அட, இப்படியெல்லாம் ஏமாற்றியிருக்கிறதா நியோமேக்ஸ் ? பகீர் கிளப்பும் குற்றப்பட்டியல் !
அட, இப்படியெல்லாம் ஏமாற்றியிருக்கிறதா நியோமேக்ஸ் ? பகீர் கிளப்பும் குற்றப்பட்டியல் !
மோசடி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார், நியோமேக்ஸால் பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தின் வழியே சட்டப் போராட்டங்களை நடத்திவரும் சிவகாசியைச் சேர்ந்த பொறியாளர் ராமமூர்த்தி.
இந்த விவகாரத்தில், நியோமேக்ஸ் நிறுவனம் இழைத்துள்ள குற்றங்களை விரிவாகவே பட்டியலிட்டிருக்கிறார், ராமமூர்த்தி. செய்யப்போவது மோசடிதான் என்பதை முன்னறிந்து, அந்த மோசடியை எப்படி நாசூக்காக செய்யலாம் என்பதை நன்றாகவே யோசித்து, குறிப்பாக அரசுத்துறைகளின் கண்காணிப்புகளிலிருந்து எப்படியெல்லாம் தப்பிக்கலாம் என்பதையெல்லாம் முன்கூட்டியே தீர்மானித்துதான் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
இவ்வளவுக்குப் பின்னரும்கூட, பாதிக்கப்பட்டவர்களில் இன்னும் 90% பேர் புகார் கொடுக்கவே வரவிடாமல் தடுத்து நிறுத்தியிருப்பதும்; பொருளாதாரக்குற்றப்பிரிவு, டான்பிட் நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆகியவற்றோடு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி வரும் நியோமேக்ஸ் நிர்வாகிகளின் சாமர்த்தியம் பிரமிப்பூட்டுகின்றன.
இதோ, பொறியாளர் ராமமூர்த்தி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை வாசித்து பாருங்கள். நியோமேக்ஸ் மோசடியின் முழுப்பரிமாணம் விரியும் …
* சட்ட விரோதமாக பணம் வசூலித்தது குற்றம் :
சட்ட விரோதம் எனத் தெரிந்தே ஏமாற்ற வேண்டும் என்ற உள் நோக்கத்துடன், அங்கீகரிக்கப்படாத கவர்ச்சிகரமான திட்டங்களை ஆசை வார்த்தைகளால் மக்களை நம்பவைத்தது. அதிகமான மாத வட்டி மற்றும் வைப்புத் தொகையின் காலத்திற்கு ஏற்ப பல மடங்கு அதிகமாக தருவதாக ஏமாற்றியது. நிறுவனத்திற்கு அதிக சொத்துக்கள் இருக்கின்றன என பல தவறான சொத்துக்களை காண்பித்து அதை நம்ப வைத்தது.
ஆடம்பரமான முறையில் பெரும் திரளான கூட்டம் நடத்தி, விருந்து கொடுத்து, சொகுசு வாகனங்களில் சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்று ஆசை காட்டியது. பல திட்டங்களை நல்ல முறையில் செயல்படுத்தி ரியல் எஸ்டேட் போன்ற பல தொழில்களை செய்து பல மடங்கு லாபம் ஈட்ட எங்களால் கண்டிப்பாக இயலும் ஆதலால் உங்களிடம் வாங்கும் பணத்துடன் ஊக்கத் தொகையையும் சேர்த்து உரிய காலத்திற்குள் நாங்கள் திருப்பிச் செலுத்தி விடுவோம் என நம்ப வைத்தது.
அதை திறம்பட செய்து முடிப்பதற்கு உங்களை அழைத்து வந்த உங்களுக்கு நன்கு அறிமுகமான ஏஜெண்டுகள் எங்களுடன் நெருக்கமாக பணியாற்றி இந்த திட்டத்தை வெற்றியடைச் செய்வார்கள் என அவர்களை கை காட்டி அவர்கள் மூலம் மேலும் மோசடியான நம்பிக்கையை ஏற்படுத்தியது. நிறுவனத்தினரால் ஏஜெண்டுகளுக்கு அதிக கமிஷன் கொடுத்து, மக்களை எப்படி கவர வேண்டும், யாரிடம் எப்படி பேசி, எப்படி நடந்து கொண்டால் நம் திட்டப்படி பணம் வசூலிக்க இயலுமென பயிற்சி கொடுத்தது.
வியாபாரத்தை அதிகரிக்க ஏஜெண்டுகளுக்குள் போட்டி மனப்பான்மையை ஏற்படுத்த அவர்கள் செய்த வியாபாரத்தின் அளவுகளை கணக்கிட்டு அவர்களுக்கு கார் வாங்க பாதி பணம், பரிசாக கார் மற்றும் விலை மதிப்புள்ள பரிசுகளை கொடுத்தும் வெளி நாடுகளுக்கு இன்பச் சுற்றுலாக்களுக்கு அழைத்துச் சென்று அவர்களை குளிப்பாட்டி, அதன் மூலம் மக்களிடமிருந்து மோசடியாக பணம் வசூலித்தது. இதையெல்லாம்விட, ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்கு அனுமதி பெற்று, நிதி நிறுவனம் போல் செயல்பட்டு மோசடியாக பணம் வசூலித்ததுதான் பெரும் குற்றம்.
* மோசடியாக வசூல் செய்த பணத்தை உரிய காலத்திற்குள் திரும்ப கொடுக்காதது குற்றம்.
பணம் பெற்றுக் கொண்டபோது, வாக்குறுதி அளித்த படி டெபாசிட் செய்த திட்டத்தின் காலம் முடிந்த பின் அந்தந்த திட்டத்திற்கு ஏற்ப உறுதியளித்தபடி ஊக்கத் தொகையுடன் பணமாக திருப்பிக் கொடுக்காமல்; மோசடி குழும நிறுவனங்களின் தலைமை அலுவலக பொறுப்பாளர்கள் உள் நோக்கத்துடன் தங்கள் சுய நலத்திற்காக தவறாக பயன்படுத்திக் கொண்டது குற்றம்.
* மக்களிடமிருந்து மோசடியாக வாங்கிய பணத்திற்கு ரசீது வழங்கிய முறை குற்றம்.
மக்களிடமிருந்து நிறுவனத்தால் தவறாக பயிற்சி கொடுக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலமாக வசூலித்த பணத்திற்கு நிறுவனத்தின் பெயரில் ரசீது கொடுத்த விதம் சட்டத்துக்கு புறம்பானது. அத்தகைய ரசீதுகளில் பணம் மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பொழுது வாய்மொழியாக பணத்தை திரும்பக் கொடுப்பது பற்றி கூறிய உறுதிமொழி விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. அதற்கு மாறான தவறான விவரங்களை உள் நோக்கத்துடன் ஏமாற்ற வேண்டும், மோசடி செய்ய வேண்டும், என்ற எண்ணத்திலும், சட்ட சிக்கல்களில் இருந்து தப்பித்துக் கொள்ள ஏதுவாக மோசடியான ரசீகளை வழங்கியிருப்பது.
மேலும் இப்படி குறிப்பிட்டால் தான் பணம் டெபாசிட் செய்தவர்களிடம் அதைப்பற்றி தவறாக எடுத்துரைத்து, புகார் கொடுக்க விடாமல் செய்ய இயலும் என்பது முதல் விசயம். அதற்கு மேல் பிரச்சனை செய்தால், ரசீதில் குறிப்பிட்டுள்ள காலக்கெடு முடிந்து விட்டது. அதனால் நிறுவனம் கொடுக்க இருக்கும் நிவாரணம் எதுவாக இருந்தாலும், அதை எந்த வித ஆட்சேபனை இன்றி பெற்றுக் கொள்ளுங்கள் என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த முடியும் என்ற தீய எண்ணம். இறுதியாக, “இந்த ரசீதை வைத்து உங்களால் ஒன்றும் சட்ட பூர்வமாக செய்து விட இயலாது” என மிரட்டி பல வகைகளில் அச்சுறுத்தி, காரியத்தை சாதித்து விடலாம் என்ற கெட்ட எண்ணத்தில் ரசீதை தயார் செய்திருக்கிறார்கள்.
இந்த ரசீதுகளையும்கூட, முதலீடு செய்த பல மாதங்களுக்கு பின்னரே முதலீட்டாளர்களுக்கு கொடுத்தார்கள். அப்போது, கேள்வி எழுப்பியபோதும், பல விதமான பதில்களை கூறி சமாளித்து விட்டார்கள். அதாவது ”இந்த ரசீதுகளில் குறிப்பிடபட்டிருப்பவை யாவும் நிறுவனத்தின் நிர்வாக வசதிக்காக செய்தவை. அதைப்பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை. பணம் பெற்றுக் கொள்ளும் பொழுது நாங்கள் உறுதியளித்த படி உங்களுக்கு பணமாக, அந்தந்த திட்டங்களுக்கு உண்டான ஊக்கத் தொகையுடன் கொடுத்து விடுவோம்.” என டெபாசிட் செய்தவர்களுக்கு அறிமுகமான ஏஜெண்டுகள் முன்னிலையில் நம்ப வைத்து ஏமாற்றியது; மோசடி குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் செய்த முக்கியமான குற்றம்.
* சட்ட விரோதமாக நிறுவனத்தை நிர்வாகம் செய்தது குற்றம்.
சில நிறுவனங்களை பதிவு செய்து அனுமதி பெற்றது ரியல் எஸ்டேட் நிறுவனமாக செயல்படுவதற்கு. இதனை மக்களிடம் எடுத்துரைத்து மக்களை நம்பவைத்து சட்டத்துக்கு விரோதமாக பணம் வசூல் செய்து, அதனை இதர இயக்குனர்களுக்கு தெரியாமல், சட்ட விரோதமாக உள் நோக்கத்துடன் தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தியது குற்றம்.
இதர இயக்குனர்களை பெயரளவிற்கு மட்டுமே வைத்துக் கொண்டு சட்ட விரோதமான அனைத்து செயல்களையும் செய்து, நிறுவனத்தை இந்த நிலைக்கு ஆளாக்கி டெபாசிட் தாரர்களை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கியது குற்றம்.
குறிப்பாக, இதர இயக்குனர்களிடம் நிறுவனத்தின் பெயரில் இருந்த வங்கி வெற்று காசோலைகளில் கையொப்பம் பெற்றும் நிறுவனங்களின் வெற்று லெட்டர் பேடுகளில் கையொப்பம் பெற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகளை முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு சட்டத்திற்கு புறம்பாக அவர்கள் விருப்பம் போல் நிறுவனத்தின் பெயரில் ரசீது கொடுத்து வசூலித்த பணத்தில் இவர்களின் பெயரிலும் இவர்களுக்கு இணக்கமாக பினாமியாக செயல்பட்டவர்களின் பெயரிலும் சொத்துக்களை வாங்கிக் குவித்தது குற்றம்.
மத்திய மற்றும் மாநில அரசு துறைகளுக்கு தாக்கல் செய்ய வரவு – செலவு கணக்குகளை வேறு விதமாகவும்; நிறுவனத்தின் உண்மையான வரவு – செலவு கணக்குகளை வேறு விதமாகவும் என இரண்டு வித கணக்குகளை சட்ட விரோதமாக செயல்படுத்தியது குற்றம்.
இதை சரியாக செய்திருந்தால், இவ்வளவு சொத்துக்களை மறைத்து அவர்களின் சுயநலத்திற்காக விற்று ஜாலியான வாழ்க்கை வாழ இயலாத நிலை ஏற்பட்டிருக்கும். மற்றும் நல்ல முறையில் நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கும். ஏராளமான சொத்துக்களை மறைத்து வைத்திருந்ததால், அதை சொந்தம் கொண்டாடிக் கொள்ள வாய்ப்புகளை திட்டமிட்டு ஏற்படுத்திக் கொண்டது குற்றம்.
* மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் வரி ஏய்ப்பு செய்தது குற்றம்.
இப்பொழுது வந்துள்ள புகார்களின் விவரங்களையும், புகார் கொடுக்காதவர்கள் கேட்கும் நிவாரணத் தொகையையும் சேர்த்து கணக்கிட்டு மேலும் நிறுவனம் வருடா வருடம் தாக்கல் செய்திருந்த வரவு – செலவு கணக்குகளையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது நிறுவனத்தார்கள் செய்த மாபெரும் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வரும். சட்டத்திற்கு புறம்பாக பல ஆயிரம் கோடிகள் ரொக்கப் பணப்பறிமாற்றங்களாக நடந்திருப்பது தெரியவரும். அதனால் ED இந்த வழக்கை விசாரித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரப்படும்.
பினாமிகள் பெயரில் உள்ள சொத்துக்களை நிறுவனத்தார்கள் அனுபவித்து விற்று பணமாக்கியதும்; அதன் மூலம் GST வரி ஏய்ப்பு செய்ததும் வெளிச்சத்திற்கு வந்துவிடும்.
நிறுவனத்தின் அனைத்து புராஜெட்டுகளைப் பற்றி உரிய அரசு துறைகள் சரியாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படும். (அதைப் பெற்று விட்டால், அதன்பின் இந்த இருவர் மற்றும் இவர்களுக்கு இணக்கமாக செயல்படுபவர்களின் வாய் ஜாலங்களுக்கு பூட்டு போடப்பட்டு விடும்).
உண்மைக்கு புறம்பான தகவல்களை பணம் வசூல் செய்தவர்களிடமும், இதர இயக்குனர்களிடமும், அரசு துறைகளிடமும் மற்றும் நீதி மன்றத்திற்கும் தெரிவித்திருப்பது குற்றம்.
நீதிமன்றம் உத்தரவிட்டும், முதலீட்டாளர்களிடமிருந்து வசூலித்த உண்மையான தொகை மற்றும் முதலீட்டாளர்களின் உண்மையான விவரங்கள் அடங்கிய பட்டியலை உரிய அரசு துறைகளிடம் இதுவரை சமர்பிக்காதது குற்றம்.
டெபாசிட் தாரர்களிடமிருந்து, மோசடியாக வசூலித்த பணத்திலிருந்து நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகள் பெயரில் வாங்கிய சொத்துக்களை அதற்குரிய நிறுவனங்களின் இயக்குனர்களுக்கே தெரியாமல் முன்பு ஏற்படுத்தி வைத்திருந்த பவர் ஏஜெண்டுகள் மூலமாக விற்று அதனை உள் நோக்கத்துடன் தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டது குற்றம்.
குழும நிறுவனங்களுக்கு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக சட்டத்திற்கு மறைமுகமாக இருந்து கொண்டு இதர நிர்வாகிகள் செய்யும் சட்ட விரோதமான செயல்களை கட்டுப்படுத்தாமல் அவர்களை நிறுவனத்திற்குரிய சொத்துக்களை அபகரித்துக் கொள்ள அனுமதிப்பது சட்ட விரோதம் என்று தெரிந்தும் தாங்கள் செய்த குற்றங்களை அவர்கள் காட்டிக் கொடுத்து விடக் கூடாது என்பதற்காக உரிய நடவடிக்கைகளை அவர்கள் மீது எடுக்காதது குற்றம்.
டெபாசிட்தாரர்களிடமிருந்து குறிப்பிட்ட நிறுவனங்களின் பெயரில் முறையற்ற ரசீதுகளை கொடுத்து முறைகேடாக வசூலித்த பணத்தை அதன் இயக்குனர்களுக்கு தெரியாமல் தாங்களாக தேவையான பொழுது வெற்று லெட்டர் பேடுகளில் கையொப்பம் பெற்று வைத்ததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது குற்றம்.
குற்றம் செய்த நிர்வாகிகளுக்கு சங்கம் ஏற்படுத்திக் கொடுக்க, மறைமுகமாகவும் நேரடியாகவும் முயல்வதும் அவர்களை மீண்டும் குற்றம் செய்வதற்கு தூண்டுவதும் குற்றம்.
பல வருடங்கள் நிறுவனத்தை நிர்வகித்து டெபாசிட்காரர்களிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க இயலாத நிலை இருக்கிறது. இந்த நிலையில் இந்த இருவருக்கு இனிமேல் ஏஜென்சி தொழில் செய்து சம்பாதித்து பல லட்சம்
பாதிக்கப்பட்டவர்கள், அதாவது புகார் கொடுக்காதவர்களுக்கு குறுகிய காலத்திற்குள் செட்டில்மென்ட் செய்து கொடுத்து விடுவோம் என இந்த இருவர் கூறும் பின்னணியில், புகார் கொடுக்க விடாமல் தடுக்கும் திட்டமா? மீண்டும் மோசடி செய்து உள் நோக்கத்துடன் காலம் கடத்துவதற்காக செய்யும் சதியா? பதுக்கிய கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவதற்கான நடவடிக்கைகளா? இல்லை, பதுக்கிய சொத்துக்கள், பணம் மற்றும் தற்சமயம் விற்ற சொத்துக்களுக்கு உண்டான பணம் ஆகியவற்றில் சிலவற்றை மட்டும் பயன்படுத்தி சிலருக்கு மட்டும் செட்டில்மென்ட் கொடுத்து விட்டு பலரை ஏமாற்ற தீட்டி உள்ள திட்டமா? என்பதை புலனாய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதி மன்றத்தில் கோரிக்கை வைக்கப்படும்.
எப்படி குற்றம் சாட்டப்பட்டவர்களை மீண்டும் தொழில் செய்ய அனுமதிக்கிறார்கள் என்பதை புலனாய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என நீதி மன்றத்தில் கோரிக்கை வைக்கப்படும்.
உயர்நீதி மன்றத்தின் உத்தரவுகள் எப்படி மீறப்படுகின்றன என்பதை சுட்டிக் காட்டப்படும். DTCP approval பெறுவதற்காக தேவையான நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் J V என்ற பெயரில் இதர நில உரிமையாளர்களின் கையொப்பத்தை நிறுவனத்தின் தீர்மானங்களில் தாங்கள் ஏற்பாடு செய்தவர்களை போலியாக கையொப்பம் ( forgery ) இடச்செய்து
இதை நியாயப்படுத்துவதற்கும் அரசு துறைகளை நம்ப வைப்பதற்கும் தங்களுக்கு சாதகமாக செயல்படும் நோட்டரி பப்ளிக் அட்வகேட்களிடம் கையொப்பம் பெற்று சட்டத்திற்கு புறம்பாக அனுமதி பெற்றிருப்பது குற்றம்.
இதைப் பற்றி ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென நீதிமன்ற உத்தரவு உரிய புலனாய்வு துறைகளுக்கு வந்து விட்டால், அதன் மூலம் இப்பொழுது இருக்கும் பெரும்பாலான approval plot கள் செல்லாது என்ற அறிவிப்பு வர அதிக வாய்ப்புகள் உள்ளன. ( அதனால் நிலமாக செட்டில்மென்ட் பெறுவதை இயன்றளவு தவிர்க்கவும் )
டெபாசிட் தாரர்களுக்கு குறித்த சமயத்தில் அவர்களிடம் இருந்து பெற்ற பணத்திற்கு பணம் பெற்றுக் கொள்ளும் பொழுது கொடுத்த வாக்குறுதி போல், திருப்பித் தராமல் நிறுவனத்தின் சொத்துக்களை சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டு வேண்டும் என்றே திட்டமிட்டு டெபாசிட் தாரர்களை காவல் துறையை அணுக ஊக்கு வித்து; அங்கும் சமரசம் என்ற பெயரில் காலம் கடத்தி அந்த இடைப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் ரொக்கப் பணம், முறைகேடாக நிறுவனத்தை நிர்வகித்தற்கான ஆவணங்கள் மற்றும் சொத்துக்களின் ஆவணங்கள் ஆகியவற்றை ஒளித்து வைத்து விட்டு; காவல் துறைக்கு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பங்களை திட்டமிட்டு ஏற்படுத்தி விட்டு ஓடி ஒளிந்து கொண்டு; டெபாசிட் தாரர்களை மிகுந்த மன வேதனைக்கு உட்படுத்தியது மேலும் பலர் இறப்பிற்கு காரணமாக இருந்தது இவர்கள் செய்த குற்றம்.
நிறுவனத்தை சட்ட விரோதமாக பல வகைகளில் உள் நோக்கத்துடன் தான் தோன்றித்தனமாக நிர்வகித்தவர்களை மீண்டும் மறைமுகமாக நிறுவனத்தை நிர்வகிக்க அனுமதிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. அது திருடன் கையில் சாவி கொடுத்தது போல் ஆகிவிடும். இது சட்டத்திற்கு புறம்பானது என நிரூபிக்கப்படும்.
நிறுவனத்தார்கள் உள்நோக்கத்துடன் சுயநலத்திற்காக நிறுவனத்தை நிர்வகித்து இந்த நிலைக்கு ஆளாக்கி இருப்பதை அறிந்து கொண்டு, எப்படி இப்பொழுது approval இல்லாத நிலங்களுக்கு approval பெறுவதற்கும், approval உள்ள நிலங்களை 5A மூலமாக பாதிக்கப் பட்டவர்களிடம் சமரசம் பேசவும் செட்டில்மென்ட்டாக பகிர்ந்து கொடுப்பதற்கும் எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். இதை எவ்வளவு தைரியமாக இந்த இருவர் பாதிக்கப்பட்டவர்களிடம் எடுத்துரைக்கிறார்கள் என்பதை உயர்நீதி மன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
டெபாசிட்டாக பெறப்பட்ட பணத்தை தவறாக பயன்படுத்தவில்லை எனில், அதிலிருந்து வாங்கப்பட்ட நிலங்கள் விவசாய நிலமாக இருந்தாலும் அதன் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் போகும் என்பதால் அதை இப்பொழுதுள்ள நிலையிலேயே முறையாக நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் படி விற்று பணமாக்கிய பின்பு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியான செட்டில்மென்ட் விகிதாச்சார அடிப்படையில் நீதி மன்றம் குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் அரசு துறைகளால் செய்து கொடுக்க இயலும்.
அதில் பாகுபாடு மற்றும் குறைபாடுகள் இல்லாமல் உரிய அரசு துறைகளால் மட்டுமே செய்து முடிக்க இயலும் என்பதைதான் முந்தைய நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் கற்றுக் கொண்ட பாடம். அதனால் இந்த வழக்கில் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு மாறாக யார் செயல்பட முற்பட்டாலும் அது தவறான பாதையில் செல்வதை நீதி மன்றத்தில் நிரூபிக்கப்படும்.
நிறுவனத்தார்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெற்ற பணத்தை சுயநலத்திற்காக தவறாக பயன்படுத்தி விட்டு மறைத்து வைக்கப்பட்ட சொத்துக்களை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, குறைந்த நிலங்களை மட்டுமே கொடுத்து ஏனோ தானோ என்ற முறையில் செட்டில்மென்ட் செய்து கொடுத்து குற்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள இந்த இருவர் செய்த மற்றும் செய்து கொண்டிருக்கும் சட்ட விரோத செயல்களின் மீது உரிய புலனாய்வு செய்ய சிறப்பு புலனாய்வு அமைப்பிற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கோரப்படும்.
எத்தனை மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டியதிருக்குமோ, அத்தனையும் தாக்கல் செய்யப்படும். அனைத்து குற்றச் சாட்டுகளையும் நிரூபிப்பதற்கு தேவையான ஆவணங்கள் சமர்பிக்கப்படும். Property attachment சம்பந்தமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும். உயர்நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக உத்தரவு பெற இயலாத நிலை ஏற்பட்டால் உடனடியாக மேல் முறையீட்டு மனுவாக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
(வழக்கை நேர்மையாக எதிர் கொள்ள இயலாத நிலை நிறுவனத்திற்கு ஏற்பட்டால் நிறுவனம் பல தவறான வழிகளை கடைப்பிடிக்கும் என்பதை பாதிக்கப்பட்டவர்கள் அறிவர் ).
நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படும் சில சங்கங்கள் மூலமாகத் தான் நிறுவனம் சட்ட விரோதமான செயல்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பிரித்தாள்கிறது என்ற உண்மையை நீதி மன்றத்திற்கு தெரிவிக்கப்படும்.
நீதிமன்றத்தை நாடுபவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் பற்றிய விவரங்களும் நீதிமன்றத்திற்கு முறையாக தெரிவிக்கப்படும்.” என்பதாக விரிவாகவே சுட்டிக்காட்டுகிறார், பொறியாளர் ராமமூர்த்தி.
– அங்குசம் புலனாய்வுக்குழு.