆற்றலோடு பொதுமக்களிடம் சேர்ந்த பெருமைக்குரியவர் திருவாரூர் தங்கராசு.” என்பதாக, திருவாரூர் தங்கராசுவின் சிறப்புகளை நினைவுகூர்ந்தார்.
அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் ஜெடிஆர் சிறப்புரையாளருக்கு இதழ்களைப் பரிசாக வழங்கினார். நிகழ்வின் நிறைவாக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நல்லமுத்து நன்றி கூறினார்.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.