எங்கள் தொகுதி எங்களுக்கே ! புயலை கிளப்பிய அதிமுகவினர் !
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் தனித் தொகுதியாக துறையூர் சட்டமன்ற தொகுதி உள்ளது . முன்பு உப்பிலியபுரம் சட்டமன்ற தொகுதியாக இருந்த நிலையில் கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தலாக துறையூர் தொகுதியாக மாற்றம் செய்து தேர்தல் நடைபெற்றது. உப்பிலியபுரம் தொகுதியை துறையூர் தொகுதியாக தேர்தல் ஆணையம் அறிவித்து அதிலும் தனி தொகுதியாக அறிவித்து கடந்த மூன்று தேர்தல்களில் ஒருமுறை மட்டுமே அதிமுக இத்தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டு முறை தோல்வியை தழுவியது. இதனை முன்னெடுத்து துறையூர் சட்டமன்றத் தொகுதி அதிமுகவின் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள், தங்களது ஆதரவாளர்கள் சுமார் 300 பேருடன் கடந்த 27 ஆம் தேதி மாலை துறையூரிலிருந்து சுமார் 10 வேன்களில் சேலம் எடப்பாடிக்கு சென்று அங்கு அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி யாரிடம் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தும் வண்ணம் ஒரு கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

அதில் மாண்புமிகு புரட்சித் தமிழர் அவர்களின் பார்வைக்கு ,வணக்கம் உப்பிலியபுரம் தொகுதி அதிமுகவின் கோட்டை. கடந்த கால வரலாற்றைப் பார்த்தால் தொடர் வெற்றி பெறும் ஆண்டிப்பட்டி, ராசிபுரம் போன்ற தொகுதிகளின் வரிசையில் உப்பிலியாபுரம் தொகுதியும் ஒன்று. திமுக தலைவர் கருணாநிதியே ஒரு கூட்டத்தில் பேசும்போது உப்பிலியபுரம் திமுகவுக்கு ஒப்பில்லாதபுரம் என வருத்தப்படும் அளவிற்கு அதிமுகவின் கோட்டையாக துறையூர் தொகுதி இருந்தது என்பது நீங்கள் நன்கு அறிந்ததே . உப்பிலியபுரம் தொகுதியை துறையூர் தொகுதியாக அறிவித்து கடந்த மூன்று தேர்தல்களில் இரண்டு முறை தொடர் தோல்வியை தழுவியதற்கான காரணங்கள் என குறிப்பிட்டு
1.தொகுதிக்கு தொடர்பில்லாத தொகுதி மக்களின் அன்பை பெறாத, கழக தொண்டர்களிடம் அறிமுகம் இல்லாத வேட்பாளர்.
2.கழகத்திற்கு (துறையூர் தொகுதியில்)பணியில் ஒரு சிறிய துரும்பையும் கிள்ளி போடாத வேட்பாளர்.
3.தேர்தல் சீசனுக்கு மட்டுமே தொகுதிக்குள் வட்டமடித்து தேர்தல் முடிந்த பின் தொகுதியை கண்டுகொள்ளாதவர்களால் இந்த தோல்விக்கு காரணம்.
4.தொகுதிக்கு நன்கு அறிமுகமான தொகுதியின் மண்ணின் மைந்தருக்கு புதியவருக்கு வாய்ப்பளித்தால் தொண்டர்கள் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் உழைத்து மீண்டும் கழகம் வெற்றிக்கு உழைப்பார்கள் என்பன உள்ளிட்ட நான்கு கோரிக்கைகள் மற்றும், தொகுதியை சாராத ஒருவருக்கு வாய்ப்பளித்தால் மீண்டும் திமுகவிற்கே வெற்றி என திமுகவினர் கூறிவரும் நிலையில் இந்தத் தொகுதியில் தற்காலிக வீடு பிடித்து தேர்தல் வரை தங்கியிருக்கும் மாய வலையில் தலைமை சிக்காது. ஆழ்ந்து அறிந்து துறையூர் மண்ணின் மைந்தருக்கு வாய்ப்பளித்தால் இரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம் என்றும் , கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் கழகத் தொண்டர்கள் மற்றும் தொகுதி மக்களின் நிலை அறியாது , கழக தொண்டர்களின் ஆர்ப்பாட்டத்தையும் கண்டு கொள்ளாது , தலைமை அறிவித்த வேட்பாளரை விட , திமுக வேட்பாளர் துறையூர் சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில், திமுக இரண்டாம் முறை வெற்றி பெற்றது எனவும் , தொகுதி மாறி துறையூர் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் மாற்று தொகுதி சில வேட்பாளர்கள் இங்குள்ள வேட்பாளரை பற்றி கழக தலைமையிடம் உண்மைக்கு புறம்பான தகவல் மற்றும் அவதூறுகளை கூறுகிறார்கள். அண்ணன் எடப்பாடியார் தலைமையில் இயங்கும் நமது கழகத்தில் சாதியின வேறுபாடு பார்க்காமல் உண்மையாக நமது கழகத்திற்கு உழைப்பவருக்கு இந்த முறை சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு அளித்தாள் நீங்கள் அறிவிக்கும் வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார் என்பதையும் குறிப்பிட்டு துறையூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்துள்ளனா்.
அந்த கோரிக்கையில் குறிப்பிட்டு, சுமார் நான்கு பக்கம் உள்ள கோரிக்கை மனுவினை, கிருஷ்ணகிரிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்று விட்டு திரும்பிய எடப்பாடியாரிடம் அன்று இரவு 11:30 மணி அளவில் நேரில் சந்தித்து வழங்கியுள்ளனர். மனுவினை பெற்றுக் கொண்ட எடப்பாடியார் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனி குழுவினை அமைத்து ,ஆய்வு செய்து ,அதன் பிறகு தான் வேட்பாளரை அறிவிக்கும் பணி நடைபெறும் எனவும் ,அதுபோல துறையூர் சட்டமன்ற தொகுதிக்கும் தனியாக ஒரு குழுவினை அமைத்துள்ளதாகவும் ,அந்த குழுவினர் நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை வெளியான பின் உங்களது கோரிக்கைக்கு சாதகமாக முடிவு அறிவிக்கப்படும் என ஆறுதல் கூறி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார்.
தற்போதைய 2026 சட்டமன்ற தேர்தலில் துறையூர் தொகுதிக்கு மட்டும் சுமார் 40 பேருக்கும் மேலாக அதிமுகவில் சீட் கேட்டுள்ள நிலையில் அதில் பலர் வெளி மாவட்டங்களை சேர்ந்தவராக உள்ளதாலும்,அதில் ஒரு சிலர் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளதால் எப்படியும் தங்களுக்கு துறையூர் தொகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ள காரணத்தாலும், துறையூர் தொகுதியை சார்ந்தவர் அல்லாது வேறு வெளியூர் ஆட்களுக்கு கட்சி தலைமை சீட் கொடுத்து விடக்கூடாது என்ற நோக்கத்திலும், துறையூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிக்கு பாடுபடுவோம் என்பதை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் முன்னிறுத்தி, நேரில் சென்று அவரிடம் கோரிக்கை மனு அளித்து வந்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கட்சி நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்கள் சுமார் 300 பேருடன் சேலத்திற்கு சென்று எடப்பாடியாரை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்த செயல் துறையூர் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துறையூர் நகர செயலாளராக மாற்றுக் கட்சியில் உள்ள நபரை அறிவித்ததில் இருந்தே கடும் அதிருப்தியில் , அதிமுக-வின் மூத்த நிர்வாகிகள் பல அணிகளாக பிரிந்து செயல்படும் நிலையில், தற்போது தொகுதி வேட்பாளர் விஷயத்தில் கட்சித் தலைமை தீவிரமாக விசாரித்து , துறையூர் தொகுதியை சேர்ந்தவராகவும், கட்சிப் பணிகளில் அவரது பங்களிப்பு , மக்களிடம் நன்கு அறிமுகமும், அணுகுமுறையும் உள்ளவராக தேர்ந்தெடுத்து அறிவிக்கும் பட்சத்தில் மீண்டும் துறையூர் தொகுதியைத் தக்க வைக்க தீவிரமாக பாடுபடுவோம் என்ற நிலையில் மட்டுமே தாங்கள் உள்ளதாகவும் எடப்பாடியாரிடம் மனு கொடுத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். துறையூரிலிருந்து அதிமுக கட்சியின் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் தனியாக சென்று எடப்பாடியாரை சந்தித்த நிகழ்வு துறையூர் அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக அதிமுகவினரிடையே புயலைக் கிளப்பியுள்ளது.
— அங்குசம் செய்திக்குழு











Comments are closed, but trackbacks and pingbacks are open.