அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் – அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு !
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் பயிற்சி மையம் சார்பில் அரசு போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்த இலவச கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர கீதா ஜீவன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மேலும் தனியார் பயிற்சி மையத்தில் பயின்று அரசு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்ந்து உள்ளவர்களுக்கு விருது வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில் , “இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு பயிற்சி அளிக்க இன்றைக்கு நிறைய பயிற்சி மையங்கள் உருவாகி உள்ளது.
அரசு அதிகாரிகள் இருப்பவர்கள் குடும்பத்தில் உள்ளவா்கள் தான் அரசு அதிகரிகளாக வரக்கூடிய சூழ்நிலை இருந்தது. ஆனால், இன்றைக்கு எல்லோரும் வர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது . கடின உழைப்போடு செயல்பட்டால் நிச்சயமாக வெற்றி பெற முடியும்.
அரசு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று பணிக்கு செல்லக் கூடியவர்கள் அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். 2021 இல் தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றதும் தரமான கல்வி வழங்க வேண்டும், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெற மாணவர்கள் தகுதி பெறும் வகையில் கல்வித்துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக அரசு பள்ளிகளில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
நான் முதல்வன் திட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பயிற்சி பெற்ற 52 பேர் UPSC தேர்வில் வெற்றி பெற்றுள்ளது என்பது அந்தத் திட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றார். விழாவில் கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
— மணிபாரதி