புறக்கணிக்கப்படுகிறார் ஆ.ராசா.. பெரம்பலூர் திமுகவில் திரிகோண கோஷ்டி பூசல்…

0

புறக்கணிக்கப்படுகிறாரா ஆ.ராசா.. பெரம்பலூர் திமுகவில் திரிகோண கோஷ்டி பூசல்… சமீப காலமாக பெரம்பலூர் திமுகவில் அதிகரித்திருக்கும் கோஷ்டி பூசல் அரசியல் உடன்பிறப்புக்களை கலங்க வைத்துள்ளது. மிகுந்த செல்வாக்குடன் இருந்த ஆ.ராசா சமீபகாலமாக பெரம்பலூர் மாவட்ட அரசியலில் ஓரங்கட்டப்படுவதுதாக குற்றச்சாட்டு வலுத்துள்ளது. அதன் வெளிப்பாடே திமுகவின் சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற உள்ள ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சிக்காக அடிக்கப்பட்ட நோட்டீஸ்களால் கோஷ்டி பூசல் மீண்டும் வெடித்துள்ளது.

ஆ.ராசாவுடன் அமைச்சர் சிவசங்கர்
ஆ.ராசாவுடன் அமைச்சர் சிவசங்கர்

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி முசிறியில் நடைபெறுவதாக அச்சிடப்பட்டுள்ள அந்த துண்டறிக்கைகளில், தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் க.பொன்முடி ஆகியோர் பெயர்கள் இருக்க, திட்டமிட்டே ஆ.ராசாவின் படமும், பெயரும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் திமுகவினரே கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்த வேலைகள் தீவிரமடைந்துள்ளன. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தனது மகன் அருண் நேருவை களம் இறக்கிட துடிக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. அதன் காரணமாக மாவட்டத்தில் அவ்வபோது நடைபெறும் நிகழ்ச்சிகளில் அருண் நேரு இப்போதே தென்படுகிறார்.

ஆ.ராசா பெயர் இல்லாத போஸ்டர்
ஆ.ராசா பெயர் இல்லாத போஸ்டர்

இந்நிலையில் தான் ஆ.ராசாவை திட்டமிட்டு புறக்கணித்து நிகழ்ச்சி நடத்துவதாக அமைச்சர் கே.என்.நேரு தரப்பின் மீது குற்றச்சாட்டுகளை ஆ.ராசாவின் ஆதரவாளர்கள் முன் வைக்கிறார்கள். பெரம்பலூர் திமுகவினரிடம் பேசினோம், “பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போதுள்ள பெரும்பாலான திட்டங்கள் ராசாவின் முயற்சியால் கொண்டுவரப்பட்டன.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு பிறகு பொது தொகுதியாக மாற்றப்பட்டது. அதன் பிறகு ஆ.ராசா நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். ஆனாலும் கடந்த 15 வருடங்களாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு அவரால் எவ்வளவு செய்ய முடியுமோ அந்த அளவிற்கான நலத்திட்டங்களை செய்து வருகிறார்.

ஆ.ராசா, பெரம்பலூர் மாவட்ட லோக்கல் அரசியலில் தற்போது பெரும்பாலும் தலையிடுவதில்லை. அவ்வபோது வந்து கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மட்டும் செல்கிறார். அப்படி வரும்போது அவரிடம் மக்கள், கட்சிக்காரர்கள் கொடுக்கப்படும் மனுக்களை அப்படியே உரிய அதிகாரிகளிடம் கொடுத்து மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை மட்டும் செய்து செல்கிறார். மற்றபடி மாவட்ட அரசியலுக்குள் அவர் தலையிடுவதில்லை.

பெரம்பலூர்,கடலூர் மாவட்ட செயலாளர் பெயருடன் அரியலூர், மீன் சுருட்டி ஸ்டாலின் நிகழ்ச்சி போஸ்டரில்
பெரம்பலூர்,கடலூர் மாவட்ட செயலாளர் பெயருடன் அரியலூர், மீன் சுருட்டி ஸ்டாலின் நிகழ்ச்சி போஸ்டரில்

பெரம்பலூர் மாவட்டத்திற்குள் வேலைகளுக்கான சிபாரிசுகளில் அமைச்சர் சிவசங்கர் மற்றும் எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர்தான் எல்லாம். ஆ.ராசாவின் அண்ணன் கலியமூர்த்தி ரேஷன் கடைகளுக்கு அவர் செய்த சிபாரிசுகளை புறக்கணித்தனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ராசா இவ்வளவு பெரும் பெருந்தன்மையாக நடந்து கொள்ள ஆனால் அவரை மாவட்ட அரசியலில் புறக்கணிக்கும் படலம் அவரால் பயனடைந்தவர்களாலேயே நடந்து வருகிறது என்பதுதான் வேதனையாக இருக்கு என்றார்கள்.

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு பிறகு முதலில் கே.என்.நேருவின் மைத்துனரான நடிகர் நெப்போலியன் திமுக சார்பில் ஜெயித்து மத்திய அமைச்சரானார். தொகுதிக்கு அவர் பெயர் சொல்லும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை. அதன்பிறகு அடுத்த தேர்தலில் கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரான சீமானூர் பிரபுக்கு சீட் வாங்கி கொடுத்தார் நேரு. அந்த தேர்தலில் சீமான் பிரபு தோல்வியடைந்தார்.

அடுத்து வந்த தேர்தலில் கூட்டணி கட்சியில் இருந்த ஐ.ஜே.கே கட்சியை சேர்ந்த பாரிவேந்தரை ஜெயிக்க வைத்தோம். அவர் ஜெயித்ததோடு சரி. பாராளுமன்ற தொகுதி அலுவலகம் கூட பெரம்பலூரில் இல்லை. அந்த அளவிற்கு பெரம்பலூரையும் பெரம்பலூர் மக்களின் எண்ணங்களையும் புறக்கணிக்க துவங்கியுள்ளனர்.

முதல்வர். மு.க.ஸ்டாலின்
முதல்வர். மு.க.ஸ்டாலின்

இப்போது தனது மகனை நேரடியாக பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினராக களம் காண வைக்க துடிக்கிறார் கே.என்.நேரு, இப்படியிருக்க ஆனால் அவரது ஆதரவாளர்களோ ஆ.ராசாவை புறக்கணித்து வருகிறார்கள். இதேபோல்தான், அரியலூர் மாவட்டத்திலும் சிவசங்கர் அமைச்சரான பிறகு ஆ.ராசாவின் புகைப்படங்கள் கட்சி நிகழ்ச்சிகளில் இருக்கக் கூடாது என மறைமுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் அமைச்சர் சிவசங்கரை, ஆ.ராசாவின் ஆதரவாளர்கள் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டதைப் போல அரியலூரில் சிவசங்கர் இல்லை. ஆ.ராசாவை தவிர்த்து தனி ஆவர்த்தனம் செய்துவருகிறார்கள்.

கே.என்.நேருவுடன் ஆ. ராசா
கே.என்.நேருவுடன் ஆ. ராசா

செந்தில் பாலாஜி தற்போது சிறையில் உள்ளார். ஆனாலும் அவர் பெயர் போஸ்டர்கள் இடம் பெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தை பொருத்தவரை குளித்தலை மட்டும்தான் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகிறது. செந்தில் பாலாஜியின் பெயர் போடப்பட்டுள்ளது, ஆனால் ஆ.ராசாவின் பெயர் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது. மகனுக்கு மகுடம் சூட்ட நினைக்கும் கே.என்.நேரு இப்படி நடக்கவிடலாமா என வருந்தினார்கள்.

கே.என்.நேருவின் ஆதரவாளர்களோ, “எங்கள் அமைச்சர் கட்சிக்காரர்களை எப்படி அரவணைத்து செல்கிறார்கள் என்பது ஊரறியும். ஆ.ராசா அவர்கள் தற்போது நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதனால் அவர் பெயர் ஸ்டாலின் குரல் பத்திரிக்கையில் இடம்பெறவில்லை. அதைவிட்டு காழ்புணர்ச்சியில் இந்த விவகாரத்தை ஊதி பெருதாக்குகிறார்கள். ஆ.ராசா கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் அவரை புறக்கணிக்க நினைப்போமா என்றார்கள்.

அமைச்சர் சிவசங்கர் தரப்போ,” மாவட்ட அரசியலில் ஆ.ராசா தலையிடுவதில்லைதான். அதேபோல் பெரம்பலூர் சிபாரிகளை அமைச்சர் சிவசங்கரே தலையிடுவதில்லை. எம்.எல்.ஏ பிரபாகரன் பார்த்துக்க சொல்லிட்டாரு அமைச்சர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி டெண்டர் வேலைகள் பெரும்பாலும் “பாஸ்” என்பவருக்குதான் வழங்கப்படுகிறது. அவர் ஆ.ராசாவின் தீவிர ஆதரவாளர்.

ஆ.ராசாவும் சிவசங்கரும்
ஆ.ராசாவும் சிவசங்கரும்

அவர்தான் ஆ.ராசா பெரம்பலூர் வந்த மொத்த செலவும் அவர்தான் கவனிக்கிறாராம்.

திருத்தப்பட்ட போஸ்டர்
திருத்தப்பட்ட போஸ்டர்

அதற்கு பிரதிபலனாக தற்போதைய மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரனுக்கு வயதாகிவிட்டதால் அடுத்த மாவட்ட செயலாளர் “பாஸ்” தான் என ஆ.ராசாவின் டிக் எனும் பேச்சு துவங்கியுள்ளது. ஆ.ராசா தனது நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்த விசுவாசம் காட்டுபவர்களை பொறுப்புக்கு கொண்டுவருகிறார். ஆனால் அவர்கள் கட்சிக்காரர்களை கண்டுகொள்வதில்லை. அமைச்சர் பொங்கல், தீபாவளி பண்டிகை நாட்களுக்கு கட்சிக்காரர்களுக்கு அள்ளி தந்துள்ளார். எங்களுக்குள் கோஷ்டி பூசல் இல்லை என்றார்கள்..

ஆ.ராசா ஆதரவாளர்களின் எதிர்ப்பால் தற்போது போஸ்டரில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஆ.ராசாவின் ஆதரவாளர்கள் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்துவருகிறார்கள்..

திரிகோண அரசியலில் சிக்கித் தவிக்கிறார்கள் பெரம்பலூர் தி.மு.கவினர்.

– பிரியதர்ஷன்

அங்குசம் இதழ் முழுமையாக படிக்க இந்த லிங்கை பயன்படுத்தவும்..

2024 அங்குசம் இதழ் ( Angusam E.book ) பிப்ரவரி 16 – 29

Leave A Reply

Your email address will not be published.