உள்ளே போனா ஒரே கொசுத் தொல்லை … வெளியே வந்தா குரங்குத் தொல்லை … துறையூர் அரசு மருத்துவமனையின் அவலம் !
திருச்சி மாவட்டம் துறையூரில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைக்கு சுற்று வட்டாரத்திலிருந்து அன்றாடம் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவமனைக்குள் நுழைவதற்கு முன்பாகவே, குரங்குகளின் தொல்லை தொடங்கிவிடுவதாக புலம்புகிறார்கள் நோயாளிகள்.
எந்த நேரத்தில் எதைப் பறித்து செல்லுமோ என்ற அச்சத்திலேயேதான் கைப்பை-களையும் குழந்தைகளையும் மிகவும் பாதுகாப்பாக கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறார்கள். உள்நோயாளிகளாக தங்கியிருப்பவர்களுக்கு இந்த தொல்லைகள் இன்னும் அதிகம் என்கிறார்கள்.
வைத்திருக்கும் உணவுப் பொருட்களைத் தூக்கிசென்றுவிடுவதோடு, ஒன்றுக்கொன்று தங்களுக்குள் அடித்துக்கொண்டு களேபரம் செய்துவிடுகின்றன என்கிறார்கள். அச்சத்தில் விரட்டினால் திரும்பத் தாக்குவதாகவும் கூறுகிறார்கள். குரங்குகளை விரட்டியடிக்கு முயன்ற மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட சிலரை குரங்கு கடித்த சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.
இதுஒருபுறமிருக்க, மருத்துவமனைக்குள் பெருகிக்கிடக்கும் கொசுக்களின் தொல்லை அதற்குமேல் என்கிறார்கள். ஒரு நோய்க்கு சிகிச்சை எடுக்க வந்து, கொசுக்கடியினால் இன்னொரு நோய்க்கும் ஆளாகிவிடுவோமா என்ற அச்சத்தில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
– ஜோஷ்.